Last Updated : 22 Sep, 2017 10:44 AM

 

Published : 22 Sep 2017 10:44 AM
Last Updated : 22 Sep 2017 10:44 AM

ஊர்க்கா ராக் ராகம்!

சினிமா பாடல்களை மேடையில் பாடுபவர்கள் ஒரு ரகம் என்றால், தங்களுடைய சொந்த இசையமைப்பை மேடை ஏற்றும் இசை குழுக்கள் தனி ரகம். அதிலும் ராகம், தாளம், பல்லவியில் உள்ள ராகத்தை ‘ராக்’காக மாற்றினால், அதிலும் தமிழ் ‘ராக்’காக மாற்றினால் எப்படியிருக்கும்? அதைத்தான் அசத்தலாகச் செய்கிறது ‘ஊர்க்கா’ இசைக் குழு.

ராகத்தை ‘ராக்’காக ஆக்கும்போது ‘ஊருக்காக’ என்கிற வார்த்தையை ‘ஊர்க்கா’வாக ஆக்கக்கூடாதா! நான்கு பேர் கொண்ட இந்தத் தமிழ் இசைக் குழு ‘ராக்’ இசையில் ஸ்பெஷலிஸ்ட்.

இசை என்றாலே இனிமை என்பதைப் புரட்டிப்போட்டு ஆர்ப்பாட்டமும் அலறலுமாக இசையைப் படைப்பது ‘ராக்’ இசையின் தனித்துவம். இந்தப் பாணியை ‘ஊர்க்கா’ இசைக் குழு, தி இந்து தமிழ் நாளிதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தைக் கொண்டாடும் ‘யாதும் தமிழே’ விழாவில் அமர்க்களமாக மேடையேற்றியது. காதல் உணர்வு முதல் சமூக நீதிக்கான கருத்துகள்வரை அத்தனையும் ஆக்ரோஷமான இசை வடிவில் பரிமாறப்பட்டன. ஆர்ப்பரிக்கும் கிடார்கள், தடதடவென வேகமாக அடித்துநொறுக்கும் டிரம்ஸ், அதிரும் கீபோர்டு, உச்சஸ்தாயி குரல்கள் என்கிற கலவையில் ‘கோவக்காரக் குயிலே’, ‘நான் யார்’, ‘பேராசை’ உள்ளிட்ட பத்துப் பாடல்கள் அரங்கத்தை அதிரவைத்தன.

‘ஊர்க்கா’வின் பாடகரும் கிடார் கலைஞருமான பின்னணிப் பாடகர் பிரதீப் குமாருடன் மேலும் மூன்று பேர் கொண்ட இந்த இசைக் குழுவில் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது கீபோர்டு கலைஞர்தான். கீபோர்டு இசைத்தபடியே அவர் உற்சாகமாக ஆடி, பாடியதைப் பார்த்தபோது அரங்கம் களைகட்டியது. ஒவ்வொரு பாடலையும் பாடி முடித்த பின்பு கேலியும் கிண்டலுமாகப் பார்வையாளர்களிடம் உரையாடிய விதம், அலட்டிக்கொள்ளாத உடல் மொழி, சாமானியரின் தமிழ் உச்சரிப்போடு கனீர் குரலில் பாடிய பாங்கு என அசத்தினார். ஆனால், தோற்றத்திலும் உடையிலும் ஹைடெக் இளைஞர்போல ஊகிக்க முடியாத கலவையால் அவர் கவனத்தை ஈர்த்தார்.

ஹார்ட் ராக் என்றும் ஹெவி மெட்டல் என்றும் ‘ராக்’ இசையை ஏன் அழைக்கிறார்கள் என்பது இவர்களுடைய ‘ஊரோரம் புளியமரம்’, ‘கலியுகந்தான்’ பாடல்களைக் கேட்டபோது புரிந்தது. அதிலும் லீட் கிடார் கலைஞர் ஒட்டுமொத்த மேடையையும் இந்தப் பாடல்களில் ஆட்டிப் படைத்தார். அதே நேரத்தில் ‘நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ளை பூவா’, ‘உன் கதி என்ன’ பாடல்களில் மெலடியும் இழையோடியது. ராக்கிலும் ராகம் உண்டு என ஊருக்கே காட்டியது, ‘ஊர்க்கா’ இசைக் குழு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x