Published : 21 Oct 2016 10:57 AM
Last Updated : 21 Oct 2016 10:57 AM
வாழ்க்கையைக் கனவுகளுக்கான தேடலிலும், அதை நனவாக்குவதற்கான பயணத்திலும் எந்த சமரசத்தையும் செய்துகொள்ள இன்றைய இளைஞர்கள் தயாராக இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை மனதில் வைத்துத்தான் தன்னுடைய முதல் நாவலான ‘எவ்ரிஒன் ஹேஸ் எ ஸ்டோரி’ எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார் சவி சர்மா. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சுய பதிப்பாக வெளியான இந்தப் புத்தகத்தின் 5 ஆயிரம் பிரதிகளும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. அதற்குப் பிறகு, ‘வெஸ்ட்லேண்ட்’ பதிப்பகத்தினர் இந்தப் புத்தகத்தை மறு பதிப்பாக இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டனர். இதுவரை 85,000 பிரதிகள் விற்பனையாகியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் பதிப்பகத்தார்.
சமீபத்தில், இந்தப் புத்தகத்தின் வெளியீட்டுக்காக சென்னை ‘ஸ்டார்மார்க்’ புத்தக அங்காடிக்கு வந்திருந்த சவி சர்மா தன்னுடைய நாவலின் வெற்றி அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த சவி சர்மா, தன்னுடைய எழுத்தாளர் கனவைப் பின்தொடர்வதற்காக சி.ஏ. படிப்பைப் பாதியில் விட்டிருக்கிறார். “எனக்குப் பள்ளி பருவத்திலிருந்தே கதைகள் சொல்வதில் மிகுந்த ஆர்வமிருந்தது. அதுதான் இருபத்திரண்டு வயதில் என் கனவை நோக்கிப் பயணப்பட வைத்திருக்கிறது. சி.ஏ. படிப்பதை நிறுத்திவிட்டு எழுத வந்ததை ஆரம்பத்தில் என் பெற்றோர்களாலும் நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால், நான் பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த நாவல் வெளியானவுடன் அவர்கள் அனைவரும் என்னைப் புரிந்துகொண்டார்கள். உங்களுடைய மனதுக்கு எது சரியாகப்படுகிறதோ அதை யார் தடுத்தாலும் பயமுறுத்தினாலும் தொடர வேண்டும் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன்” என்கிறார் சவி சர்மா.
எழுத்தாளராக முயற்சி செய்துகொண்டிருக்கும் மீரா, உலகம் முழுவதும் சுற்றிவரும் கனவில் இருக்கும் விவான், சொந்தமாக ஒரு ‘கஃபே’ தொடங்கும் கனவில் இருக்கும் கபீர், அவனுடைய காதலி நிஷா என நான்கு இளைஞர்களின் கதையைச் சொல்கிறது இந்த நாவல். “என்னுடைய கதையில் வரும் நான்கு முக்கியக் கதாபாத் திரங்களுமே தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு நெருக்கமானவை.
அதிலும், மீரா கதாபாத் திரத்திடம் என்னுடைய பிரதிபலிப்புகள் அதிகமாக இருக்கும். மற்ற கதாபாத்திரங்களை என்னைச் சுற்றியிருந்த சில நண்பர்களின் பிரதிபலிப்புகளில் இருந்து உருவாக்கினேன். இப்படி, உண்மையான மனிதர்களின் கதையை நேர்மையாகச் சொல்லியிருந்ததையும் என் நாவலின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லலாம்” என்கிறார் இந்த இளம் எழுத்தாளர்.
இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஒரு எளிமையான காதல் கதையாக ‘எவ்ரிஒன் ஹேஸ் எ ஸ்டோரி’ இருக்கிறது. அத்துடன், நாவல் முழுவதும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையளிக்கக்கூடிய வாசகங்களும் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. இந்த வாசகங்களையெல்லாம் சவி சர்மா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்திருக்கிறார். இந்த அம்சங்களெல்லாம் இந்தப் புத்தகத்தை இளைஞர்களிடம் அதிகமாகக் கொண்டு சேர்த்திருக்கிறது.
“சில மாதங்களுக்குமுன், ஹைதராபாதிலிருந்து பதினேழு வயது மாணவர் ஒருவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். என்னுடைய நாவலைப் படித்த பிறகு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டதாக அந்தக் கடிதத்தில் எழுதி யிருந்தார். என்னுடைய எழுத்து சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நானே உணர்ந்த தருணம் அது. ஊக்கமளிக்கக்கூடிய காதல் (இன்ஸ்பிரேஷனல் ரொமான்ஸ்) கதைகளே என் களமாக இருக்க வேண்டுமென்றும் அப்போது தீர்மானித்துகொண்டேன்” என்கிறார் சவி.
நாவல் எழுதுவது மட்டுமல்லாமல் ‘லைஃப் அண்ட் பிப்பீள்’ என்ற ஒரு வலைப்பூவையும், ‘ஸ்டோரிடெல்லர்டைரீஸ்’ ( >www.storytellerdiaries.com) என்ற இணையதளத்தையும் இவர் நிர்வகித்து வருகிறார். இந்த இரண்டு தளங்களிலும் ஊக்கமளிக்கக்கூடிய கதைகளைத் தொடர்ந்து எழுதத் திட்டமிட்டருக்கிறார் சவி சர்மா. “நான் ஓர் எழுத்தாளராக அறியப்படுவதைவிட, ஒரு கதைசொல்லியாக அறியப்படுவதைத்தான் விரும்புகிறேன். எல்லோரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதைகளைத் தேடி உலகத்துக்குச் சொல்வதாக என் எழுத்துப் பயணம் இருக்கும்” என்கிறார் சவி சர்மா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT