Published : 25 Nov 2016 12:10 PM
Last Updated : 25 Nov 2016 12:10 PM
ஊர் சுற்றிப் பார்க்கப் பிடிக்காதவர் உண்டா! அதிலும் விமானத்தில் பறந்து சென்று தைவானைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படியிருக்கும்! ஸ்கூட் ஏர்லைன்ஸூம் தைவான் நாடும் அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. இளம் மஞ்சள் நிறமும் வெள்ளையும் கலந்த புத்தம் புதிய ஸ்கூட் விமானத்துக்குள் ஏறும்போதே உற்சாகம் தொற்றிக்கொண்டது. நடுராத்திரி சென்னையிலிருந்து விமானம் புறப்பட்டதால் வானம், மேகம், கடல் என எதையுமே பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தைப்போக்க விமானத்துக்குள்ளேயே பல சுவாரசியங்கள் காத்திருந்தன.
பொதுவாக விமானம் புறப்பட்டதும் மொபைல் ஃபோனை அணைத்துவிட வேண்டும். அப்படியே ‘ஆன்’ செய்யப்பட்டிருந்தாலும் சிக்னல் எடுக்காதே! ஆனால் ஸ்கூட் விமானத்தில் குறைந்த கட்டணத்தில் வைஃபை வசதி அளிக்கப்படுகிறது. மின்னஞ்சல், குறுந்தகவல்களை இதன் மூலம் அனுப்பினோம். அதைவிட ஸ்பெஷல் ‘ஸ்கூடிவி’ (ScooTV). நம்முடைய லேப்டாப்பில், மொபைலில் இன்ஃபிளைட் போர்ட்டல் (inflight portal) வசதி மூலமாகத் திரைப்படங்கள் பார்க்கவும், நம்முடைய கேட்ஜெட்களை சார்ஜ் செய்யவும் வசதிகள் அளிக்கப்பட்டன.
ஹைடெக்கான காதல் தேசம்
இளைஞர்களின் சாய்ஸாக இருப்பதற்கான மேலும் பல அம்சங்களை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சியான ஸ்கூட் விமானம் கொண்டிருக்கிறது. இப்படி ஜாலியாகப் பறந்து சென்று உலகின் பிரம்மாண்டமான விமான நிலையங்களில் ஒன்றான சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியபோது ஹைஃபை ஷாப்பிங் மாலில் தரை இறங்கியது போல இருந்தது. சில மணி நேரங்களில் தைவானுக்குச் செல்லும் விமானத்தில் அமர்ந்து மேகங்களுக்குள்ளே மிதந்தோம்.
கடலால் சூழப்பட்ட அழகிய குட்டித் தீவு நாடு தைவான். ஹைடெக் கேட்ஜெட்களைத் தயாரிப்பதில் கில்லாடியான தைவானின் தலைநகரம் தைப்பே. அங்கு முழுக்க ஸ்கைஸ்கிரேப்பர்கள், சுதந்திரமாக உலாவும் இளம் காதலர்கள், விதவிதமான மாடல்களில் ஸ்கூட்டர்கள், இரவில் திருவிழாக் கோலமாக ஊரை மாற்றும் ‘நைட் மார்க்கெட்’ என சுவாரசிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில் தைவானின் வடக்கு, தெற்குப் பகுதிகள் முழுவதும் பசுமையான மலைகள் கம்பீரமாக நிற்கின்றன, ஆங்காங்கே தூய்மையான நீர் நிலைகள் குளிர்ச்சி ஊட்டுகின்றன, பெளத்த-தாவோ கோயில்கள் மனதுக்கு அமைதி கொடுக்கின்றன.
ஐயோ என்னோட கேமரா!
தைப்பேயிலிருந்து அதிவேக ரயிலில் 400 கிலோ மீட்டர் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் விருட்டெனக் கடந்து பிண்டாங் நகரில் இறங்கியபோது மழைச் சாரம் ‘வெல்கம்’ என்றது. ஊருக்குள் போகும் வழி எல்லாம் வலது புறம் கடலும் இடது புறம் பச்சைப் பசேல் மலைத்தொடர்களும் கூடவே வந்தன. ஆனால் வழிநெடுகப் பார்த்த மரங்கள் செடிகள் எல்லாமே பாதியாகச் சாய்ந்து நின்றன. காரணம் சில நிமிடங்களில் புரிந்தது!
பிண்டாங்கை சொர்க்க பூமியாக மாற்றும் யோஹோ பீச் தங்கபஸ்பம் போல மின்னும் அதன் மணல் பரப்பினாலும், பவளப் பாறைகளாலும், பால் ஏடு போன்ற அலைகளாலும் மயக்கியது. அதில் லயித்துப்போவதற்குள் திடீரெனச் சுற்றி அடித்தது சூறாவளிக் காற்று. ஆளைத் தள்ளும் அந்தக் காற்றை எதிர்த்து நிற்பதற்குள் சொல்லாமல் கொள்ளாமல் கொட்டியது அடைமழை. “ஐயோ! என்னோட கேமரா போச்சே!” எனப் பதறிப் படபடவெனப் பைக்குள் கேமராவைத் திணிப்பதற்குள் சட்டென மழையும் காற்றும் நின்று அமைதி திரும்பியது. பிண்டாங்கின் தனித்துவமே சில நொடிகள் மட்டுமே சுற்றி அடிக்கும் சூறாவளிக் காற்றும் பெரு மழையும்தான். அதனால்தான் அங்கிருக்கும் மரங்கள் எல்லாம் சாய்ந்தே இருக்கின்றன.
கூகுளில் பார்த்தவை தட்டில்!
இதை ரசித்தபடியே கடற்கரையோரம் அழகுணர்ச்சியோடு கட்டப்பட்டிருந்த யோஹோ பீச் ரெஸார்ட்டின் உணவகத்தில் பிரத்யேகமான தைவான் உணவைச் சுவைக்கத் தயாரானோம். அலை ஓசை கேட்டபடியே உணவருந்த உட்கார்ந்த எங்களுக்குக் குழந்தைச் சிரிப்பும் குறும்புத் தனமும் நிறைந்த முகத்தோடு அழகிய பீங்கான் கப்பில் தண்ணீர்க்குப் பதிலாகப் பால் கலக்காத தேநீர் நிரப்பினார் உணவகத்தில் பணிபுரியும் தோழி. சீனக் கலாச்சாரத்தில் தேநீருக்குத் தனி மகத்துவம் உண்டு.
அந்தத் தேநீரின் சுவையும் தனித்துவமானது. நிஜமாகவே தேனின் நிறமும் சுவையும் அதில் இழையோடுகிறது. “சாப்பிடும்போது நாங்கள் தண்ணீருக்குப் பதிலாக ‘தே’ மட்டும்தான் குடிப்போம்” என்றார் எங்களுடைய பயண வழிகாட்டி ஹூ. ஆம், தெற்கு சின பகுதிகளில் ‘தே’ எனவும் வட சீனப் பகுதிகளில் ‘சா’ என்றும் தேநீர் அழைக்கப்படுகிறது. இப்படித்தான் இந்தியில் ‘சாய்’, தமிழில் ‘தேநீர்’ சொற்கள் உருவாயினவோ! பீட்டா ரொட்டித் துண்டுகள், டீ எக், அவோகாடோ ப்ரோக்கோலி என இதுவரை கூகுளில் மட்டுமே பார்த்த உணவு வகைகளை ஆசையாகப் பரிமாறினார்கள் உணவகத்தின் தலைமை ஷெஃப் தொடங்கி அத்தனை பேரும்.
கடலும் காடும் ஒரே இடத்தில் பார்த்ததுண்டா? யோஹோ கடற்கரையின் எதிரில் காத்திருந்தது அந்த ஆச்சரியம். ‘கிராண்ட்பாஸ் கோகோ ஃபார்ம்’ எனும் கோகோ காட்டுக்குள் நடைபெற்ற பப்பூவா நியூ கினி பழங்குடியினரின் நடனமும் கவர்ந்திழுக்க, குடை பிடித்துப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
(பயணம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT