Published : 25 Jul 2014 01:21 PM
Last Updated : 25 Jul 2014 01:21 PM
மனித நாகரிகத்தில் உடைக்கு முக்கிய இடம் உண்டு. அணிந்திருக்கும் ஆடைகளைப் பொறுத்துத்தான் ஒருவர் மதிப்பிடப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆடைகளைத் தேர்வு செய்து அணிவதிலும் ஓர் உளவியல் இருக்கத்தான் செய்கிறது.
ஆண்களுக்கு என ஒதுக்கப் பட்டிருந்த சட்டையை, பெண்களும் அணிய ஆரம்பித்ததில் தொடங்கியது பாலின ஒற்றுமைக்கான முதல் படி. அந்தச் சட்டை வடிவமைப்பின் உச்சமாக இன்று இருப்பது டி ஷர்ட். டி ஷர்ட் அணிந்துகொள்வதில் பல வசதிகள் இருக்கின்றன. முக்கியமாக இஸ்திரி போடத் தேவையில்லை. டி ஷர்ட் அணிந்து கொண்டு கல்லூரிக்கும் செல்லலாம், கல்யாணத்துக்கும் செல்லலாம்.
தம்பியின் டி ஷர்ட்டை அண்ணன்கள் அணிந்துகொண்டு வயதைக் குறைத்துக் காட்டலாம். மிகவும் ஆடம்பரமாக இல்லாமல், அதே சமயம் மிக எளிமையாகவும் இல்லாமல், கிராம நகர வித்தியாசங்களை எடுத்துக்காட்டாத ஒரே உடையாக டி ஷர்ட் வலம் வருகிறது.
அப்படியான டி ஷர்ட், அரசியல் தலைவர் ஒருவரின் பேச்சால் அவமானத்துக்குள்ளாகியது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த டி ஷர்ட்டை அணிந்து வரக்கூடாதென்று சமீபகாலமாக கல்லூரிகளும் தடை விதிக்கின்றன. டி ஷர்ட்களில் விதவிதமான வரிகள், வார்த்தைகள் தாங்கி வருவது இன்றைய ‘வாட்ஸ் அப்’ இளைஞர்களின் காலத்திலும் தொடர்கிறது.
சீண்டும் வார்த்தைகள்?
இந்த வகை டி ஷர்ட்களில் ஆபாசமான, மற்றவர்களைச் சீண்டிப் பார்க்கிற வாக்கியங்களும் இடம் பிடித்திருக்கின்றன. பாலியல் வார்த்தைகள் அச்சடித்த டி ஷர்ட் அணிந்த பெண்ணிடம் கதாநாயகன் தகராறு செய்வது போன்ற காட்சியை இயக்குநர் ராம் ‘கற்றது தமிழ்’ படத்தில் வைத்திருந்தார். அதை வெறும் திரைப்படக் காட்சிதானே என்று அதைக் கடந்து சென்றுவிட முடியாது அல்லவா?
இதுபோன்ற வாக்கியங்கள் கொண்ட டி ஷர்ட்டை இளைஞர்கள் விரும்பி அணிவதற்குப் பின்னாலுள்ள உளவியல் எது?
வாக்கியங்கள் தாங்கிய டி ஷர்ட் களைத் தனது சுசீலா கதாபாத்திரம் மூலம் 80களில் இளைஞர்களிடையே பிரபலப்படுத்தியதில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆகவே, முதலில் அவரிடமிருந்தே ஆரம்பித்தோம்.
இந்த வகை டி ஷர்ட்களை அறிமுகப்படுத்தியது அவரல்ல என்றும் அவருக்கு முன்னர் ஓவியர் ஜெயராஜ் தன் ஓவியங்கள் மூலமாக அதை அறிமுகப்படுத்தியிருந்தார் என்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்தார். கதாபாத்திரத்துக்குத் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தவும், அதை நோக்கிக் கவனத்தைத் திசை திருப்பவும், அந்தப் பெண் குறும்புக்காரி என்று காட்டவுமே இந்த உத்தியைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
“சிலர் தங்கள் பேச்சு, உடல் மொழி, திறமை ஆகியவற்றின் மூலம் எப்படித் தங்களைத் தனித்துவப்படுத்திக் காட்ட முயல்கிறார்களோ அப்படித்தான் இந்த வகை டி ஷர்ட்களை அணிவதன் மூலமாகத் தங்களைத் தனித்துவப்படுத்த நினைக்கிறார்கள் இளைஞர்கள்”
பெயர் வெளியிட விரும்பாத கல்லூரி மாணவி ஒருவர், “இது ஒருவகையில் எதிர் பாலினரைக் கவரும் முயற்சிதான். ஆபாசமாக இல்லாதவரை இந்த வகை டி ஷர்ட்களை அணிவதில் தவறு இல்லை” என்றார் அவர்.
தமிழ் வரிகள்
நல்ல தமிழ் வாக்கியங்களைக் கொண்டு டி ஷர்ட்களைத் தயாரித்து வருகிறது சென்னையைச் சேர்ந்த ‘தமிழ் டி ஷர்ட்’ நிறுவனம். அந்நிறுவனத்தைச் சேர்ந்த கோபிநாத் கூறும்போது, தங்களின் கருத்துகளை வாய்விட்டுச் சொல்லவோ, செயல்கள் மூலம் வெளிப்படுத்தவோ முடியாதவர்கள்தான் இத்தகைய டி ஷர்ட்களை அணிவதாகக் குறிப்பிட்டார்.
உளவியல் நிபுணர் செந்தில் வேலனிடம் கேட்டபோது, “முன்னோர்கள் எதையெல்லாம் கண்ணியம், ஒழுக்கம் என்று கருதினார்களோ அதையெல்லாம் மீறுவதன் மூலம் கேள்விக்கு உட்படுத்துவதாகவே இளைஞர்கள் நினைக்கிறார்கள். நாளையே வேறு ஒரு ‘ட்ரெண்ட்’, ‘ஃபேஷன்’ வந்துவிட்டால் இளைஞர்கள் அதற்குத் தாவிவிடுவார்கள். மற்றபடி இது பெரிய பிரச்சினை என்பதெல்லாம் இல்லை!” என்கிறார்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சேவியர் எழுதிய கவிதை வரிதான் ஞாபகத்துக்கு வருகிறது... ‘அகத்தின் அழகு இனிமேல் சட்டையில் தெரியுமோ?’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT