Last Updated : 04 Nov, 2016 10:47 AM

 

Published : 04 Nov 2016 10:47 AM
Last Updated : 04 Nov 2016 10:47 AM

பயிற்சி தந்த ‘பாரா’ பதக்கம்!

‘நமக்கு நாம்தான் போட்டி!’ இது மாரியப்பன்.

‘கல்வியைவிட விளையாட்டு மிகவும் முக்கியம்!’ இது தீபா மாலிக்.

‘தங்கப் பதக்கமே நமது லட்சியமாக இருக்க வேண்டும்!’ இது வருண் சிங் பாட்டி.

‘பயிற்சியில் கவனம்… கையில் பதக்கம்!’ இது தேவேந்திர ஜாஜாரியா.

ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் இப்படிச் சொல்லியிருந்தால், ‘சரிதான் போப்பா..!’ என்று மக்கள் நகர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று, இவர்கள் சொல்வது வேதவாக்கு!

2016-ம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்றது. இதுவரை நடைபெற்ற பாரலிம்பிக்ஸ் போட்டிகளிலேயே இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில்தான் இந்தியா மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளது. அந்தச் சாதனையைச் செய்த நாயகர்கள்தான் மேற்கண்ட வாசகங்களுக்குச் சொந்தக்காரர்கள்! அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் கடந்த வாரம் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பலத்த கைத்தட்டல்களுடன் வரவேற்பு, வீரர்ளுடன் பள்ளி மாணவர்களின் உரையாடல், ஆட்டோகிராஃப் வாங்கியவுடன் துள்ளிக் குதிப்பது, வீரர்களின் கைகளால் மாணவர்கள் விருது வாங்குவது என அந்த நிகழ்ச்சியில் ஆயிரம் வாட்ஸ் எனர்ஜி!

வழிகாட்டுதல் தேவை

உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த மாரியப்பன், “விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற நமக்கு நாமே போட்டியாக இருக்க வேண்டும். போட்டிக்கான பயிற்சியின் போது வேறு எந்த விஷயத்திலும் நம் கவனம் செல்லக் கூடாது. போட்டிக்கான பயிற்சியில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் ஒரு போட்டியாளர் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது “தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பல திறமையான போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கான தகுந்த வழிகாட்டுதல் இருந்தால், வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

விளையாட்டும் முக்கியம்

குண்டு எறிதல் போட்டியில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தீபா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை தீபா மாலிக்கை சேரும்.

“படிப்பை விட விளையாட்டு முக்கியம்” என்று அவர் கூறியவுடன் மாணவர்களிடையே அப்படியொரு அப்ளாஸ்!

மேலும் தொடர்ந்த தீபா “ஏதாவது ஒரு விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடினால், பல நற்பண்புகளை நாம் விளையாட்டில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம். கவனமுடன் செயல்படுதல், போட்டிப் பயிற்சிகளில் உண்மையாக இருத்தல், கடின உழைப்புடன் குறிக்கோளை நோக்கிப் பயணித்தல் என பல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி என்பது அடிப்படையான ஒரு திறனாக இருக்கிறதோ, அதே போல விளையாட்டிலும் நாம் நமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் முக்கியம்” என்றவர், சிறந்த விளையாட்டு வீரர் உருவாவதற்குச் சிறந்த பயிற்சியாளரே காரணம் என்றார்.

இந்தியாவில் பல துறைகளில் சிறந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சிறந்த பயிற்சி சென்றடைவதில்லை என்பது தீபாவின் குற்றச்சாட்டு!

சகோதரர்கள் நாங்கள்…

உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பனுடன் ஒரே பிரிவில் போட்டியிட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வருண் சிங் பாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

“மாரியப்பனும் நானும் போட்டியாளர்களாக இருந்தாலும் சகோதரர்களைப் போலவே இருக்கிறோம்” என்று வருண் கூறியதும், மாரியப்பன் மற்றும் வருண் இருவர் முகத்திலும் அப்படி ஒரு நெகிழ்ச்சி!

“எந்த ஒரு விளையாட்டுப் போட்டியிலும் நமது குறிக்கோள் என்பது ஒரு எல்லைக்குள் அமைந்துவிடக் கூடாது. தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டால் சாதனைகளைச் சுலபமாக அடையலாம்” என்றார்.

உயரம் தொட்டவருக்கு கார்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர ஜாஜாரியா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் இவர். “பயிற்சி ஒன்றே எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற அடிப்படையாக அமையும். பயிற்சிகளின் போது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், போட்டிகளின்போது நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விஷயங்களைப் பயிற்சிகளின்போதுதான் கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் உருவத்தை 80 அடி சுவர் ஓவியமாக மாணவர்கள் வரைந்திருந்தனர். மாரியப்பனுக்கு வேலம்மாள் பள்ளி சார்பாக கார் பரிசளிக்கப்பட்டது. தேவேந்திர ஜாஜாரியா, தீபா மாலிக், வருண் சிங் பாட்டி ஆகியோருக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது நிகழ்ச்சியின் ஹைலைட்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x