Published : 25 Nov 2016 12:14 PM
Last Updated : 25 Nov 2016 12:14 PM

டேஞ்சரஸ்!

நவம்பர் 26: ‘டேஞ்சரஸ்' ஆல்பம் 25 ஆண்டுகள்

உலக அளவெல்லாம் வேண்டாம். தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கல்லூரியை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு நடக்கும் கலாசாரப் போட்டிகளில், யாரேனும் ஒரு இளைஞராவது மைக்கேல் ஜாக்ஸனைப் போல ரோபோ நடனமோ அல்லது ‘மூன்வாக்’ நடனமோ ஆட முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.

இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், ‘மைக்கேல் ஜாக்ஸனைப் போல வர வேண்டும்’ என்று லட்சிய வெறி கொள்ள வைத்ததுதான் ‘கிங் ஆஃப் பாப்’ செய்த மாபெரும் சாதனை!

வெள்ளையர்களின் உலகத்தில் பிறந்த கறுப்புச் சூரியன். ‘ஜாக்ஸன் 5’ எனும் இசைக்குழுவின் அடையாளம். நடனத்தில் இசையின் நளினத்தை வெளிப்படுத்தியவர். ‘ரோபோட்’ நடன வகையைப் பிரபலப்படுத்தியவர் என ஜாக்ஸனைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவரையும், அவரது வாழ்க்கையையும், அவரைச் சுற்றிப் படர்ந்த குற்றச்சாட்டுக்களையும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்... டேஞ்சரஸ்!

மைக்கேல் ஜாக்ஸனின் கை, ‘கால்’ வண்ணத்தில் (பாட்டும், நடன அமைப்பும் அவரே) எட்டாவது படைப்பாக 1991-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வெளியானது ‘டேஞ்சரஸ்’ எனும் ஆல்பம். மொத்தம் 14 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்துக்கு இந்த ஆண்டு 25 வயது. இதையொட்டி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ‘எம்.ஜே. தி ஜீனியஸ் ஆஃப் மைக்கேல் ஜாக்ஸன்’ எனும் புத்தகம்.

‘ரோலிங் ஸ்டோன்’ எனும் இசைத் துறை தொடர்பான பிரபல‌ பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றும் ஸ்டீவ் நாப்பர் என்பவர் எழுதிய இந்த நூலை சைமன் அண்ட் ஷுஸ்டர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மைக்கேல் ஜாக்ஸனுக்குள் இருக்கும் இசை மேதையைப் பற்றி விவரிக்கும் இந்த நூல், அவரது வாழ்க்கையின் கறுப்புப் பக்கங்களையும் கொண்டிருக்கிறது. அதில் ‘டேஞ்சரஸ்’ ஆல்பம் வெளியான காலத்தில்தான், ஜாக்ஸனின் வாழ்க்கையில் பல ஆபத்தான திருப்பங்கள் ஏற்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.

பின்னாளில் தனக்கு வரும் ஆபத்துக்களுக்கு இந்த ஆல்பம் முன் எச்சரிக்கை மணியடிக்கும் என்பதைப் பற்றி ஜாக்ஸன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பாப் இசையின் மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்திருந்த‌, நிறைய ஏமாற்றங் களும் கொண்டிருந்த காலத்தில், ‘டேஞ்சரஸ்’ ஆல்பம் வெளியானது. இருந்தும் ‘ஜாக்ஸன்’ எனும் ஒரே காரணத்துக்காக ஒரு நாளைக்கு 70 ஆயிரம் கேசட்டுகள் விற்பனையாயின.

ஆல்பம் வெளியான இரண்டே வாரங்களில் எல்லா ‘சார்ட் பஸ்டர்’களிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. எனினும், ‘த்ரில்லர்’, ‘பேட்’ போன்ற அவரின் முந்தைய ஆல்பங் களைப் போல ‘டேஞ்சரஸ்’ ஆல்பத் துக்குக் கிடைத்த வரவேற்பு கொஞ்சம் கம்மிதான்!

ஆனால் ஜாக்ஸனுக்கு ஆல்பம் என்பதைத் தாண்டியும் ‘டேஞ்சரஸ்’ மீது பெரிய நம்பிக்கை இருந்தது. ஈர்ப்பு இருந்தது. அந்த ஆல்பத்தின் மீதான கனவு நிறைய இருந்தது. இதில் இடம்பெற்ற ‘ஹீல் தி வேர்ல்ட்’ எனும் பாடல் போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்துப் பேசுகிறது. சுமார் ஆறரை நிமிடங்கள் கொண்ட இந்தப் பாடலை எழுதியதற்காகத் தான் பெருமைப்படுவதாக ஜாக்ஸனே பேட்டியொன்றில் சொல்லியிருக்கிறார்.

1992-ம் ஆண்டு ‘ஹீல் தி வேர்ல்ட்’ என்ற பெயரிலேயே போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக அறக்கட்டளை ஒன்றையும் ஆரம்பித்தார். முறையாகக் கணக்குக் காட்டாததால், பின்னாளில் இந்த அறக்கட்டளை முடக்கப்பட்டது வேறு விஷயம். இந்த ஆல்பத்துக்குப் பிறகுதான் ஜாக்ஸனுக்கு ‘கிங் ஆஃப் பாப்’ எனும் பெருமை கிடைத்தது என்பது நினைவில் கொள்ளவேண்டிய விஷயம்.

தங்களின் ஆல்பங்களை ‘ப்ரொமோட்’ செய்ய இசைக் கலைஞர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சில பாடல்களை அரங்கேற்றுவது வழக்கம். ஜாக்ஸனும் அப்படி ‘ப்ரொமோ டூர்’ அடிக்க ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில்தான், குழந்தைகளுடன் இவர் உறவு கொள்வது குறித்த செய்திகள் வர ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து பல வழக்குகளைச் சந்திக்க ஆரம்பித்தார்.

இதே காலத்தில்தான் அவரின் உடலில் வெண்புள்ளிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துவந்ததால், நிறைய பின்விளைவுகளும் ஏற்பட்டன. தன் நடனத்துக்குத்தன் உடல்தான் பலம் என்று கருதிவந்த ஜாக்ஸன், உணவில் அதிகம் கவனம் செலுத்தாமல் போனதுதான் ஆச்சரியம். அதுவும் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தின. ஒரு புறம் வழக்குகள் தந்த மன அழுத்தம், இன்னொரு புறம் நோய்கள் ஏற்படுத்திய வலி ஆகியவற்றிலிருந்து தப்பிக்க நினைத்து, போதை மருந்துகளிடம் தஞ்சமடைந்தார். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம்... ஸாரி ஜாக்ஸன்!

கொஞ்சம் ‘டேஞ்சரஸ்’ ஆன வாழ்க்கைதான் பிரபலங்களுடையது. இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x