Published : 02 Dec 2016 11:32 AM
Last Updated : 02 Dec 2016 11:32 AM
பாதங்களை முத்தமிடும் அலைகளைக் கடற்கரையில் நின்று ரசிப்பது அலாதியானது. அதைவிடவும் அபூர்வமான அனுபவத்தை தைவானின் பிண்டாங் நகரில் உள்ள கடல்சார் உயிரியல் அருங்காட்சியகம் கொடுத்தது. தைவான் ஸ்ட்ரெய்ட் கடலுக்கு அடியில் கண்ணாடி கொண்டு குகைபோலக் கட்டப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகத்துக்குள் நடந்தபடியே அண்ணாந்து பார்த்தால் தலைக்கு மேலே அலை பாய்ந்தது. கடலும் மீன்களும் மேலே அசைவதைப் பார்த்த நொடிப் பொழுதில் மூச்சு முட்டியது.
நீருக்கடியில் கட்டப்பட்டிருக்கும் குகைகளில் ஆசியாவிலேயே மிகப் பெரியது தைவானின் கடல்சார் உயிரியல் மற்றும் மீன் காட்சியகத்துக்கான தேசிய அருங்காட்சியகம். அதை முழுவதுமாகச் சுற்றிக் காண்பித்து சீன மொழியான மாண்டரின் தொனியில் ஆங்கிலத்தைப் பேசி இனிமையாக விளக்கினார் வழிகாட்டியான இளம் பெண் ஈவா. அழகிய குட்டிப் பட்டாம்பூச்சி மீன்கள், மென்மையான பவளப் பாறைகள், கடினப் பவளப் பாறைகள், தத்தித் தாவும் குழந்தைபோல நீரில் குதித்து விளையாடும் பிரம்மாண்டமான வெள்ளை பெலூகா திமிங்கலங்கள் என விதவிதமான கடல் உயிரினங்களை அங்கே நேருக்கு நேர் பார்த்து பிரமித்துப் போனோம்.
கடல்சார் உயிரியல் மற்றும் மீன் காட்சியகத்துக்கான தேசிய அருங்காட்சியகம்
ஆடி ஓடி விளையாடி!
அங்கிருந்து கவுஷீயூங் நகரின் ட்ரீம் மாலுக்கு வந்தால் வேறு உலகம் காத்திருந்தது. அது ஒரு பக்கா யூத் மால்! டிரெண்டியான ஆடைகள், அலங்காரப் பொருட்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள், சுவையான உணவு வகைகள் என ஏகப்பட்ட பொருட்களை விற்க அந்த ஒரே மாலில் 800 கடைகள் உள்ளன.
அதிலும் ‘147 ஸ்போர்ட் தீம் பார்க்’கில் லேசர் துப்பாக்கிச் சுடுதல், ‘கோ கார்ட்’ என்னும் கார் ரேஸிங் போன்ற கலக்கலான விளையாட்டு வகைகள் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் உள்ளுக்குள் இருக்கும் குழந்தை விழித்துக்கொண்டது. அக்கடையின் மேலாளர் கான்ஸி லின்னும் உதவி மேலாளர் மைக்கேல் மாவோவும் சொன்னபடி எல்லா விளையாட்டுக்களையும் குழுவாக இணைந்து ஆடி ஓடி விளையாடிக் களைத்துப்போனோம்.
மைக்கேல் மாவோ, கான்ஸி லின்
“விளையாட்டுகளுக்கான தீம் பார்க்கிலேயே வேலை செய்றீங்களே, செம்ம ஜாலியாக இருக்கும்ல?” எனக் கேட்டதற்கு, “மோஸ்ட்லி காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்தான் இங்க விளையாட வருவாங்க. இதுல சில பேரு எங்களையும் அவங்களோட சேர்ந்து விளையாடக் கூப்பிடுவாங்க” எனச் சிரித்தார் கான்ஸி லின். “ஆனால் விடுமுறை நாட்களில் மட்டும்தான் இங்கே கூட்டம் சேரும். மீதி 200 நாட்கள் ரொம்ப கம்மிதான். இந்தத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்ததால் இதைச் செய்கிறேன்” என்றார் மைக்கேல். அவர்களுடைய குட்டி உணவகத்தின் ஸ்பெஷாலிட்டியான கோன் ஐஸ் கிரீமை வாங்கிச் சுவைத்துக்கொண்டே ட்ரீம் மாலுக்கு டாடா சொன்னோம்!
அந்த முத்தம்!
ஆதிகால மனிதர்கள் தொடங்கி இன்றுவரை உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் - ராணுவத் தளவாடங்கள், காட்டு விலங்குகளின் படிமங்கள், அழிந்துபோன உயிரினங்களின் தத்ரூபமான மாதிரிகள் இப்படி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகைப் பொக்கிஷங்களின் தொகுப்புதான் தைனான் நகரின் சைமீ அருங்காட்சியகம். அதன் முகப்பில் பரந்து விரிந்திருந்த திடலின் நடுவே சலசலக்கும் நீரோடு இருந்தது ஒரு அழகிய குளம். அந்தக் குளத்தில் நாலுகால் பாய்ச்சலில் ஓட்டம் பிடித்த குதிரைச் சிலைகளே அற்புதங்களுக்கான முன்னோட்டம்போல இருந்தன!
ஐரோப்பியக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டிருக்கும் சைமீ அருங்காட்சியகத்தை நிறுவிய வென் லாங் ஷி வயலின் பித்தர். உலகெங்கிலும் சுற்றித் திரிந்து அவரே சேகரித்த வயலின்களையும் ஒரு அரங்கில் பிரத்தியேகமாகக் காட்சிக்கு வைத்திருக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால் அந்த அரங்கில் வயலின்களைப் பார்க்க மட்டுமல்ல அவை உருவான கதையையும் அவற்றிலிருந்துவரும் அற்புதமான இசையையும் கேட்க ‘அக்வஸ்ட்டிக் கைட்’ தரப்பட்டது. ரிமோட் கண்ட்ரோலோடு இணைக்கப்பட்ட அந்த ஹெட் ஃபோனில் கண்முன்னே இருக்கும் ஒவ்வொரு வயலினின் இசையையும் கேட்டுக்கொண்டே அந்தப் பிரம்மாண்டமான அரங்கில் நடந்து கனவுலகில் மிதந்தோம்.
இந்தக் கனவிலிருந்து மீள்வதற்குள் கண்ணைப் பறித்தது அடுத்த அறையில் இருந்த ‘தி கிஸ்’ சிலை. பிரெஞ்சு சிற்பியான ஒகுஸ்த் ரோதின் 1889-ல் செதுக்கிய அற்புதம் அது. பொதுவாக முக பாவனைகளுக்கும், கூந்தலின் நெளிவு சுளிவுகளுக்கும் , உடல் அங்கங்களுக்கும்தான் சிலைகளில் முக்கியத்துவம் தரப்படும். ஆனால் ‘அந்த முத்தம்’ சிலையில் முத்தமிடும்போது ஆண்-பெண் உடல் தசைகளில் ஏற்படும் அசைவுகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தன. உற்றுப் பார்த்தால், “இந்த நிமிடம் மட்டுமே நமக்கானது.
வாழ்ந்து முடித்துவிடும்வோம் வா அன்பே!” என்கிற மனவோட்டம் அவர்களுடைய முகத்தில் பிரதிபலித்தது. 14-ம் நூற்றாண்டு இத்தாலியக் கவிஞர் தாந்தேயின் துன்பியல் காவியமான ‘டிவைன் காமெடி’யைத் தழுவி இந்தச் சிற்பத்தை ரோதின் உருவாக்கிய கதை கேட்டு மனம் நெகிழ்ந்தது. தனியார் அருங்காட்சியகம் என்பதால் ஒளிப்படங்கள் எடுக்க அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனாலேயே அந்த அரங்கில் வீற்றிருந்த ஒவ்வொரு சிலையையும் உன்னிப்பாகக் கவனிக்க நேர்ந்தது. ‘அந்த முத்த’த்தை’ப் படம் பிடித்திருந்தால் என் கேமராவில் அந்தச் சிலை பதிந்திருக்குமே தவிர இவ்வளவு ஆழமாக என் மனதில் பதிந்திருக்காது!
மீன் காட்சியகத்தில்...
(பயணம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT