Published : 13 Oct 2017 10:43 AM
Last Updated : 13 Oct 2017 10:43 AM
அ
ந்த இளைஞருக்கு அடிப்படையில் விளையாட்டு வீரராக ஆசை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை ‘மைம்’ கலைஞராக்கியது. இன்று ஒரு புறம் மைம் விழிப்புணர்வு நாடகங்கள், இன்னொரு புறம் சினிமா என பிஸியாகவும் பிரபலமான மைம் கலைஞராகவும் மாறிவிட்டார் அந்த இளைஞர். சென்னையைச் சேர்ந்த அவர் மதன்குமார்.
கைகொடுத்த ஆசான்
படித்துவிட்டு வேலைக்காக ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாறுவது இயல்பு. ஆனால், ஆசைப்பட்ட விளையாட்டுத் துறையை விட்டுவிட்டு நடிப்புத் துறைக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டால், சினிமாவில் வரும் கதையைப் போலச் சொல்கிறார் மதன்குமார்.
“படிப்பில் சுமார் ரகம் நான். விளையாட்டுதான் பிடித்த துறை. பள்ளிப் பருவத்தில் கூடைப்பந்தாட்டத்தில் பல கோப்பைகளை வென்றிருக்கிறேன். விளையாட்டில்தான் சாதிக்க முடியும் என்கிற அளவுக்கு விளையாட்டின் மீது ஆர்வம். ஆனால், இந்தத் துறையில் நடக்கும் அரசியலால் என்னால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை. எதிர்காலத்தை எண்ணிக் குழம்பிப்போயிருந்த வேளையில்தான் ‘மைம்’ கோபியின் அறிமுகம் கிடைத்தது.
அவர்தான் ‘மைம்’ கலைக்குள் நுழைய வழிகாட்டினார். சிறுவயதில் பள்ளி நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்பாவும் மேடை நாடகக் கலைஞர்தான். இதை மனதில் வைத்து நடிக்கலாம் என முடிவு செய்தேன். ‘மைம்’ கோபியின் ‘ஜி’ நடிப்புப் பள்ளியில் சேர்ந்து நடிப்பைக் கடந்த 8 ஆண்டுகளாகக் கற்றுவருகிறேன்” என்கிறார் மதன்குமார்.
வெட்கத்தை உடையுங்கள்
எல்லோருக்கும் நடிக்கலாம் என்கிற ஆசை இருக்கலாம். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் கூச்சமும் வெட்கமும் எட்டிப் பார்த்து, அந்த ஆசையை இல்லாமல் செய்துவிடும். தொடக்கத்தில் மைம் நடிப்பைக் கற்றபோது மதன்குமாருக்கும் பல மனத்தடைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், அதிலிருந்து அவர் விடுபடவும் செய்திருக்கிறார். “தொடக்கத்தில் நான் தவறாக நடித்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், சிரித்துவிடுவார்களோ என பயந்தேன். ஆனால், வெட்கத்தை உடையுங்கள், மானம், அவமானம், வெட்கம், தயக்கம் ஆகியவற்றை விட்டுவிடுங்கள் என்பதுதான் எங்களுக்குக் கற்றுத்தரப்படும். அதுதான் என்னை மீட்டெடுத்து மைம் கலைஞன் ஆக்கியது” என்கிறார் மதன்குமார்.
மதன்குமார் உள்ளிட்ட மைம் குழுவினர் தற்போது மும்பை, டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் ‘மைம்’ நாடகங்களில் நடித்துள்ளனர். தற்போது மதன் குமார் விவசாயிகளுக்காகவும், குழந்தைகளைப் பாதிக்கும் கைபேசி மற்றும் வீடியோ கேம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு நாடகங்களில் நடித்துவருகிறார்.
கடினமாக உழைத்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் மதன்குமார் தமிழ் சினிமாவிலும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். “நடிப்புதான் எனத் தீர்மானித்த பிறகு ஒவ்வொரு நாளும் உண்மையாக உழைத்தேன். அந்த உழைப்பின் பலனாக ‘வல்லினம்’ ‘நகர்வலம்’, ‘இனம்’, ‘மாரி’, ‘பைரவா’ உள்பட பல படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது” என்கிறார் மதன்குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT