Last Updated : 04 Nov, 2016 10:27 AM

 

Published : 04 Nov 2016 10:27 AM
Last Updated : 04 Nov 2016 10:27 AM

சாதி டி-ஷர்ட்!

சிவ‌ப்பு, மஞ்சள், பச்சை. இம்மூன்று நிறங்களால் கோக்கப்பட்ட ஒரு முத்து மாலையை அந்தக் கல்லூரி மாணவர் அணிந்திருந்தார். மாலையின் இறுதியில் ஒரு சின்ன டாலர், அதில் நன்கு பரிட்சயமான ஒரு சுதந்திர வீரரின் படம் அச்சிடப்பட்டிருந்தது.

‘அடடே! இந்தக் காலத்திலும் இப்படியொரு தேசப்பற்று மிக்க மாணவரா?’ என்று வியக்க வைத்தார். கருப்புச் சட்டை அணிந்திருந்தார், இன்னும் கொஞ்சம் அருகில் சென்று அவர் சட்டையைக் கூர்ந்து கவனித்தால் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற கம்பீர வரிகள் என் கண்களில்பட்டன.

தேசப் பற்றும், மொழிப் பற்றும் கொண்ட மாணவர் போலும் என்ற மனக் கணக்கில், ‘அருமையான வரிகள்! உங்களுக்கு பாரதியின் மேல் அவ்வளவு பற்றா?’ என்று ஆர்வத்தோடு அவரிடம் கேட்டால், ‘ஓ… இவை பாரதியின் வரிகளா?’ என்றார் சந்தேகமாக. நமக்குத் தூக்கி வாரிப் போட்டது. பாரதி பாவம்! இவ்வளவுதான் இன்றைய இளைஞர்களின் தேசப்பற்று. அந்த தேசப்பற்று இன்று வெறும் டி -‍ ஷர்ட் பற்றாக மட்டுமே மாறியது டிராஜெடி!

ஆம். பாரதி, திருவள்ளுவர், பெரியார், பகத் சிங் உள்ளிட்டோரின் படம் அச்சிடப்பட்ட ‘டி- ஷர்ட்’களுக்கு மட்டும் மவுசு ஏறுகின்றது. அந்த டி- ஷர்ட்களுக்கென்று சந்தையில் தனி இடம் உண்டு. நல்ல விலையும் உண்டு. அந்த மாமனிதர்களின் வாழ்க்கை பற்றிய பின்னணியை அறியாமலேயே, அவர்களின் படம் பதிக்கப்பட்ட‌ டி- ஷர்ட்டை அணிவதில், பெருமிதம் தேவைதானா, இளைஞர்களுக்கு?

பிராண்டிங் ஆகும் தலைவர்கள்

கொடிகட்டிப் பறக்கும் பாப்புலர் டி- ஷர்ட் முகங்களில், பாப் மார்லேவுக்கும், சேகுவேராவுக்கும் எப்போதும் ‘கிரேஸ்’ குறைந்ததில்லை. கைத்துணியில் தொடங்கி பனியன், கீ சைன், காதணிகள் என்று பல வடிவங்களில் வணிகத்தைப் பெருக்கும் மிக முக்கியமான தயாரிப்பு என்றே அவற்றைச் சொல்லலாம். ஆனால் ‘பாப்’ இசையும், ‘சே’வின் புரட்சி வரலாறும் எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த வரிசையில் இப்போது பெரியாரும் அம்பேத்காரும்! ஆன்லைன் ஷாப்பிங்கில் சில காலங்களாகவே உச்சத்தில் இருக்கும் ஆடைகளும் இவையே. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற சிந்தனை, இப்போது பல டி- ஷர்ட்களில் அச்சிடப்படும் அலங்கார வார்த்தைகளாக இருக்கின்றன.

‘இது நல்ல மாற்றம் தானே. இதில் என்ன தப்பு?’ என்று நினைக்கலாம். ஒரு புத்தகத்தின் மூலம் ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கும், விளம்பரம் மூலம் ஒருவரைத் தெரிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன‌ அல்லவா? பெரியாரும் அம்பேத்காரும் டி-ஷர்ட் பிராண்டாக மட்டும் உருவாவது சரிதானா? விலை கொடுத்து வாங்கும் சரக்கா அவர்கள்?

சாதி டி - ஷர்ட்

இவர்களது சாதி ஒழிப்புச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளாத சில அமைப்புகள், மீண்டும் சாதி அடையாளத்தை இளைஞர்கள் மத்தியில் முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளன. அதன் விளைவு தற்போது முத்துராமலிங்க தேவர் படம் அச்சிடப்பட்ட டி- ஷர்ட்கள் விற்பனைக்கு வந்துள்ளன! சமீபத்தில் நடந்து முடிந்த‌ தேவர் ஜெயந்தி விழாவில் திரும்பிய பக்கமெல்லாம் முத்துராமலிங்க தேவர் உருவம் பதித்த டி-ஷர்ட்கள்.

“இந்த மாதிரி சாதி சார்ந்த டி ஷர்ட்டுகளின் விலை சுமார் 200 முதல் 300 ரூபாய்க்குள்ள இருக்கு. இம்மானுவல் குரு பூஜை, தேவர் ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி மாதிரியான‌ நாட்கள்ல அந்தந்த அபிமான தலைவர்களின் படம் போட்ட டி-ஷர்ட்கள் நல்ல சேல்ஸ் ஆகுது” என்கிறார், மதுரையில் உள்ள துணி விற்பனையாளர் பெருமாள்.

‘நான் இந்த இனத்தைச் சேர்ந்தவன். எனக்கென்று ஒரு தனி கூட்டம், அடையாளம் உள்ளது. எனது தலைவர் இவரே, எனது சாதி சார்ந்த கொண்டாட்டங்களில் என் தலைவன் படமிட்ட டி- ஷர்ட்கள் அணிவதில் எனக்குப் பெருமிதம் உண்டு’ என்கிறார் ஒரு இளைஞர்.

‘ஆள் பாதி, ஆடை பாதி’ எனும் வழக்கத்தின்படி, ஆடையை வைத்து மனிதர்கள் எடைபோடப்படும் இக்காலத்தில், இத்தகைய டி- ஷர்ட்களை அணிவதன் மூலம் வெளிப்படையாக ஒருவர் தனது சாதியை அறிவித்துக்கொள்வது சரிதானா?

டி-ஷர்ட் அரசியல்

“இந்தச் சமுதாயம்தான் இன்றைய இளைஞர்களின் சாதிய மனநிலையைப் பல கோணங்களில் வளர்த்து விடுகிறது. அரசியல் கட்சிகளின் பங்கும் இதில் அதிகம். மேலும் ‘பெருமை பேசும் விஷயமாகவே’ சாதி சார்ந்த பேச்சுகள் தற்போது உருவெடுத்துவருகின்றன‌. அதனால் இயல்பாகவே இளைஞர்கள், சாதிய அடையாள அரசியலில் சிக்கிக்கொள்கிறார்கள். இச்சூழலில் வளரும் மாணவனும், தனது இன ஆதிக்க உணர்வை வகுப்பறையிலும் வெளிப்படுத்துகிறான்” என்கிறார் சமூக ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

இதுபோன்று அடையாளங்களை விரும்பும் மனநிலை குறித்து உளவியலாளர் பிருந்தா ஜெயராமன் கூறும்போது, “ஆல்ஃப்ரெட் அட்லர் என்னும் உளவியலாளரின் கருத்தின்படி, அடிப்படையில் எல்லா மனிதர்களுக்குள்ளும் தான் அதிகார பலம் மிக்கவன் என்ற உணர்வே மேலோங்கி இருக்கும். மேலும் அவ‌ர்கள், தங்களை ஒரு இன வட்டத்திற்குள் பொருத்திப் பார்க்கவே விரும்புவார்கள். அந்த மன இயல்பின் வெளிப்பாடே இப்போது டி- ஷர்ட் வடிவில் சாதியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது” என்கிறார்.

இந்த டி-ஷர்ட் அரசியல் தேவைதானா நண்பா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x