Last Updated : 15 Sep, 2017 10:38 AM

 

Published : 15 Sep 2017 10:38 AM
Last Updated : 15 Sep 2017 10:38 AM

ஹாஷ்டேக் பிறந்த கதை!

இணைய வளர்ச்சிக்காகப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் கிறிஸ் மெசினா, ஸ்டோவ் பாய்ட் ஆகியோரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஹாஷ்டேகை உருவாக்கி வாழ்த்துச்சொன்னால் அவர்கள் உள்ளம் பூரிக்கும். ஏனெனில், இணைய உலகில் ஹாஷ்டேக் பிரபலமானதில் இருவருக்கும் பங்கு இருக்கிறது. ஒருவர் அதை உருவாக்கியவர். இன்னொருவர் அதை வழிமொழிந்து ஆதரித்தவர்.

ஹாஷ்டேக் என்றதும் # எனும் குறியீட்டுடன் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிரப்படும் பதங்கள் நினைவுக்கு வரும். நீங்களேகூட இத்தகைய பதங்களை உருவாக்கிப் பகிர்ந்திருக்கலாம். # என்ற முன்குறிப்புடன் அமையும் பதங்களே ஹாஷ்டேக். சமூக ஊடக மொழியின் பிரதான குறுக்கெழுத்து என இதைச் சொல்லலாம். இணைய இயக்கங்களையும் போராட்டங்களையும் ஒருங்கிணைக்க உதவும் ஆன்லைன் ஆயுதம்.

ஹாஷ்டேக் ஏன்?

ஒரு கணக்குப்படி குறும்பதிவு சேவையான ட்விட்டரில் மட்டும் தினந்தோறும் 12.5 கோடி ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டுப் பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்படுபவை தனிக்கணக்கு.

ஹாஷ்டேக் அதிகம் பயன்படுத்த என்ன காரணம்? குறும்பதிவுக் கடலில் தங்கள் நோக்கத்துக்கும் தேவைக்கும் பொருத்தமான குறும்பதிவுகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டி. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை ஒருங்கிணைப்பதற்கான குறியீடாக அமைவதன் மூலம் ஹாஷ்டேக் இதைச் சாத்தியமாக்குகிறது. அது மட்டுமல்ல, குறும்பதிவுகள் சார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்கான வழிகாட்டியாகவும் ஹாஷ்டேக் அமைகிறது.

ஹாஷ்டேக் மட்டும் உருவாக்கப்படவில்லையெனில் ட்விட்டர் சேவை பயனுள்ளதாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ட்விட்டர் உருவாக்கப்பட்டபோதே, அதில் குறும்பதிவுகளை வெளியிடுவது, நண்பர்களைப் பின் தொடர்வது போன்ற அம்சங்கள் இருந்தன. ஆனால், தொடர்ச்சியாக வெளியான குறும்பதிவுகளில் பொருத்தமானவற்றைப் பிரித்தறிவதற்கான வழி இல்லாமல் இருந்தது.

ஆனால், ஹாஷ்டேகின் அறிமுகம் இந்தக் குழப்பத்தைத் தீர்த்தது. # எனும் அடையாளத்துடன் குறிப்பிட்ட மையக்கருத்தைச் சுட்டிக்காட்டும் குறிச்சொல்லைச் சேர்ப்பதன் மூலம் தொடர்புடைய குறும்பதிவுகளை எல்லாம் அந்தக் குறிச்சொல்லின் கீழ் அடையாளம் காணலாம். உதாரணத்துக்கு இந்தியா கிரிக்கெட்டில் பெரிய அளவில் வெற்றி பெறும்போது, # இந்திய கிரிக்கெட் எனும் குறியீட்டை உருவாக்கிக் குறும்பதிவுகளைப் பகிர்ந்துகொண்டால், இந்திய கிரிக்கெட் வெற்றி தொடர்பாக வெளியாகும் குறும்பதிவுகள் அனைத்தையும் இதன் கீழ் படித்துவிடலாம். இது ஒரு விவாதச் சரடாகவும் தொடரும். இந்தக் குறியீட்டை கிளிக் செய்தால் போதும், தொடர்புடைய குறும்பதிவுகளை வரிசையாகக் காணலாம்.

ஒருங்கிணைக்கும் ஆயுதம்

இந்த வசதிதான் ட்விட்டரில் தொடர்ந்து கைகொடுக்கிறது. சமூக ஊடகப் பயன்பாட்டால் வளைகுடா நாடுகளில் 2010-ம் ஆண்டில் வெடித்த ‘அரபு வசந்தம்’ புரட்சியின்போது போராட்டக்கார்கள் கருத்துகளை ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் ஆயுதம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ எனும் ஹாஷ்டேக் சமத்துவத்துக்காகவும் மனிதநேயத்துக்காகவும் குரல் கொடுக்கப் பயன்பட்டது. பேரிடர் காலங்களில் உதவிகளையும் நிவாரணப் பணிகளையும் பயனுள்ள உயிர்காக்கும் தகவல்களையும் ஒருங்கிணைக்க ஹாஷ்டேக் கைகொடுக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியபோது, #சென்னை ரெய்ன்ஸ், #சென்னை ஃபிளட்ஸ் போன்ற ஹாஷ்டேக்குகள் உதவிகளை ஒருங்கிணைக்க உதவின. மெரினாவில் தைப்புரட்சி அமைதியாக மலர்ந்து வெற்றிபெற்றதிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஹாஷ்டேக் முக்கியப் பங்கு வகித்தது. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களை முன்னிறுத்துவதிலும் ரசிகர்களது ஹாஷ்டேக் ஆராதனைகள் தொடர்கின்றன.

எப்படி வந்தது?

ட்விட்டரில் அறிமுகமாகி, பின்னர் ஃபேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களிலும் பிரபலமான ஹாஷ்டேக், இன்று மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்யும் இணையக் கூறுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்தப் பெருமையெல்லாம் ஒருவிதத்தில் கிறிஸ் மெசினாவையே சேரும். அவர்தான், 2007-ம் ஆண்டில் முதல் முதலாக # குறியீட்டின் பயன்பாட்டை முன்வைத்தார். அப்போது அவர் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற ‘சவுத் பை சவுத்வெஸ்’ எனும் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொண்டார். மாநாடு தொடர்பான குறும்பதிவுகளை அவரும் நண்பர்களும் ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டனார். ஆனால், அந்த மாநாட்டில் ஆர்வம் இல்லாத மற்ற நண்பர்கள் இதை ரசிக்கவில்லை.

அப்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெசினா இது பற்றி யோசித்துப் பார்த்தார். ட்விட்டரில் எல்லாக் குறும்பதிவுகளையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல், ஒருவர் தனக்குத் தேவையானதை மட்டும் பார்ப்பதற்கான வழி என்ன எனும் கேள்வியோடு நண்பர்களோடு இணைந்து ஆராய்ந்தார். ட்விட்டரில் விவாதக் குழுக்களை அமைக்கலாம் எனும் யோசனை உண்டானது. ஆனால், அது சிக்கலாக இருக்கும் என நினைத்தார். மிக எளிதான ஒரு வழி அவருக்குத் தேவைப்பட்டது. இதனிடையேதான், இணைய அரட்டை அறைகளில் விவாதங்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் பவுண்டு (#) குறியீடு இதற்குப் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது. உடனே இந்தத் தகவலைக் குறும்பதிவாகப் பகிர்ந்துகொண்டார்.

இதுதொடர்பாக விரிவான விளக்கப்பதிவு ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சில நாட்கள் கழித்து ஸ்டோவ் பாய்ட் எனும் தொழில்நுட்ப வல்லுநர், இந்தக் கருத்தை ஆதரித்து ஒரு பதிவை வெளியிட்டார். ஹாஷ்டேக் எனும் பதத்தை அதில் அவர் முதல் முறையாகப் பயன்படுத்தியிருந்தார். இதன் பிறகு மெல்ல இந்தக் குறியீடு பயன்பாட்டுக்கு வந்தது. பயனாளிகள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கிய பிறகு ட்விட்டரும் இதற்கு அதிகாரபூர்வமாக ஆதரவு அளிக்கவே சமூக ஊடகப் பதிவுகள் ஹாஷ்டேக் மயமாகத் தொடங்கின.

இந்தக் குறியீட்டுக்கான அடிப்படை எண்ணத்தை முன்வைத்த மெசினா இப்போது, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நண்பராகச் செயல்பட்டுவருகிறார். ஓபன் சோர்ஸ் சமூகத்தின் ஆதரவாளராக இருக்கும் மெசினா, ‘ஹாஷ்டேக் எண்ணத்தை ஒரு போதும் காப்புரிமை பெறவோ அதிலிருந்து லாபம் பெறவோ நினைக்கவில்லை. இணைய சமூகத்துக்கான எனது பரிசாக இதைக் கருதுகிறேன்’ ஹாஷ்டேக் அறிமுகமாகி பத்தாண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதை இப்படி அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

தளம் புதிது

ரோபோ

முதலாளிகள் பராக்...

செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தலாம் எனும் கருத்து வலுவாக முன்வைக்கப்படுகிறது. இப்போதுகூட பல துறைகளில் ரோபோக்களின் ஆதிக்கத்தை உணரலாம். ரோபோ பெருக்கத்தால் மனிதர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகலாம் எனும் அச்சமும் வலுப்பெற்று வருகிறது.

இந்த அச்சமும் கவலையும் உங்களுக்கு இருந்தால், வருங்காலத்தில் ரோபோ மேலதிகாரியின் கீழ் பணியாற்றும் நிலை வருமா என்பதை சோதித்துப் பார்க்கலாம். ‘வில் ஏ ரோபோ பி மை பாஸ்’ எனும் இணையதளம் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறது.

இந்தத் தளத்தில் ஒருவர் தான் பணியாற்றும் துறையைக் குறிப்பிட்டால், அந்தத் துறையில் ரோபோக்களின் ஆதிக்கம், ரோபோ சி.இ.ஓ. வரும் வாய்ப்பு தொடர்பான தகவல் அளிக்கப்படுகிறது. பல்வேறு துறைகள் தொடர்பான கணிப்பைத் தெரிந்துகொள்ளலாம்.

உத்தேசமான கணிப்புதான் என்றாலும் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வைப்பதாக இது இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆர்டர் கியுலியன் என்பவர் இந்த இணையதளத்தை அமைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றையும் இவர் எழுதியிருக்கிறார்.

இணையதள முகவரி:

http://www.willrobotbemyboss.com/

செயலி புதிது

ஒளிப்படங்களை மேம்படுத்தும் செயலி

ஒளிப்படங்களை எடுக்க உதவும் செயலிகளைப் போலவே, ஒளிப்படங்களைத் திருத்தி மேம்படுத்த உதவும் செயலிகளும் அவசியம். இந்த வகையில், சிறந்த செயலிகளில் ஒன்றாக ஸ்னேன்சீட் செயலி தொழில்நுட்ப வலைத்தளங்களால் வர்ணிக்கப்படுகிறது.

ஒளிப்படங்களைச் சீராக்க இந்தச் செயலியில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. 29 வகையான டூல்கள் மற்றும் ஃபில்டர்கள் இருக்கின்றன. ஒளிப்படங்களை கிராஃப் செய்வது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளலாம். 90 டிகிரி கோணத்தில் மாற்றி அமைக்கலாம்.

தேவையில்லாத பகுதிகள் அல்லது இடையூறுகளையும் எளிதாக நீக்கலாம். முக்கியமாகப் பழைய மாற்றங்களைத் திரும்பிப் பார்த்து மீட்கும் வசதியும் இருக்கிறது. கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு, ஐபோனில் செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: https://support.google.com/snapseed#topic=6155507

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x