Last Updated : 11 Nov, 2016 11:57 AM

 

Published : 11 Nov 2016 11:57 AM
Last Updated : 11 Nov 2016 11:57 AM

காதல் ‘நீயே!’

காதலும் நடனமும் இணையும் புள்ளியில் ஊற்றெடுக்கும் இசை எப்படியிருக்கும்? அதற்குக் குட்டி சாம்பிள் சமீபத்தில் யூடியூப்பில் வெளியான ‘நீயே’ பாடல். ஒரே ஒரு முறை மட்டும் பார்த்து, கேட்டுவிட்டு ‘ரீபிளே’ கிளிக் செய்யாமல் இருந்தால் ஒரு கோடி பரிசு என்றே இந்தப் பாடலை வைத்துச் சவால் விடலாம். அந்த அளவுக்கு இசையிலும் காட்சி அமைப்பிலும் ‘நீயே’ வேற லெவல்!

ஷரண்யா ஸ்ரீநீவாஸின் இனிய குரலும் ஷ்ரேயா தேஷ்பாண்டேயின் வசீகரமான ‘கன்டம்ப்ரரி’ நடனமும் மனதைக் கொள்ளை அடிக்கின்றன. அதிலும் பாரம்பரிய ஷெனாய் இசைக் கருவியின் நாதத்தையும் நவீன இசை வடிவமான டப்ஸ் ஸ்டெப்பையும் அசத்தல் காம்போவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

ஐந்து நிமிடப் பாடலில் மோதலுக்குப் பின் காதல் என்கிற இளமை துள்ளும் கதையைக் காற்றாய் வருடும் இசையாலும் அனாயாசமான நடனத்தாலும் சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர் கோம்த்தேஷ் உபாதே, இசையமைப்பாளர் ஃபன்னி கல்யாண், பாடலாசிரியர் அறிவு மற்றும் குழுவினர்.

பல முறை நீயே

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசை பயின்று இசையமைப்பாளரானவர் ஃபன்னி கல்யாண். “சின்ன வயசுல இருந்தே நான் ஒரு ரஹ்மேனியாக். ஆனால் முறையாக இசை கத்துக்கல. சென்னையில்தான் இஞ்ஜினியரிங் படிச்சேன். சொந்த ஊரான ஹைதராபாத்தில் ஐ.டி. கம்பனியில வேலை கிடைச்சதால அங்க போயிட்டேன். ஆனால் எப்பப் பார்த்தாலும் எப்படியாவது ரஹ்மானைச் சந்திக்கணும்னு தோணிக்கிட்டே இருந்தது. 2008-ல ரஹ்மான் மியூஸிக் ஸ்கூல் ஆரம்பிச்சதும் எதையுமே யோசிக்காம வேலையை ராஜினாமா செஞ்சிட்டு கே.எம்.கன்ஸர்வேட்ரியில சேர்ந்திட்டேன்” என்கிறார் இந்தப் பாடலின் இசையமைப்பாளர் ஃபன்னி கல்யாண்.

2012-ல் ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ படம் மூலமாகத் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரானார். ஆனால் அந்தப் படம் வெளிவராததால் டோலிவுட்டுக்குப் போனார் ஃபன்னி. இருந்தாலும் மனதுக்குள்ளே தமிழ்ப் பாடல்கள் ஓடிக்கொண்டே இருந்தன என்கிறார். அப்படி இரண்டாண்டுகளுக்கு முன்பே கம்போஸ் செயததுதான் ‘நீயே’.

“நீயே என்கிற வார்த்தை மீண்டும் மீண்டும் பாடலில் வரணும்னு நினைச்சேன். அதனால ‘நீயே’ என எழுதிப் பாடலை கம்போஸ் பண்ணி இயக்குநர் கோம்த்தேஷிடம் காட்டினேன். டியூன் செம்ம கேட்சியாக இருக்கு. இதுக்கேத்த மாதிரி கான்செப்ட் ரெடி பண்றேன்னு சுறுசுறுப்பாகப் புறப்பட்டார் கோம்த்தேஷ். பிறகு பாடலாசிரியர் அறிவு ரொம்ப அழகாக முழுப் பாடலையும் எழுதினார்” என்கிறார் ஃபன்னி.

கிரவுட் ஃபண்டிங் படம்

ஃபன்னியும் கோம்தேஷூம் ‘ரஹ்மான் ஃபேன்ஸ்’ என்கிற யாஹூ குரூப் மூலமாக நண்பர்கள் ஆனவர்கள். கோம்த்தேஷ் கன்னட சூப்பர் ஹிட் திரைப்படங்களான ‘லூசியா’வில் செகண்ட் யூனிட் கேமரா மேனாகவும், ‘யூ டர்ன்’ படத்தில் துணை இயக்குநராகவும் வேலை பார்த்தவர். “ஃபன்னியின் இசையைக் கேட்டதும் ‘ரொமான்ஸ் இன் டான்ஸ்’ங்கிற கதையைச் சொல்லணும்னு தோணுச்சு. பெண்ணுடைய பார்வையில் இருந்து கதை தொடங்கறதால நடனத்திலும் தோற்றத்திலும் ஈர்க்கக்கூடிய இளம் பெண் திறமையாளரைத் தேடி பெங்களூருவில் ஷ்ரேயாவைக் கண்டுபிடிச்சேன். ஹீரோ சாக்லேட் பாயாக இல்லாமல் ரஃப் லுக்ஸ் வேணும்னு நிரஞ்சன் ஹரிஷை தேடிப் பிடிச்சேன்” என்கிற கோம்த்தேஷ், படத்தை முழுக்க முழுக்க கிரவுட் ஃபிண்டிங் மூலமாகத் தயாரித்திருக்கிறார்.

அப்பாவுக்குச் சந்தோஷம்

பாடலுக்கு உயிர் சேர்த்திருக்கும் பாடகி ஷரண்யா பாடகர் நிவாஸின் மகள். ஏற்கெனவே ‘ராஜா மந்திரி’ படத்தில் ‘லெகுவா லெகுவா’, மதன் கார்க்கியின் ‘டூப்பாடூ’ தயாரிப்பில் ‘நானொரு கோழை’ உள்ளிட்ட சில இனிய பாடல்களைப் பாடிப் பிரபலமாகிவருகிறார். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி கீதம், மேற்கத்திய இசை என ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் ஷரண்யா ஸ்ரீநிவாஸூம் ரஹ்மான் இசைப் பள்ளியில் படித்தவர். அப்போதுதான் ஃபன்னியுடனான நட்பு ஏற்பட்டது என்கிறார். “எப்பவுமே ரெக்கார்டிங் போறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட பாடிக் காட்டுவேன். அவரும் உச்சரிப்பில் மாற்றங்களையும் சில இசை நுணுக்கங்களையும் கத்துத் தருவார். ஆனால் ‘நீயே’ பத்தி ஆரம்பத்துல அதிகமாக அவர் கிட்ட சொல்லலை. ஜனவரியிலே பாட்டு ரெக்கார்டிங் முடிஞ்சுது. விஷ்வலாக செம்மையா பண்ணணும்னு அக்டோபர் வரை எடுத்துக்கிட்டாங்க. கடைசில பாடல் வெளிவந்தப்ப கேட்கவும் பார்க்கவும் ட்ரீமியா இருக்குனு அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார்” என்கிறார் ஷரண்யா நிவாஸ்.

கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் முறை ‘நீயே’ பார்க்க, கேட்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் ‘நீவே’ என தெலுங்கிலும், ‘நீனே’ என கன்னடத்திலும் தமிழைக் காட்டிலும் சக்கைப்போடு போட்டுவருகிறது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் நானி, நடிகர் நந்து, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் டிவீட் செய்தும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்தும் இந்தப் பாடலுக்குத் தங்களுடைய லைக்ஸைக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் இந்த இளம் திறமையாளர்களை டோலிவுட்டும் மல்லுவுட்டும் அள்ளத் தொடங்கிவிட்டன. தமிழ் ரசிகர்களும் தமிழ் சினிமாவும் இவர்களைச் சீக்கிரம் அடையாளம் காண வேண்டும்!

பார்க்க-கேட்க: > goo.gl/qpduWd

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x