Last Updated : 21 Apr, 2017 10:21 AM

 

Published : 21 Apr 2017 10:21 AM
Last Updated : 21 Apr 2017 10:21 AM

காமிக்ஸ் தில்லுமுல்லுகள் 03 - நீரோவை ஜீரோ ஆக்கலாமா?

நீதிபதி குருசாமி: “அமைதி! அமைதி! அமைதி!. இப்போது சிவகாசி காமிக்ஸுக்கு எதிராக தமிழ் காமிக்ஸ் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சிவகாசி சிங்கமுத்து சார்பாக பாரிஸ்டர் ரஜினிகாந்தும், தமிழ் காமிக்ஸ் சார்பாக வக்கீல் கண்ணனும் வாதாடுவார்கள். வாதம் தொடங்கட்டும்”.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: “கனம் கோர்ட்டார் அவர்களே, இதெல்லாம் ஒரு வழக்கா என்று கேட்கிறேன். தமிழில் பல ஆண்டுகளாக காமிக்ஸ் கதைகளை வெளியிட்டுவருபவர் எனது கட்சிக்காரர். சொல்லப்போனால், தமிழ் காமிக்ஸின் மும்மூர்த்திகளான இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ் டேவிட் மற்றும் ஜானி நீரோவைப் பற்றித் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இருக்க முடியாது என்னும் அளவுக்கு காமிக்ஸை கொண்டு சென்றவர் எனது கட்சிக்காரர்”.

கண்ணன்:: “நீங்கள் சொன்ன மும்மூர்த்திகளில் ஒருவரான ஜானி நீரோ கதாபாத்திரத்தை வைத்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காமிக்ஸில் ‘விளையாடி’ இருக்கிறார்கள், அது தெரியுமா?”.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: “நேரத்தை வீணடிக்காமல், விஷயத்துக்கு வரவும்”.

கண்ணன்:: “ஜானி நீரோவின் ஒரிஜினல் கதைகளின் ஸ்டாக் தீர்ந்துவிட்டதால், தன்னுடைய காமிக்ஸ் விற்பனை மந்தமடைவதை உணர்ந்த உமது கட்சிக்காரர், போலியாக சில பல ஜானி நீரோ கதைகளை, அவரே ‘தயாரித்தார்’.

நெதர்லாந்து நாட்டில் இருந்து வெளியாகும் எப்போ காமிக்ஸ் (ஓபரான் பப்ளிகேஷன்ஸ்) நிறுவனம் 1975 முதல் இயங்கி வருகிறது. அவர்களது ’டெ பார்ட்னர்ஸ்’ என்ற காமிக்ஸ் தொடரின் ஒரு கதையை எடுத்து, அதில் இருக்கும் ஓவியங்களில் ஒட்டி, வெட்டி அதை ஜானி நீரோவின் ‘புத்தம் புதிய சாகசம்’ என்று மக்களுக்கு ‘தொப்பி’ போட்டுவிட்டார்கள்.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: “இதிலென்ன குற்றம் கண்டீர்? மக்களுக்காக இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டார். அவ்வளவுதானே? இதில் சட்டப்படி என்ன தவறு இருக்கிறது?”.

கண்ணன்:: “ஜானி நீரோவின் கதைகளைத் தயாரித்தது ஐ.பி.சி. மீடியா / ஃபிளீட்வே பப்ளிகேஷன்ஸ், லண்டன் என்ற நிறுவனம். இப்போது அதன் காப்பிரைட் உரிமையை வைத்திருப்பது டைம் வார்னர் நிறுவனமும், அதன் அங்கமான டிசி காமிக்ஸ் நிறுவனமுமே. அதைப் போலவே டெ பார்ட்னர்ஸ் என்ற கதைத் தொடருக்குக் காப்புரிமை பெற்று இன்றளவும் செயல்பட்டு வருவது நெதர்லாந்தைச் சேர்ந்த எப்போ காமிக்ஸ் (ஓபரான் பப்ளிகேஷன்ஸ்) நிறுவனம்.

இப்படி ஒரு நிறுவனத்தின் கதாபாத்திரத்தை, வேறு நிறுவனத்தின் பிரபல ஹீரோவாக பெயர் மாற்றம் செய்வது The Copyright (Amendment) Act 2012, No 27 of 2012 என்று புதிதாகத் திருத்தப்பட்ட சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம், யுவர் ஆனர்”.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: “இதற்கு என்ன ஆதாராம்?”.

கண்ணன்:: “ஜானி நீரோவின் புத்தம் புதிய சாகசம் என்று வெளியிடப்பட்ட காமிக்ஸ் புத்தகத்தை சமர்ப்பித்திருக்கிறேன், யுவர் ஆனர். அத்துடன் ஆசிரியர் உரையில் இது பெண் விடுதலை காலகட்டம் என்பதால், கதையில் ஜானி நீரோவின் செகரட்டரி ஸ்டெல்லாவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று நினைத்ததை எல்லாம் அடித்துவிட்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு, புதிய ஓவியர் என்பதால், தமிழ்க் கதையில் தோற்றம் மாறுபடும் என்று சமாளிப்பு வேறு.

அதே வெளிநாட்டு நிறுவனம் வெளியிட்ட ஏஜெண்ட் 327 என்ற கதையையும்கூட தமிழில் இவர்களே வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் உரிமைகள் சரியாக வாங்கப்பட்டு இருப்பதால், அதைப் பற்றியெல்லாம் இங்கே நாம் பேசவில்லை. பிரச்சினை மேலே குறிப்பிட்ட காமிக்ஸ் பற்றி மட்டும்தான் என்பதை விளக்க விரும்புகிறேன்.

பாரிஸ்டர் ரஜினிகாந்த்: “கண்ணா?”.

கண்ணன்:: “நான் எங்க போவேன், மாமா? நேக்கு யாரைத் தெரியும்? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் காப்பிரைட் சட்டம் மட்டும்தானே, மாமா”.

நீதிபதி குருசாமி: “ஆர்டர், ஆர்டர். இந்த உறவுமுறையெல்லாம் கோர்ட்டுக்கு வெளியில் இருக்கட்டும். இப்போதைக்கு கோர்ட் இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்படுகிறது”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x