Published : 16 Dec 2016 12:20 PM
Last Updated : 16 Dec 2016 12:20 PM
பரபரப்பான தைப்பே நகரின் எல்லையைக் கடந்ததும் சில்லென்ற சாரலோடு வரவேற்றது தைவானின் நயாகரா என்று அழைக்கப்படும் ஷைஃபன் அருவி. காட்டாறு போல ஓடி வந்து மலை உச்சியிலிருந்து ஷைஃபன் விழுவதைப் பார்க்க ஏதுவாக எதிரில் உள்ள மலையில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த மலைக் காட்டுக்குள் கட்டப்பட்டிருக்கும் செம்மண் நிற மரப் படிக்கட்டுகளில் ஏறியபடியே பால்போல வழியும் ஷைஃபன் அருவியைப் பார்க்க ஏகாந்தமாக இருந்தது.
மலையிலிருந்து இறங்கினால் பிங்க்ஸி நகரின் ரயில் தண்டவாளங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. தண்டவாளத்தின் இருபுறமும் ஏகப்பட்ட துரித உணவகங்கள், சாக்லேட்-கேக் போன்ற சிற்றுண்டிப் பண்டங்களை விற்கும் கடைகள், அந்த ஊரின் தனித்துவத்தைச் சொல்லும் அழகிய அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகள் வரிசை கட்டின. பல கடைகளில் விற்கப்பட்ட ஆளுயர வண்ணமயமான காகிதங்களைப் பெரும்பாலானோர் வாங்கினார்கள். அவர்களைப் பார்த்து நாங்களும் வாங்கினோம்.
தண்டவாளத்தில் வாழ்க்கை
காகிதத்தோடு தண்டவாளத்தின் நடுவே ஆங்காங்கே இளைஞர்கள் குழுக்களாகக் கூடி நின்றனர். ஒவ்வொரு குழுவும் அவர்களுடைய விருப்பத்தை அந்தக் காகிதத்தின் எல்லாப் பக்கங்களிலும் தூரிகையில் மை தொட்டு எழுதினார்கள். பிரித்தால் நீள் வட்ட வடிவிலான பாராச்சூட் போல அந்தக் காகிதம் விரிந்தது. தீ மூட்டப்பட்ட கற்பூரம் போன்ற ஒரு வஸ்தை அதற்கு அடியில் வைத்துக் கட்டியதும். பறக்கத் தயாரானது. ஒரே நேரத்தில் அங்கு கூடி நின்ற அனைவரும் அவரவர் கனவுகளை, வேண்டுதலை, விருப்பத்தை எழுதிய காகித விளக்குகளை விண்ணில் பறக்கவிட்டோம். வானம் வண்ணமயமாய் மாறியது.
“சீன வருடப் பிறப்பின்போது இப்படி விண்ணில் காகித விளக்குகளைப் பறக்க விடுவதுதான் பிங்க்ஸி விண் விளக்குத் திருவிழா” என்றார் பயண வழிகாட்டி ஃபிரான்ஸிஸ் ஹூ. ஆகாயத்தை அசந்துபோய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரெனத் தண்டவாளத்தில் நின்ற கூட்டம் கலைந்தது. சீறிப் பாய்ந்தது ஒரு ரயில். சில நொடிகள் கழித்து மீண்டும் தண்டவாளத்தில் திரண்டது ஜனம்!
கொன்னுட்டாங்கப்பா!
‘உலகத் தரம் வாய்ந்த 27 பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்றது ஜான்ஃபசன் தீம் பார்க்’ என்கிற பெயர்ப் பலகையை வாசித்துக்கொண்டே நடந்தோம்.
“இதுதான் டைவிங் மஷீன் ஜி5. உலகின் முதல் ஃபிரீஃபால் ரைட். யாருக்குத் துணிச்சல் இருக்கோ அவங்க மட்டும் வாங்க” என இன்ட்ரோ கொடுத்தார் அந்த தீம் பார்க்கின் மேலாளர் யூ செங்க் லீ. ‘அட! எல்லா தீம் பார்க்கலயும் கொடுக்குற பில்டப்தானே’ என மைண்ட் வாய்ஸ் சொல்ல, எங்கள் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் முன்வந்தோம். ரோலர் கோஸ்டர் நாற்காலியின் முதல் வரிசையில் உட்கார்ந்து பெல்ட்டைக் கட்டிக்கொண்டோம்.
நிதானமாக நகரத் தொடங்கிய ரோலர் கோஸ்டர் உயரம் ஏறியது. லேசாக வயிறு கூசியது. சிரித்துக்கொண்டே சுற்றிப் பார்த்தோம். பத்து நொடிகள் மிதமான வேகத்தில் ஓடி ஒரு இடத்தில் நின்றது. மேலிருந்து கீழே பார்த்தால் ஏதோ காட்டுக்கு மேலே வெட்ட வெளியில் மிதப்பது போன்ற உணர்வு. சிரிப்பு குறைந்து. ஆனால் ரோலர் கோஸ்டர் நகரவில்லை. திடீரென மேலே இருந்து குப்புறத் தள்ளிவிட்டதுபோல தடதட வென எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் விழுந்தது ரோலர் கோஸ்டர். கண்ணை மூடித் திறப்பதற்குள் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்தது. “கொன்னுட்டாங்கப்பா!” என்கிற கமண்ட் கனபொருத்தம். “நீங்கள் இப்போ 65 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தீர்கள். இப்போ புரியுதா நான் சொன்ன ஃப்ரீ ஃபால்” எனச் சிரித்தார் யூ செங்க் லீ.
உயிரோட்டமான வரலாறு
போதும் போதும் எனப் பயத்தில் வெளியே வந்த எங்களை நருவன் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க ரோப் காரில் ஏற்றிவிட்டார்கள். அடுத்த சாகசம் ஆரம்பம்!
ஜி5-ல் போன பிறகு மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் தொங்கும் ரோப் காரில் பயணிப்பது சாதாரணமாகத்தான் தோன்றியது. கீழே சன்மூன் ஏரி, சுற்றிலும் மலை, மேலே மழை மேகம். ஆனால் பயம் கொஞ்சமும் இல்லை. அற்புதமான மலைக் கிராமம் ஃபார்மோசான். அங்கிருந்த அருங்காட்சியகம் உயிரற்ற தொல்பொருட்களின் குவிப்பாக இல்லாமல் உயிரோட்டமாக அதன் வரலாற்றைக் காட்சிப்படுத்தியது. அதைவிடவும் சிறப்பாக நருவன் வாழ்க்கையை நாட்டிய நாடகமாகக் காட்டியது நருவன் கலை நிகழ்ச்சி.
தைவான் பயணத்துக்கு முத்தாய்ப்பாக சீமிங் தாங் கோயில் தரிசனம் அமைந்தது. இயற்கையைக் கடவுளாக வழிப்படும் பண்பாட்டைக் கொண்ட தாவோ மதத்தின் சிறப்பைச் சொல்கிறது இந்தக் கோயில். தாமரை ஏரியில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அந்த அற்புதத்தைப் பார்த்தபடியே தைவானிடம் கற்றுக் கொண்டோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT