Published : 08 Sep 2017 09:38 AM
Last Updated : 08 Sep 2017 09:38 AM
ஒரு மானை நரிகள் துரத்துகின்றன. தப்பியோடும் மானை நரிகளிடமிருந்து காப்பாற்றுகிறது ஒரு புலி. ஆனால், அதேநேரம் வேட்டைக்காரன் ஒருவனது அம்பு அந்தப் புலியைக் கொன்றுவிட, இப்போது நரிகள் மானை வேட்டையாடுகின்றன. எது உங்களையும் புலியையும் இணைத்ததோ (நரிகள்), அதுவே இப்போது உங்களை தின்றுவிடுகிறது. இதுதான் வாழ்க்கை. நீங்கள் எதிர்பார்க்காத இடத்திலிருந்து, நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும். அதைப்போலவே நீங்கள் எதிர்பார்க்காத கோணத்திலிருந்து உங்களுக்கான ஆபத்தும் வந்துசேரும்.
இதைச் சொல்வது யாரோ ஒரு தத்துவ ஞானி என்று நினைத்தால், அது தவறு. கிருஷ்ணரின் கதையில் வரும் முக்கிய வில்லன் கம்சன்தான் இந்தத் தத்துவத்தை விளக்குகிறார். அது மட்டுமல்ல, அந்தப் புலியை வேட்டையாடி, அதைப் பதப்படுத்தி தனது அறையில் அலங்காரப் பொருளாக வைத்துக்கொள்கிறார். கம்சனை இப்படித்தான் நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் கதாசிரியர் அபிஷேக்.
இதுவரையில் கிருஷ்ணரை பல வடிவங்களில் நாம் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், காலண்டர் ஓவியங்களில், காமிக்ஸ், கிராஃபிக் நாவல்களில் என்று பலவிதமான தோற்றங்களில் அவரை ரசித்திருக்கிறோம். ஆனால், மீசை வைத்த கிருஷ்ணரை எங்காவது பார்த்திருக்கிறோமா? அதுவும் அழகான தாடியுடன்? இதில்தான் அபிஷேக் சிங்கின் கிராஃபிக் நாவல், மற்ற படைப்புகளிலிருந்து வேறுபடுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையை நான்கு பருவங்களாகப் பிரித்துக்கொண்டு, அதிலிருக்கும் தத்துவங்களை விரிவாகப் பேசுகிறார் அபிஷேக். ஆக, கிருஷ்ணர் இங்கே ஒரு தத்துவ ஞானி மட்டுமே. தாடியில்லாமல் ஒரு தத்துவ ஞானியை கற்பனை செய்ய முடியுமா?
மனித வாழ்வின் தத்துவங்கள்
கிருஷ்ணரின் கதையை நான்கு பருவங்களாகப் பிரித்து, அதில் நடைபெறும் சம்பவங்களை வைத்து மனித வாழ்வின் நான்கு தத்துவங்களை விளக்க முயல்கிறார் அபிஷேக். குழந்தைப் பருவம் தொடர்பான கதையில் நமது சிறுவயது அறியாமையை, கள்ளமில்லாத குணத்தை முன்வைக்கிறார். இந்தப் பருவத்தில்தான் இயற்கையுடனான நமது தொடர்பை நாம் அறிந்துகொள்கிறோம். இரண்டாவது பருவத்தில், கம்சனின் கதை மூலம் பேராசையைப் பற்றியும் அதன் விளைவுகளையும் தெரிந்துகொள்கிறோம்.
மூன்றாவது பருவத்தில், அன்பையும் காதலையும் சொல்வதுடன் அதற்கான தேவையையும் அதன் இன்றியமையாத தன்மையையும் இதயத்தின் தேடலையும் விளக்குகிறார் அபிஷேக். இறுதியாக, இந்தப் புத்தகத்தின் மிகச் சிறந்த பகுதியாக வருவது யுத்த பருவம். இதில், தன்னைத்தானே அழித்துக்கொள்வதில் நாட்டமுடைய மனிதர்களின் இயல்பு முதற்கொண்டு, நம்பிக்கை, இழப்பு, இருத்தலுக்கான காரணத்தைத் தேடும் நிலை, நிலையற்று மாறும் இயல்புடைய வாழ்க்கையை உணரும் நிலை, வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையேயான தொடர்பை உணர்வது என்று பல விஷயங்களை மிகவும் இயல்பாக சொல்லியிருக்கிறார்.
ஓவியங்களின் உன்னதம்
வெக்டார் ஸ்டைல் அல்லது கட் கலர் பேட்டர்ன் எனப்படும் பாணியில், ஒரு சமகால மேதையாக அபிஷேக் சிங் திகழ்கிறார். இவரது ஓவியங்களை ஓவியக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம். 200 பக்கங்களைக் கொண்ட இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பம்சமே வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட ஓவியங்களும் பக்க அமைப்புகளும்தான்.
ஒரு ஓவியரே கதாசிரியராக இருப்பதன் வசதியை இக்கதையில் காணலாம். இங்கே ஓவியங்கள்தான் (பேனல்கள் / கட்டங்கள்) கதையை முன்னெடுத்து செல்ல உதவுகின்றன. ஓவியங்களின் அளவைப் பொருத்து, பக்கங்கள் மாறிமாறிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியமும் தனித்து நிற்கும் கவிதை.
இந்தியாவின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவராக அபிஷேக் கருதப்படுகிறார் என்றால், அதற்கு முக்கியக் காரணம் அவரது வண்ணத் தேர்வுதான். அபிஷேக்கின் ஓவியங்களில் குறைகள் எதுவுமின்றி இருப்பதும் அவரது வண்ணத் தேர்வும் இந்த கிராஃபிக் நாவலை உலக அளவில் நிறுத்துகிறது.
பழமையில் புதுமை
வழக்கமாக நமது இதிகாசங்களை காமிக்ஸ் ஆக மாற்றும்போது, ஒரே விதமான பாணியே பின்பற்றப்பட்டுவருகிறது. அதை மாற்றுவதும் எளிதல்ல. விநாயகர் என்றால், யானைமுகத்தானாகத்தானே வரைய முடியும். ஆனால், அவரது தோற்ற அமைப்பை சிறிது மாற்றி, ஒரு புதுமையைச் செய்யலாம். இந்த கிராஃபிக் நாவலில், சிறு வயது கிருஷ்ணரை சமகால கார்ட்டூன் பாணியில் இவர் வரைந்திருப்பது கொள்ளை அழகு.
அதேபோலத்தான் மற்ற முக்கிய கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அபிஷேக் சிங்கின் பெண்ணியம் சார்ந்த பார்வையைக், கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கும் விதத்திலேயே தெரிந்துகொள்ளலாம். ருக்மினி, காந்தாரி, சுபத்ரா கதாபாத்திரங்களை தன் பார்வையில் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சிறந்த படைப்பாளி தோன்றி, அவரது துறையைத் தோளில் சுமந்துகொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்வார். அப்படியாக, நமது தலைமுறையின் மிகச் சிறந்த கலைஞன் அபிஷேக் சிங்.
அபிஷேக் சிங் - கதாசிரியர் & ஓவியர்
மத்தியப் பிரதேசத்தில் பிறந்து, டெல்லி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் அனிமேஷன் கற்றவர் அபிஷேக்.
35 வயதான இவரது காமிக்ஸ், கிராஃபிக் நாவல்கள் உலக அளவில் ஐந்து லட்சம் பிரதிகளுக்குமேல் விற்றுள்ளன. அமெரிக்க காமிக்ஸ் ஒன்றுக்குக் கதை எழுதி, ஓவியம் வரைந்த முதல் இந்தியர் இவர்தான். அதைப்போலவே, இவரது சிந்தனையில் இதிகாச கதாபாத்திரங்களைப் புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் ஓவியங்கள் உலகப் புகழ்பெற்ற பல காட்சியங்களில் இடம்பெற்றுள்ளன.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளியான தீபக் சோப்ராவுடன் இணைந்து வெர்சுவல் ரியாலிட்டி வீடியோவை இவர் இயக்கி இருக்கிறார். இந்தியாவின் சிறந்த சமகால ஓவியர்களில் ஒருவரான இவரது படைப்புகளில் தத்துவங்களை முன்னிறுத்துவதே முக்கியமாக இருக்கிறது. கதையைவிட அது சொல்லப்படும் விதமும் அது சொல்ல வரும் தத்துவமுமே முக்கியம் என்கிறார் அபிஷேக்.
தலைப்பு: கிருஷ்ணா (Krishna – A Journey Within)
கதாசிரியர் & ஓவியர்: அபிஷேக் சிங்
வெளியீடு: 2012
அமைப்பு: முழு வண்ணத்தில் 200 பக்கங்கள்
பதிப்பாளர்: இமேஜ் காமிக்ஸ், அமெரிக்கா
கதைக்கரு: கிராஃபிக் நாவல் வடிவில் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT