Published : 07 Oct 2016 08:25 AM
Last Updated : 07 Oct 2016 08:25 AM

விமர்சனங்களுக்கு பதில் சொல்லக் கூடாது! - ரெமோ எடிட்டர் ரூபன் பேட்டி

இயக்குநர் கதை எழுதி, படப்பிடிப்பு முடிந்தாலும் அதனைச் செதுக்குவதில் முக்கியமானவர் எடிட்டர். ‘தெறி', ‘வேதாளம்', ‘ராஜா ராணி' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்தவர் ரூபன். தற்போது தனது கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் ‘ரெமோ'வைச் செதுக்கிக் கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து...

எடிட்டராக வேண்டும் என்று ஏன் விரும்பினீர்கள்?

சூழ்நிலைதான்! எனக்கு இயக்குநராக வேண்டும் என்று ஆசை. விஸ்காம் படிக்கும் போது வீடியோ தொடர்பான விஷயங்களில் என்னுடைய பங்கு எடிட்டிங்காக இருந்தது. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது கெளதம் மேனன் சார் அலுவலகத்தில் போய் ‘இன்டர்ன்ஷிப்' செய்தேன். ‘வேட்டையாடு விளையாடு' பணிகள் போய்க் கொண்டிருந்தன‌.

திடீரென்று ஒரு நாள் கெளதம் சார் அழைத்து ‘உனக்கு எதில் ஆர்வம்?' எனக் கேட்டார். அதற்கு முன்பாகவே என் நண்பர்கள் மூலமாக எனக்கு எடிட்டிங்கில் ஆர்வம் என்று தெரிந்துவைத்திருந்தார். உடனே எடிட்டர் ஆண்டனி அலுவலகத்தில் பணியாற்று என அவரிடமும் பேசி என்னை அனுப்பி வைத்தார். ஆண்டனி சார் கொடுத்த வேலைகளையும் சரியாக முடித்துக் கொடுத்ததால் பிடித்துப் போய் தொடர்ந்து பணியாற்றி இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்.

அனைவருமே டீஸர், ‘ட்ரெய்லர் கட்' ஸ்பெஷலிஸ்ட் ரூபன் என்று அழைக்கிறார்களே..?

இதனைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த வார்த்தைகள் சரிதானா என்று யோசிக்கிறேன். ஒரு படத்தை எடுத்துக்கொண்டால் அது முழுக்க இயக்குநரின் கட்டமைப்புத்தான். ஆனால், ட்ரெய்லரைப் பொறுத்தவரையில் முழுக்க அது எடிட்டரின் கட்டமைப்பு.

விநியோகஸ்தர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்திருப்பது போன்று ட்ரெய்லர் இருக்க வேண்டும். ஒரு ட்ரெய்லர்தான் மக்களைத் திரையரங்கிற்கு வர வைக்கிறது. ஆகையால் மிகவும் கவனமாகப் பணியாற்றிய வேண்டும். ட்ரெய்லரைப் பொறுத்தவரை நான்தான் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருப்பதால் எனக்குப் பொறுப்புகள் அதிகம்.

நான் பணியாற்றிய, பணியாற்றியாத படங்கள் என எல்லாம் சேர்த்து இதுவரை சுமார் 50 படங்களின் ட்ரெய்லர்களை நான் கொண்டுவந்திருக்கிறேன். நிறையப் பாராட்டுக்கள் கிடைத்திருக்கின்றன‌. திரையுலகிற்கு உள்ளே படங்கள் மூலமாக இன்றி ட்ரெய்லர்கள் மூலமாகவேதான் வந்தேன். அதற்கு எடிட்டர் ஆண்டனி சாருக்குத்தான் நன்றி சொல்லணும். அவருடன் பணிபுரியும்போது நிறைய ட்ரெய்லர் பணிகள் கொடுத்து பண்ணச் சொல்வார். அப்போது அவர் சொல்லிக் கொடுத்த நுணுக்கங்கள் அனைத்துமே எனக்கு இப்போது பெரும் உதவியாக இருக்கின்றன‌.

'ரெமோ' படத்துக்காக எடிட்டிங்கில் என்ன விஷயங்கள் புதிதாக செய்திருக்கிறீர்கள்?

பெண் வேடமிட்டு வரும் சிவகார்த்திகேயன், சில மணித்துளிகளில் அந்த வேடத்தைக் கலைத்துவிட்டுச் சாதாரணமாக வருவார். எங்கே போய் உடைகளை மாற்றினார் என்று படம் பார்ப்பவர்கள் யூகிக்க முடியாத அளவுக்கு எடிட்டிங் இருக்க வேண்டும். இப்படத்தில் எனக்கு அது மட்டும் சவாலாக இருந்தது. பையனாக நடிப்பது எளிது, ஒரு பையன் பெண் வேடமிட்டு நடிப்பது கடினம். அவ்வாறு நடித்திருக்கும்போது அதை நாம் அழகாக வெளிப்படுத்த வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் தவறான முகபாவனையைக் காட்டினால்கூட அந்தப் பெண் கதாபாத்திரம் மீது தவறான கருத்து வந்துவிடும். மற்றபடி, வழக்கமான காதல் கதைகளுக்கு எடிட்டிங் எப்படியிருக்குமோ, அதையேதான் இதிலும் செய்திருக்கிறேன்.

படத்தின் நேரம் அதிகமாக இருந்தால், எடிட்டர்தான் பிரச்சினை என்ற விமர்சனம் வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அந்த விமர்சனங்களுக்கு எடிட்டர் ஒன்றுமே பண்ண முடியாது என்பதுதான் உண்மை. ஒரு படத்தைக் கதை சார்ந்தும் பண்ண வேண்டும், கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பார்க்க வேண்டியது ஒரு எடிட்டரின் பணி. ஒரு பாடல் வெற்றி பெற்றுவிட்டால், அதனைப் படத்திலிருந்து தூக்க முடியாது. ஏனென்றால் திரையரங்கில் ரசிகர்கள் அப்பாடலைக் கொண்டாடுவார்கள்.

இன்றைக்கு கமர்ஷியலாக வெற்றி பெற்றால் மட்டுமே வெற்றிப் படமாகக் கொண்டாடப்படுகிறது. இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எடிட்டர்கள் சமரசம் செய்து கொள்கிறோம். சமரசத்துக்குப் பயப்படாத போது விமர்சனத்துக்கு எந்தவொரு பதிலும் சொல்லாமல் இருப்பது நல்லது.

எடிட்டிங் மிகவும் மன அழுத்தம் நிறைந்த பணி. உங்களை எப்படி அதிலிருந்து விடுவித்துக் கொள்கிறீர்கள்?

மானிட்டரில் இருந்து வெளியாகும் கதிர்கள் உடம்பை பயங்கரமாகச் சூடாக்கிச் சோர்வுடைய வைக்கும். அதனால் எப்போதுமே ஜூஸ், தண்ணீர் என நிறைய திரவ வடிவிலான உணவுப் பொருட்களை உட்கொள்வேன். இடைவெளி நேரத்தில் நண்பர்களுடன் நிறையப் பேசுவேன், விளையாடுவேன். இன்று நான் ஒரு விஷயத்துக்கு டென்ஷனாகி நாளைக்கு அந்த விஷயம் மாறிவிடப்போவது கிடையாது. சிரித்துக்கொண்டே வேலை செய்தால் அந்த வேலை சிறப்பாக வரும் என்பதை என் குரு ஆண்டனி சாரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். டென்ஷனால் நம்முடைய நேரம்தான் அதிகமாக வீணாகும்.

இயக்குநராகும் எண்ணம் இப்போதும் இருக்கிறதா?

கண்டிப்பாக இருக்கிறது. அதற்கான வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை. கூடிய விரைவில் நடக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x