Published : 10 Oct 2022 03:30 PM
Last Updated : 10 Oct 2022 03:30 PM
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தாலும், எம்.எஸ் தோனி தொடர்பாக வெளியாகும் செய்திகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், தோனி தொடர்பான சமீபத்திய அப்டேட் ஒன்று சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர், வீராங்கனைகள், ஓய்வுக்குப் பிறகு வர்ணனையாளராவோ, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளராவோ தங்களது பணியைத் தொடர்வார்கள். ஆனால், கிரிக்கெட்டைத் தாண்டி வேறு சில துறைகளில் ஈடுபட்டு வரும் தோனி ’ஒரு பிசினஸ் மேக்னட்’ ஆக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
‘தமிழ் படம்’ சிவாவைப் போல ஒரே நேரத்தில் பல தொழில்களில் பிஸியாக இருக்கிறார் தோனி! விளம்பரப் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சென்னையின் எஃப்.சி கால்பந்து அணி உரிமை, ஹோட்டல், ஜிம், ஷூ பிராண்ட் நிர்வகிப்பது, இயற்கை விவசாயம் செய்வது என வெவ்வேறு துறைகளில் சம்பாதித்து வருகிறார் தோனி. இந்தப் பட்டியல் இத்துடன் முடியவில்லை. கிரிக்கெட் அகாடெமியை அடுத்து பள்ளிக்கூடம் நடத்துவது, திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றிலும் தோனி தடம் பதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தோனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ‘தோனி என்டெர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஏற்கெனவே, ‘தி ரோர் ஆஃப் தி லயன்’ என்கிற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், இனி நேரடி திரைப்படங்களைத் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களை மட்டுமே தோனி தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திரைப்பட தயாரிப்பில் அறிமுகமாகும் தோனிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், பாலிவுட்டைப் புறக்கணித்துவிட்டாரா என்ற கருத்தும் பரவலாக வைக்கப்படுகிறது. சமீப காலமாக வணிக ரீதியான வெற்றிகளைத் தென்னிந்திய திரைப்படங்கள் தந்து கொண்டிருக்கும் நிலையில், பாலிவுட் அதள பாதாளத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பாலிவுட் படங்கள், வசூல் ரீதியாக படுசுமாராக வியாபாரமாவது பாலிவுட்டின் பரிதாப நிலையை விளக்குகிறது.
Nop Hindi market is too competitive to enter Plus there too many production houses as compared to SIIMA industry.
— errOrnab एररनब (@TweetvaChan) October 9, 2022
இந்தச் சூழலில், பாலிவுட் பக்கம் செல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களை மட்டும் தோனி தயாரிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலுக்கு மீம்ஸ் குவிந்து வருகிறது. வியாபார யுக்தியைத் திறம்படக் கையாளத் தெரிந்தவர் இவர்தான் என்றும், தோனியும் பாலிவுட்டை புறக்கணித்துவிட்டார் என்றும் மீம்ஸ்கள் உலா வருகின்றன. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இப்போதே தோனி தயாரிக்க இருக்கும் முதல் தமிழ்ப் படத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை விவாதித்து வருகின்றனர் நெட்டிசன்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT