Last Updated : 16 Dec, 2016 11:24 AM

 

Published : 16 Dec 2016 11:24 AM
Last Updated : 16 Dec 2016 11:24 AM

அலையோடு விளையாடு! 13 - 16,000 அடி உயரத்தில் மூர்ச்சையான நண்பர்

பீர் பஞ்சால் மலைத்தொடரில் உள்ள ரோத்தாங் கணவாய்க்குத் தெற்கில் இந்தியப் பண்பாடு, வடக்கில் புத்தப் பண்பாட்டைப் பின்பற்றுவார்கள். வடக்குப் பகுதியில் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். ரோத்தாங் கணவாய் நவம்பர் மாதம் வரைதான் திறந்திருக்கும். இந்தக் கணவாயைத் தொட்டுவிட்டாலே, ஏற்கெனவே சொன்ன உடல் பிரச்சினைகள் தாக்கலாம் என்ற அச்சம் இருந்தது. பனிப்புயல் வேறு அடிக்கும்.

ஒருவழியாக ரோத்தாங் வந்துவிட்டோம். கீழே இறங்கிக் காலை வைத்தோம். ஊசி குத்துவதுபோலப் பனிக்காற்று வீச, மூச்சுத் திணறல், தலைவலி, இதயத் துடிப்பு போன்றவை அதிகரித்தன. உட்கார்ந்து தியானம் செய்து உடல்நிலையை இயல்புக்குக் கொண்டுவந்தோம்.

இந்த நிலையில் உடலைச் செயல்படும் நிலையில் வைத்திருக்க ‘டையாமெக்ஸ்’ என்ற மாத்திரையைத் தினசரி இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். முன்னேற்பாடாக இந்த மாத்திரையையும் பாதுகாப்பு முறையையும் அறிந்து வைத்திருந்தோம். அந்த இடத்தை விட்டு உடனே புறப்பட்டோம். சீனாப் ஆறு வந்தது. அதன் கரையில் எங்கள் பயணம் தொடர்ந்தது.

தலைக்கு ஏறிய குளிர்

கீபாங் பனிச்சிகரம் உருகி சீனாப் ஆற்றில் கலக்கிறது. நாங்கள் சென்றடைய வேண்டிய ஜிஸ்பா நகரத்தைத் தொடுவதற்கு முன்பு மாலை 4.30 மணி இருக்கும். அதற்கு மேல் பயணத்தைத் தொடர முடியாது என்பதால், தங்குவதற்காக பாகா நதிக்கரையில் கூடாரம் அடித்தோம். அந்த ஆறு மிகவும் ஆழமாகவும் நீரோட்டம் மிக அதிகமாகவும் இருந்தது. அடர்ந்த நிறத்தில் இருந்தாலும் ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடியது. கையை வைத்துத் தொட்டுப் பார்த்தேன். ஜில்லென்று நரம்புகளின் வழியாகக் குளிர் தலைக்கு ஏறியது. இதில் எல்லாம் பேட்லிங் செய்வது சாத்தியமே இல்லை.

எனக்கு ஏற்பட்ட தலைவலி இன்னும் விட்ட பாடில்லை. இரவு கவிந்தது, மாசில்லாத வானத்தில் அடர்த்தியான நட்சத்திரக் கூட்டம் கண்ணைப் பறிக்கும் எழிலுடன் திகழ்ந்தது. தொடர்ச்சியாக எரிநட்சத்திரம் விழுந்துகொண்டே இருக்கும் அதிசயத்தைப் பார்க்க முடிந்தது. “நாளை காலை பயணம் மிகவும் கடுமையானது. அதிகாலை 5 மணிக்குப் புறப்படுவோம்” என்றார் எங்கள் கார் ஓட்டுநர்.

சவாலான பயணம்

எனக்கும் என் நண்பருக்கும் கடுமையான தலைவலி, தூங்க முடியாமல் தவித்தோம். இத்துடன் திரும்பிவிடலாமா என்ற எண்ணம் மனதில் எட்டிப் பார்த்தது.

அடுத்த நாள் காலை ஆறு மணி. ஓட்டுநர் கூடாரம் முன்பாக வந்து நின்றுவிட்டார். ஏழரை மணிக்குப் புறப்பட்டோம். அன்றைக்கு உலகத்திலேயே இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய கணவாய்கள் என்று கருதப்படுகிற இரண்டு கணவாய்களைக் கடந்தாக வேண்டும். அந்தச் சவால் மிகப் பெரியது. நாங்கள் சென்றடைய வேண்டிய ஜிஸ்பா நகரம் பனி உருகி வரும் மலையில் இருந்து உதிர்ந்த மண் குவியலால் உருவானது. அது ஒரு குளிர்ச்சியான பாலைவனம்.

மலையிலிருந்து உருகி வரும் தண்ணீர் பாகா என்ற நதியாகி இந்நகரை வளப்படுத்துகிறது. மேலே இருந்து பார்த்தால் தவளையின் காலைப் போல இந்த நகரம் இருக்கும். வழியில் உள்ள கிராமங்களும் செழித்திருக்கும்.

16,000 மீட்டரில் நல்ல தண்ணீர் ஏரி

ஆரம்பத்தில் வடமேற்கு நோக்கியதாக இருந்த எங்களுடைய பயணம், இப்போது வடகிழக்கு திசைக்கு மாறியது. அது ஒரு மலைப் பாலைவனம். அதேநேரம் அங்குள்ள இயற்கை வளங்களைக் கணக்கிட்டால், அது சொர்க்க பூமி. பலதரப்பட்ட கனிமக் குவியல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது செப்டம்பர் மாதமாக இருந்தும் கீழே பனி இல்லை. நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தது பள்ளத்தாக்குப் பகுதி. மலைகளின் உச்சியில் மட்டும் பனி படர்ந்திருந்தது.

ஹிமாங் பகுதியில் இந்திய எல்லையில் உள்ள சாலை மிகவும் அழகானது. அவ்வளவு உயரத்தில் நம் ராணுவ வீரர்களின் உழைப்பில் உருவானது. ஐந்து கி.மீ. தொலைவு கடந்திருந்த வேளையில் அழகே உருவான ஒரு ஏரி, 16,000 அடி உயரத்தில் தென்பட்டது. அந்த நல்ல தண்ணீர் ஏரி ரம்மியமாக இருந்தது. ஆங்கிலேயப் பெண்ணும், இந்திய இளைஞனும் பேட்லிங் சாதனை செய்த சூரஜ் பால் ஏரிதான் அது.

மூர்ச்சையான நண்பர்

வழியில் 4,890 மீட்டர் உயரமான பார்ச்சல் கணவாயைக் கடந்தோம். சாலை சரியாக இல்லை. அங்கிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்ட சுவடு தெரிந்தது. பயணம் மெதுவாக மாறியது. அங்கிருந்து 3,000 அடி உயரத்தில் இருக்கும் லே கணவாய்க்குச் செல்ல வேண்டும். கார் மலையில் ஏற ஆரம்பித்தது.

லே கணவாயைக் கடந்ததும் எதுவுமற்ற ஒரு சமவெளிப் பாலைவனம். ஆனாலும், மலை உச்சியின் சிகரங்களில் இருந்து பனி உருகி ஓடி வந்து, ஆங்காங்கே குட்டி நீர்நிலைகளை உருவாக்கியிருந்தது. அங்கே சில உயிரினங்கள் இருந்தன. யாக் எனப்படும் சடைமாடு, மட்டக்குதிரை, மர்மோத் என்கிற மிகப் பெரிய மலை அணில் போன்றவற்றைப் பார்த்தோம். இந்த மர்மோத் சாதுவானது, வளைகளில் தங்கக்கூடியது.

அதைப் பார்க்கும் ஆர்வத்தால் தூண்டப்பட நண்பர் சிவிக், காரிலிருந்து கீழே இறங்கி ஓடினார். 50 அடி கடந்த நிலையில் மயங்கிக் கீழே விழுந்தார். அது ஆல்டிடியூட் மவுன்டெய்ன் சிக்னெஸ்ஸின் (ஏ.எம்.சி.) அறிகுறி. அதிர்ச்சியடைந்தோம். முகத்தில் தண்ணீரைத் தெளித்து மூச்சுப் பயிற்சி செய்ய வைத்தோம். கிட்டத்தட்ட 15,000 அடி உயரத்தில் இருக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்தினோம். அவருக்கு முதலுதவி செய்த பிறகு பயணம் தொடர்ந்தது.



காசியில் இருந்து புறப்பட்டு நேற்று பாட்னாவை வந்தடைந்தோம். ஏற்கெனவே பனிமூட்டத்தால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்ததால், ஆற்றில் எந்தப் பாதையை எடுப்பது என்று அடிக்கடி குழப்பம் ஏற்பட்டது. ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. நதி உள்ளே இழுத்தது. இதிலிருந்து தப்பி வந்தோம்.

பிறகு பாட்னாவுக்கு 15 கி.மீ. முன்னதாக சாப்ரா என்ற இடத்தில் தங்கினோம். அங்கே 5 டிகிரிக்குக் கடுமையான குளிர் அடித்தது. காலை எழுந்தால் 8 மணிக்குக்கூட எதிரே இருந்த பாலம் தெரியவில்லை. நம்ம ஊரைப் போல இங்கும் ஆற்றில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு லக்னோ போன்ற நகரங்களுக்குப் போகிறது. அதற்குப் பிறகு கங்கை ஆறு மூன்று, நான்காகப் பிரிந்தது. எந்தப் பக்கம் போவது என்ற குழப்பம் ஏற்பட்டது. நீரோட்டத்தை வைத்துத்தான் போய்க்கொண்டிருந்தோம்.

பாட்னாவுக்கு எட்டு கி.மீ. முன்பாக சோன் ஆறு வலது பக்கமாகவும், காரா ஆறு இடது பக்கமாகவும் கங்கையில் கலக்கின்றன. அதற்குப் பிறகு ஆறு முன்னைவிடப் பிரம்மாண்டமாகிவிடுகிறது. அந்தப் பகுதியில் நீரோட்டம் விசித்திரமாக இருந்தது. எதிரே பெரிய பெரிய படகுகள் வந்தன. ஆனால், அவை பக்கத்தில் வரும்வரை தெரியவில்லை. இதனால் ஆற்றில் விழ இருந்தோம்.

பாட்னா வந்த பிறகு ஓங்கில்களில் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் ஆர்.கே. சின்ஹாவைச் சந்தித்து உரையாடினோம். அவர் ‘டால்பின் மேன் ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படுபவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர். அவருடன் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பணியைப் பாராட்டினார். நிறைய முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

எனக்குக் கால் விரல்களில் புண் வந்து அவதிப்படுகிறேன். அதில் தண்ணீரே படக் கூடாது. புண்ணில் குளிர்ந்த தண்ணீர் பட்டால் சில்லிடுகிறது. இன்னும் 4 கி.மீ. கடந்தால், இந்த வெப்பநிலை மாறிவிடும். இப்போது கங்கை ஆற்றில் 1870 கி.மீ. கடந்துவிட்டோம்.

டால்பின் மேனுடன் 3 மணி நேரம்

(அடுத்த வாரம்: சிந்து நதியின் பிறப்பிடத்தில்...)
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x