Published : 25 Nov 2016 11:41 AM
Last Updated : 25 Nov 2016 11:41 AM
தக்ஷிண சித்ராவின் காதம்பரி ஆர்ட் கேலரிக்குள் நுழைந்தவுடன் மண்வாசத்துடன் புன்னகைக்கும் முகங்கள் நம்மை வரவேற்கின்றன. ஓவியர்கள் அந்தோனி ராஜும் ராமுவும் இணைந்து ‘தமிழ்நாட்டின் பாரம்பரியங்கள்’ என்ற தலைப்பில் இந்த ஓவியக்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சாமானிய உழைக்கும் மக்களின் முகங்களைத் தத்ரூபமாக அழகியலுடன் பதிவுசெய்திருக்கிறார்கள்.
இந்த ஓவியக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் முகங்கள் எல்லாமே சொல்லிவைத்தாற்போல் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கின்றன. இந்த சிரித்த முகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தைக் கேட்டதற்கு ஓவியர் அந்தோனி ராஜ், “என்னுடைய ஓவியங்களில் சிரிக்கும் இந்த முகங்களெல்லாம் அன்றாடம் நம்மைக் கடந்து செல்லும் சாமானியர்கள். காய்கறி விற்பவர், மீன் விற்பவர், ஆடு விற்பவர் எனத் தேடித் தேடி வரைந்திருக்கிறேன். இதில் ஒரு பாட்டியைச் சிரிக்கச் சொன்னபோது ரொம்ப வெட்கப்பட்டாங்க.
இன்னொரு பாட்டி என்னை அரை மணிநேரம் திட்டித்தீர்த்தார்கள். ஆனால், கடைசியாகச் சிரித்தார்கள். வேலூர், சீர்காழி, காசிமேடு, திருநெல்வேலி என நான் பயணித்த இடங்களில் என்னைக் கடந்து சென்ற எளிய மனிதர்களை ஓவியங்களாக்கியிருக்கிறேன்” என்கிறார்.
இந்த ஓவியக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு முகத்தையும் வரைவதற்கு அந்தோனிக்கு 30 நாட்களில் இருந்து 45 நாட்களாகியிருக்கின்றன. இவருடைய ஓவியங்கள் பெரும்பாலும் ‘பேனா மற்றும் மை’யால் வரையப்பட்டிருக்கின்றன. இதே தலைப்பில் வரைந்த ஓவியங்களைஅமெரிக்காவில் இருக்கும் ‘ஏசியன் ஆர்ட் கேலரி’க்கு வழங்கியிருக்கிறார் இவர். அத்துடன் இவர் வரைந்த ‘மீசைக்கார தாத்தா’ ஓவியத்துக்கு ‘இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேஷன்’ விருது கிடைத்திருக்கிறது.
“எனக்குச் சீர்காழிக்கு அருகிலிருக்கும் எருக்கூர் கிராமம். பள்ளிப் பருவத்திலிருந்தே ஓவியங்கள் வரைவதில்தான் ஆர்வம். அதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து வண்ணகலை படிக்கவைத்தது. இந்த மண்ணின் பெருமை பேசும் மனிதர்களை வரைவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் என்னுடைய சீனியர்கள் ரத்னவேல்தான்” என்கிறார் இவர்.
இந்த ஓவியக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் ஓவியர் ராமுவின் ஓவியங்கள் பெரும்பாலும் இயற்கையைப் பின்னணியாக வைத்து வரையப்பட்டிருக்கின்றன. மயில்களும், தாமரைகளும் இவருடைய ஓவியங்களில் நகர்கின்றன… பூக்கின்றன. அவர் சிறு வயதிலிருந்து ரசித்த இரண்டு மனிதர்களை மட்டும் பென்சில் ஓவியங்களாகப் பதிவுசெய்திருக்கிறார் ராமு. “எங்க ஊரில் சின்ன வயசுல குடுகுடுப்பைக்காரர் வரும்போதெல்லாம் பயத்துடன் அவரைப் பார்ப்பேன். அப்புறம் வளர்ந்த பிறகு, பயம்போய் அவரை ரசிக்கத் தொடங்கிவிட்டேன்.
அதேமாதிரி எங்க ஊரில் ஐஸ் விற்கும் தாத்தாவையும் எனக்குப் பிடிக்கும். ஆனால், வரையத் தொடங்கி நீண்ட காலத்துக்குப் பிறகுதான், ‘இவ்வளவு காலம் இவர்களை எப்படி வரையாமல் விட்டோம்?’ என்று தோன்றியது. அதுதான் இப்போது வரைந்துவிட்டேன். இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை வரைவதால் கிடைக்கும் ஆத்ம திருப்தி அலாதியானதுதான்” என்கிறார் இவர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த இவருக்கு இவரின் அண்ணன் வரைவதைப் பார்த்து ஓவியக் கலையில் ஆர்வம் வந்திருக்கிறது. “என்னுடைய அண்ணன் வீட்டில் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பார்த்துதான் முதலில் வரையத் தொடங்கினேன். எனக்குக் கணக்குச் சரியா வராது. அதனால், ஏழாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் டேவிட் சார் எப்பவும் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார். ஒருநாள், அவர் என்னை அடித்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய புத்தகத்தில் ஒரு காகிதம் விழுந்தது. அதில் நான் நடிகர் ரஜினிகாந்த்தை வரைந்து வைத்திருந்தேன்.
அதைப் பார்த்த பிறகு, அவர் என்னை அடிப்பதை நிறுத்திவிட்டார். ‘ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கான்’ என்று அந்த ஓவியத்தைப் பள்ளியின் எல்லா ஆசிரியர்களிடம் கொண்டுபோய்க் காட்டி என்னைப் பாராட்டினார். இன்று எல்லோரும் நல்ல வரையறேன்னு பாராட்டினாலும் அவர் பாராட்டியதை மறக்கவே முடியாது” என்று சொல்கிறார் ராமு. இவர் பத்தாம் வகுப்பு முடித்தவுடனே புதுவைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டு நுண்கலைப் பட்டப்படிப்பைப் படித்திருக்கிறார்.
இவர் சில ஆண்டுகள் அனிமேஷன் துறையில் பணியாற்றியிருந்தாலும் அது பிடிக்காமல் ஓவியங்களின் உலகத்துக்குத் திரும்பியிருக்கிறார். ஓவியங்கள் வரையும் நேரம் போக மற்ற நேரங்களில் ஓவிய வகுப்புகள், பயிற்சி பட்டறைகள் நடத்துகிறார்.
நவம்பர் 3-ம் தேதி தொடங்கிய இந்த ஓவியக் காட்சி நவம்பர் 30-ம் தேதி வரை தக்ஷிண சித்ராவில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT