Published : 18 Nov 2016 10:48 AM
Last Updated : 18 Nov 2016 10:48 AM
நவம்பர் 8, 2016
இரவு. டி.வி. சீரியலில், ஏதோ காரணத்துக்காக கதையில் வரும் 15 கேரக்டர்களும், ஒரே சமயத்தில் ‘க்ளோஸ் அப்’பில் அதிர்ச்சியடைந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஃப்ளாஷ் நியூஸில் ஓடிய ‘ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற செய்தியைப் பார்த்து இல்லத்தரசிகள், சீரியல் கேரக்டர்களை விட நூறு மடங்கு அதிர்ந்துபோனார்கள். ஏனெனில் அவர்களிடம் கொஞ்சம் பணம் இருந்தது. அது அவர்களின் கணவர்களால் வரி செலுத்தப்பட்ட பணம்தான். ஆனால் கணவர்களுக்குத் தெரியாத கறுப்புப் பணம்!
நான் இந்தச் செய்தியைப் பார்த்தபோது, ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்படும் திட்டம் என்ற முறையில் எனக்கு சந்தோஷம்தான். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு சின்னக் கவலை. என் கையில் சில்லறையாக நூற்றைம்பது ரூபாய்தான் இருந்தது. ஆனால், என் மனைவி மட்டும் இது குறித்து எந்தக் கவலையும் படாமலிருப்பதைப் பார்த்து உஷாரானேன்.
நிச்சயமாக இவள் கையில் ஏதோ பணம் இருக்கிறது. “உன்கிட்ட ஏதும் பணம் இருக்கா?” என்றேன் பணிவாக. “ம்... ஆயிரம் ரூபாய் இருக்கு…” என்ற என் மனைவி, பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு தண்ணீர் ஜக்கின் மூடியைத் திறந்து காண்பித்தாள். உள்ளே நூறு ரூபாய் நோட்டுகளில், நீண்ட நாட்கள் கழித்து வெளிச்சத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் மகாத்மா காந்தி என்னைப் பார்த்துச் சிரித்தார்.
இதுபோல் அன்றிரவு நாடு முழுவதும், லட்சக் கணக்கான அஞ்சறைப் பெட்டிகள், உண்டியல்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உளுத்தம்பருப்பு டின்கள் திறக்கப்பட்டன. தங்களுக்குத் தெரியாமல் மனைவிகள் பணம் சேர்த்து வைத்ததற்காகக் கோபப்படுவதா, இல்லை, இக்கட்டான தருணத்தில் சில்லறை நோட்டுகள் தந்து கைகொடுப்பதற்காகச் சந்தோஷப்படுவதா என்று புரியாமல் கணவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். ஒரு பெண்மணி பல்லாண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த தன் உண்டியலை உடைத்து எண்ணி, அதில் இருபதாயிரம் ரூபாய் இருப்பதைப் பார்த்து அவரே பதறிவிட்டார்.
பணிக்குச் செல்லாத இல்லத்தரசிகள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் அவை ஒவ்வொரு நோட்டாக, தனித்தனியாக நான்காக மடித்து வைக்கப்பட்டிருக்கும். அவை நெடுநாட்களாக மடிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால், அதனைப் பிரித்தாலும், நோட்டின் மடிப்புகள் தெளிவாகத் தெரியும்.
மேலும் இல்லத்தரசிகளின் பணத்துக்கு ஒரு தனி வாசனையும் உண்டு. அஞ்சறைப் பெட்டியில் வைத்திருந்த பணத்தில் மசாலா வாசனை. கோதுமை மாவு டப்பாவில் வைத்திருந்த பணத்தில் கோதுமை மாவு வாசனை. சர்ஃப் டப்பாவில் இருந்த பணத்தில் சோப்புப் பவுடர் வாசனை. இந்த வாசனை நோட்டுகளை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.
நான் சென்னைக்கு வேலைக்கு வந்த புதிதில், எனது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். ஏறத்தாழ எட்டு வருட காலம் படுத்த படுக்கையாக இருந்த என் பாட்டியை என் மாமாவும், அத்தையும் நன்கு பராமரித்துவந்தார்கள். ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாட்டி, “டேய்… கதவைச் சாத்திட்டு வா…” என்று கூற, நான் கதவைச் சாத்திவிட்டு வந்தேன். அவர் தனது கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையின் தலைமாட்டைத் தூக்கினார், அங்கு நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த, ஏராளமான பத்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தார். பின்னர் தலையணைக்குக் கீழ், மருந்து டப்பாவிலிருந்து என்று வரிசையாக அவர் பத்து ரூபாய் நோட்டுகளாக எடுக்க, நான் அதிர்ந்துபோனேன். என்னிடம் ரகசியம் பேசுவது போல், “எவ்வளவு இருக்குன்னு எண்ணு” என்றார். நான் எண்ணிவிட்டு, “ரெண்டாயிரத்து நானூறு ரூபாய்...” என்றபடி பணத்தை முகர்ந்து பார்த்தேன். அதில் ஜெலுஸில், தைலம், மாத்திரைகள் என்று எல்லாம் கலந்த மருந்து வாசனை அடித்தது.
என் மாமா பல ஆண்டுகளாக இளநீர் வாங்குவதற்காக, லிம்கா வாங்குவதற்காக என் பாட்டிக்குக் கொடுக்கும் காசிலிருந்து சேர்த்த பணம் அது. நான், “உங்களால நடக்கவே முடியாது. இந்த வயசுல பணத்தைச் சேர்த்து என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டபோது, அதற்கு அவரிடம் பதில் இல்லை. வெளியே கத்திக்கொண்டிருந்த காகத்தை ஜன்னல் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர், “தெரியல... இப்படியே சேர்த்துப் பழக்கமாயிடுச்சு...” என்று பணத்தை வாங்கி மீண்டும் மெத்தைக்குக் கீழ் வைத்துக்கொண்டார். இனி அந்தப் பணத்தை அவர் செலவழிக்க வழியே இல்லை என்ற நிலையிலும், அவர் சேமித்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்த பிறகு, அவருடைய பீரோவிலும், பெட்டியிலும் ஆங்காங்கே செருகி வைத்திருந்த பணத்தை எண்ணியபோது எட்டாயிரம் ரூபாய் இருந்தது. எல்லாம் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த தனித் தனி நோட்டுகள்.
பல ஆண்டுகள் கழித்து, அதே போன்ற நோட்டுகளை மீண்டும் பார்த்தேன். கடந்த ஆண்டு என் அம்மா சென்னை வந்து விட்டு ஊருக்குத் திரும்பினார். எக்மோரில் ரயில் ஏற்றிவிடுவதற்காகச் சென்றிருந்தேன். ரயில் கிளம்பும் நேரத்தில் பேச்சுவாக்கில், “நாளைக்கு என் பிறந்த நாள்” என்றேன். “ஆமாம்டா… நான் மறந்தே போயிட்டேன்” என்று ஒரு வினாடி யோசித்துவிட்டு, தனது பர்ஸை எடுத்தார். கார்டு விசில் ஊதும் சத்தம் கேட்டது. “அம்மா… நான் கிளம்புறேன்…” என்று கூற, “இருடா” என்ற அம்மா பர்ஸில் துளாவி நான்கு, நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி வெளியே எடுத்தார், “இதுல எதாச்சும் ட்ரெஸ் வாங்கிக்கோ...” என்று பணத்தை நீட்டினார். “என்கிட்ட பணம் இருக்கும்மா” என்றபோது ரயில் நகர ஆரம்பித்தது. “உன்கிட்ட இல்லன்னா கொடுக்குறேன்? வாங்கிக்க” என்று என் கையில் பணத்தைத் திணித்தார்.
ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் மகனின் பிறந்த நாளுக்கு, எந்த வேலையிலும் இல்லாத, ஒரு அறுபத்தைந்து வயதுத் தாய் கொடுத்த காசு அது. எனது கல்லூரிக் காலத்தில், அம்மா என் மீது கோபமாக இருக்கும்போதெல்லாம், “தாயே... இந்தப் பாவிய மன்னிச்சுடு” என்று அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட, அவர் சிரித்துவிடுவார். அதன் பிறகு நெடுநாள் கழித்து அன்று ஓடும் ரயிலில், நான்கு பேர் வேடிக்கை பார்க்க, மெல்லக் குனிந்து என் அம்மாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு வேகமாக ரயிலிலிருந்து இறங்கினேன். ரயில் என்னைக் கடந்து சென்றதும், அந்த நோட்டுகளைப் பல வினாடிகள் பார்த்தேன். நீண்ட காலமாக மடித்து வைக்கப்பட்டு, மொடமொடப்பாக இருந்த நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணினேன். ஆயிரம் ரூபாய் இருந்தது. முகர்ந்து பார்த்தேன். அதில் அந்துருண்டை வாசனை வந்தது. அம்மா அதை பீரோவில் வைத்திருந்திருப்பார்.
அதன் பிறகு எத்தனையோ மாதங்கள் ஓடிவிட்டன. இருந்தாலும் எழும்பூர் ரயில் நிலையத்தில், அந்துருண்டை வாசனை அடிக்கும் அந்தப் பழைய நூறு ரூபாய் நோட்டுகளுடன், நான்காம் நம்பர் பிளாட்ஃபார்மில் நின்ற அந்த இரவை இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை. இன்று உங்கள் கையில் கிடைக்கும் ஒரு மடிப்புக் கலையாத நோட்டில், ஏலக்காய் வாசனையோ, மஞ்சள் தூள் வாசனையோ, தைல வாசனையோ அடித்தால், அது ஒரு தாய்க் காசின் வாசனை. அது உங்கள் தாயின் காசாகக்கூட இருக்கலாம்!
(தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT