Last Updated : 30 Dec, 2016 10:53 AM

 

Published : 30 Dec 2016 10:53 AM
Last Updated : 30 Dec 2016 10:53 AM

சாதனை காலண்டர்

வழக்கத்துக்கு மாறான காலண்டர் மாடல்களை இடம்பெறச் செய்வது தற்போது அதிகரித்துவருகிறது. அதேநேரம், வெறும் மாடல்களாக மட்டுமில்லாமல் பாலியல் சிறுபான்மையினரின் சாதனைகளையும் கம்பீரமாகச் சொல்கிறது பார்ன் 2 வின் வெளியிடும் காலண்டர்கள்.

திருநங்கைகளின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான நோக்கங்களுடன் சென்னையில் 2013-ல் தொடங்கப்பட்ட தன்னார்வ அமைப்பு பார்ன் 2 வின். இதன் நிறுவனர் ஸ்வேதா சுதாகர், திருநங்கைகளின் கல்விக்காகவும், பணி பாதுகாப்புக்கும் பல்வேறு செயல்திட்டங்களை செய்துவருகிறார்.

கடந்த 2013-லிருந்து கல்வி, விளையாட்டு, கலை, வேலைவாய்ப்பு போன்று பல்வேறு துறைகளில் தடைகளைக் கடந்த சாதனை படைத்துவரும் முன்னுதாரண திருநங்கைகளை இவர் முதலில் அடையாளம் காண்கிறார். பிறகு அவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கிக் கவுரவிக்கிறார். இப்படி இதுவரை 60 திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு காலண்டர்

ஒவ்வோர் ஆண்டும் பல துறைகளில் அடையாளம் காணப்படும் திருநங்கைகளின் படத்துடன் குறிப்பிட்ட துறையில் அவர்களுடைய சாதனைகளையும் குறிப்பிட்டு காலண்டர் வெளியிட்டுவருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த காலண்டர் வெளியாகிவருகிறது. காலண்டர் விற்றுக் கிடைக்கும் தொகையைக்கொண்டு, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும், திருநங்கைகளின் படிப்புச் செலவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்படிக் கடந்த மூன்றாண்டுகளில் காலண்டர் விற்பனை மூலம் வசூலான ரூபாய் 1.15 லட்சம் மாணவர்களின் கல்வி சார்ந்த நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டில் 6 திருநங்கைகளின் கல்விச் செலவுக்கு ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம்வரை மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம் என்கிறார் திருநங்கை ஸ்வேதா.

2017 காலண்டர்

பார்ன் 2 வின் அமைப்பால் 2016-ம் ஆண்டில் திருநங்கை சாதனையாளர் களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருநங்கைகளுக்காக தன்னார்வ அமைப்பு நிறுவிய மூத்த திருநங்கை கிருபா, இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் அதிகாரியான ப்ரித்திகா யாஷினி, கர்நாடகாவில் ஊடகக் கலைஞராக இருக்கும் காஜல், பிரியாணி மாஸ்டர் செண்பகா உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஒளிப்படங்கள், அவர்களைக் குறித்த குறிப்புடன் 2017-க்கான காலண்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஒரு காலண்டருக்கான நன்கொடை ரூ 500.

தொடர்புக்கு: ஸ்வேதா 99418 87862
மின்னஞ்சல்: swethafemin@gmail.comn

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x