Published : 07 Oct 2016 08:22 AM
Last Updated : 07 Oct 2016 08:22 AM
சென்னை ஏரிகளையும் நீர்நிலைகளையும் நான் தேடிய பயணத்தைப் பார்ப்பதற்கு முன்னால், ‘பேட்லிங் மூலமாக என்ன பெரிதாகச் செய்துவிட முடியும்?’, ‘பேட்லிங் என்பது பொழுதுபோக்கு சாகச விளையாட்டுத்தானே?’ என்பன போன்ற கேள்விகள் எழுவது சாதாரணமானதுதான். இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமென்றால் பேட்லிங் பற்றிய புரிதல் நமக்குத் தேவை.
ஆதி அலைச்சறுக்கு
பொதுவாக பேட்லிங் எனப்படுவது, ஆங்கிலத்தில் Stand up paddling அல்லது Paddle Boarding எனப்படுகிறது. சுருக்கமாக SUP. ‘சர்ஃபிங்’ என்றால் அலையின் வீச்சில் ஒரு பலகையின் மேல் உடலைச் சமநிலைப்படுத்திச் செல்லும் சாகச விளையாட்டு. வெளிநாடுகளில் சர்ஃபிங் பிரபலமாவதற்கு முன்பே, நம்ம ஊரில் மீனவச் சிறுவர்களைக் கடலுக்குச் செல்லப் பழக்குவதற்குத் தட்டையான பலகையைக் கொடுத்துக் கடலுக்கு அனுப்புவது வழக்கம். இதனால், கடலைப் பற்றிய பயம் சின்ன வயசிலேயே அவர்கள் மனதைக் கடந்து ஓடிவிடும்.
அந்த மரப்பலகையே இன்றைக்கு ஃபைபர் அல்லது பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட சர்ஃபிங் பலகையாகப் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. கடல் அலைகளின் வேகம், வீச்சுக்கு ஏற்ப, நம் காலுக்குக் கீழே இருக்கும் பலகையைச் சமநிலைப்படுத்தி சறுக்கிச் செல்வதுதான் சர்ஃபிங். பலகையைச் சமநிலைப் படுத்துவதற்கு நம் கையில் கூடுதலாக ஒரு துடுப்பும் இருந்தால், அதுதான் பேட்லிங்.
3000 ஆண்டு சாகசம்
வட அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் சிறுபடகு பந்தயப் போட்டியின் கோட்டோவியம் |
நீர் மேல் சாகசம் செய்யும் இந்த பேட்லிங் சமீபத்தில் தோன்றிய ஒன்றல்ல. அது நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதைப் பற்றித் தேடியபோது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் தென் அமெரிக்காவிலும் மீன் பிடிக்கவும் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கும் பேட்லிங் பலகைகள் பயன்பட்டிருக்கின்றன.
அதேபோல 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தென்னமெரிக்காவில் பெரு தீவைச் சேர்ந்த மீனவர்கள் கட்டைகளை இணைத்துக் கட்டி, நீளமான மூங்கிலைத் துடுப்பாகப் பயன்படுத்திப் பேட்லிங் செய்திருப்பது பதிவாகியிருக்கிறது.
ஹவாய் பலகை
உலகப் புகழ்பெற்ற ஐரோப்பிய மாலுமி ஜேம்ஸ் குக், ஹவாய்த் தீவுக்குச் சென்ற முதல் ஐரோப்பியர். தன்னுடைய பயணக் கட்டுரை ஒன்றில் ஹவாய் மக்கள் ‘He’e nalu' என்ற மரத்தில் தயாரிக்கப்பட்டப் பலகையைப் பயன்படுத்தியதைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பகுதி கிராமங்களின் தலைவர் ஐந்து மீட்டர் நீளம் கொண்ட நீண்ட பலகையையும், சாதாரண மக்கள் இரண்டிலிருந்து மூன்று மீட்டர் நீளமுள்ள பலகையையும் இதற்காகப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பலகைகளைக் கொண்டு அவர்கள் மீன்பிடித் தொழில் செய்திருக்கிறார்கள், 20-லிருந்து 40 மீட்டர்வரையிலான உயரத்துக்கு ஆர்ப்பரிக்கும் அலைகளின் உச்சியில் ஏறி விளையாடியிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, அந்தப் பகுதியில் கடற்கொள்ளையரின் அட்டூழியம் அதிகம். கடற்கொள்ளையர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து தற்காத்துக்கொள்வதற்கு அலைகளின் உச்சியில் ஏறிப் பார்க்க இந்த பேட்லிங் பலகை அவர்களுக்கு உதவியாக இருந்தது, ஜேம்ஸ் குக்கின் குறிப்பிலிருந்து தெரியவருகிறது.
வந்தது விளையாட்டு
இப்படி முறைப்படுத்தப்படாத வகையில் மீனவர்கள் பேட்லிங் பலகையைப் பயன்படுத்தி வந்தாலும், 1940-ல்தான் பேட்லிங்குக்குத் தகுதிபெற்ற பயிற்சியாளர்கள் உருவானார்கள். இப்போது இருப்பது போன்ற முறையான வடிவத்தைக் கொண்ட பேட்லிங் பலகையும் துடுப்பும் (SUP) கொண்ட விளையாட்டு உருவானது.
அதன் பிறகு கரைக்கு வரும் அலைகளில் பேட்லிங் பலகையால் விளையாட ஆரம்பித் தனர், 'Swell' அலைகளில் சறுக்கிக் கடந்து போக ஆரம்பித்தனர். இப்படியாக வளர்ந்த அலைச்சறுக்கு விளையாட்டு அலைகளைக் கடந்து செல்லவும் அநாயாசமாகக் கடலில் விளையாடவும், இன்றைக்குப் பரவலாகியிருக்கிறது. மேலை நாடுகளில் அலைச்சறுக்கு விளையாட்டு பரந்த அளவில் நடக்கிறது. இதற்கென்று போட்டிகளும்கூட நடத்தப்படுகின்றன.
பிரிட்டனைச் சேர்ந்த தச்சர் சார்லி ஃபோர்ஸ், 1953-ல் மரத்தில் வடிவமைத்த அலைச்சறுக்குப் பலகை |
தவறவிடும் வாய்ப்பு
சர்ஃபிங்கைவிட எளிதான, பலகை மேல் துடுப்புப் போடும் பேட்லிங் இந்தியாவில் பரந்த அளவில் விளையாடப்படுவதற்கு அதிகபட்ச சாத்தியம் இருக்கிறது. ஏனென்றால், நம்மிடம்
1. மாசுபடாத பிரம்மாண்டமான ஏரிகள்
2. வற்றாத ஜீவ நதிகள்
3. கழிமுகங்கள் - பொழில்கள் (Estuary)
4. மொத்தத்தில் 7,500 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை போன்றவை உள்ளன.
இந்த நீர்நிலைகளில் இயற்கையின் வீச்சால் பல ஆயிரக்கணக்கான, விதவிதமான, ஆச்சரியப்படுத்தும் தாவர வகைகள், உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. அந்த உயிர் வளங்களின் முக்கியத்துவம் கருதியும் அவற்றைப் பாதுகாக்கவும், ‘பேட்லிங்’ விளையாட்டை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இதில் நாம் போக வேண்டிய தூரம் நிச்சயமாக அதிகம்.
தொடர்புக்கு: wellsitekumaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT