Published : 08 Sep 2017 09:35 AM
Last Updated : 08 Sep 2017 09:35 AM
போ
ட்டோகிராஃபி சொசைட்டியின் உறுப்பினர்கள் 3 பேரின் ஒளிப்படங்கள் ஒவ்வொன்றும் கண்களுக்கு மட்டுமில்லாமல் காண்பவர்களின் கற்பனையையும் றெக்கை விரித்து பறக்க வைக்கின்றன. இந்த மூவரின் (ஜெ.ரமணன், கே.நரசிம்மன், வி.ஜெ.ரித்விக்) படைப்புகளை `கிரியேட்டிவ் விஷன்ஸ்’ என்னும் பெயரில் லலித் கலா அகாடமியில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.
ரமணனின் ஒளிப்படங்கள் அனைத்தும் சர்ரியலிசம் வகையைச் சேர்ந்தவை. பார்ப்பவர்களை மாய உலகத்துக்குள் சஞ்சரிக்க வைக்கின்றன. 2 இன்ச் அளவுக்கே உள்ள சிறிய கல்லின் தோற்றம் பாறை அளவுக்கு பெரிதாக்கப்பட்டு அந்தரத்தில் மிதக்கிறது. அதற்கு மேலாக ஒரு மனித உருவம். இந்த உலகத்தில் புவியீர்ப்பு விசையே இல்லாமல் போனால் எப்படி இருக்கும் எனும் கேள்விக்கு பதிலாய் இந்த ஒளிப்படம் விநோதமான கற்பனைக்கு சாட்சியாக உள்ளது. பிவிசி பைப்பின் ஒரு முனையில் லென்ஸைப் பதித்து அடுத்த முனையிலிருந்து கேமராவில் இவர் ‘க்ளிக்’ செய்திருக்கும் படத்துக்கு ஆத்மாவின் பயணம் என்னும் தலைப்பு கனகச்சிதம்!
‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்னும் பழிவாங்கும் போக்கில் உலகம் சென்றால் என்னாகும்? புகைப்பிடித்தல், மது, போர் போன்றவற்றால் நாளைய உலகத்தின் நிலை எப்படி இருக்கும்? இயற்கையை அதன் போக்கில் விடாமல், மனிதர்கள் அதன் வழியில் தலையிட்டால், கல்கி வருவார் பின்னே; ஊழி வரும் முன்னே என்பதை முத்தாய்ப்பாக அறிவிக்கின்றன ரமணனின் ஒளிப்படங்கள்.
நமது கற்பனைக்கு எட்டாத நிறங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் இயற்கையின் கோலங்களை தரிசனப்படுத்துகின்றன ரித்விக்கின் ஒளிப்படங்கள். சில நேரங்களில் சில நிலங்களின் தன்மை, வண்ணம், திண்மை என பன்முகங்களில் நிலங்களின் செழிப்பு ரித்விக்கின் கேமராவின் வழியே நம் கண்களில் விரிகின்றன.
மலை, வனம், நிலம், வான், கடல் என பலவற்றின் துணை கொண்டு காலத்தை கணிக்கும் ஓர் அசாதாரண காட்சி அனுபவத்தை நரசிம்மனின் ஒளிப்படங்கள் நமக்கு அளிக்கின்றன. `கிரியேட்டிவ் விஷன்ஸ்’ எனப்படும் இந்த ஒளிப்படக் கண்காட்சி செப்டம்பர் 10 வரை லலித் கலா அகாடமியில் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT