Published : 18 Nov 2016 11:02 AM
Last Updated : 18 Nov 2016 11:02 AM
‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இந்த நவம்பர் 16-ம் தேதியுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
2013-ம் ஆண்டு மும்பையின் வாங்க்டே மைதானத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது இருநூறாவது மற்றும் கடைசி ஆட்டத்தை ஆடினார். இதற்கு முன் 2012-ம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
‘கிரிக்கெட்டின் கடவுள்’ ஓய்விற்குப் பின் இப்போது என்ன செய்கிறார்?
# ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. 2012-ம் ஆண்டிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துவரும் சச்சின் நாடாளுமன்றத்துக்கு வராமலேயே இருந்துவந்ததால் பல விமர்சனங்களைச் சந்தித்தார். அதனால் சென்ற வருடம் நாடாளுமன்றத்துக்கு வந்து ‘அட்டென்டன்ஸ்’ போட்டார்.
# தனது சக கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாது மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் சச்சின் நன்கு ஊக்கமளிப்பவர். சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று பெருமை சேர்த்தவர்களை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். கால்பந்துக்கான ‘இந்தியன் சூப்பர் லீக்’கில் ‘கேரளா பிளாஸ்டர்’ அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
# சச்சின் போரியா மஜும்தாருடன் எழுதிய தனது சுயசரிதையான ‘பிளேயிங் இட் மை வே’ நூலை வெளியிட்டார். இந்நூல் முன்பதிவிலும் விற்பனையிலும் பல ரெக்கார்டுகளை நிகழ்த்தியது. நூல் வெளிவருவதற்கு முன்னர் நூலில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறபட்ட சில தகவல்களால் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.
# இது ‘பயோபிக்’ படங்களின் ட்ரெண்ட். மில்கா சிங், மேரி கோம், எம்.எஸ். தோனி ஆகியோரின் வரிசையில் தற்போது சச்சின்தான் அடுத்த டார்கெட். அவரின் வாழ்க்கையைத் தழுவி பாலிவுட்டில் படம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது. ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற இந்தப் படத்தில் சச்சினும் அவரது மகனும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
# சமீபத்தில் லண்டனில் சச்சினுக்கு மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஓய்விற்குப் பின்னும் சில காயங்கள் பாதிப்பைத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்குச் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தங்கள் அக்கறையைப் பதிவு செய்துள்ளனர்.
# “என் வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸான கிரிக்கெட் முடிந்துவிட்டது. எனது இரண்டாவது இன்னிங்ஸ், என் நலனுக்குக் காரணமான மக்களுக்குக் கைம்மாறு செய்வதாகவே இருக்கும்” என சச்சின் தனது ஓய்வின்போது அறிவித்ததைத் தற்போது நிறைவேற்றி வருகிறார். எம்.பி. சச்சின் ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவிலுள்ள ‘டோன்ஜா’ என்ற கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார். மேற்கு வங்கத்திலுள்ள பள்ளி ஒன்றைப் புனரமைத்துத் தந்துள்ளார். மேலும், போதை மற்றும் ஆல்கஹாலுக்கு எதிரான கேரள மாநிலத்தின் பிரசாரத் தூதுவராகவும் உள்ளார்.
இந்த இன்னிங்ஸி லும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் சச்சின்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT