Last Updated : 30 Sep, 2016 10:57 AM

 

Published : 30 Sep 2016 10:57 AM
Last Updated : 30 Sep 2016 10:57 AM

"இலக்கியத்தை வாழவைப்பது மொழிபெயர்ப்புகள்தான்!"

செப்டம்பர் 30: உலக மொழிபெயர்ப்பு நாள்

‘ஆங்கில இலக்கியம் மொழி பெயர்ப்புகளால் வாழ்கிறது' என்றார் கவிஞர் எஸ்ரா பவுண்ட். ஆங்கில இலக்கியம் மட்டுமல்ல உலகின் எந்தவொரு மொழியில் தோன்றும் படைப்புகளும் மொழிபெயர்ப்புகளால்தான் வாழ்கின்றன.

"ஆனால் இந்திய மொழிகளில் வெளிவரும் படைப்புகளை எல்லைகள் தாண்டி உலகம் முழுக்கக் கொண்டுசேர்க்க வேண்டுமெனில் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியது அவசியம்" என்று தன்னுடைய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் அருணவ சின்ஹா.

அருணவ சின்ஹா... வங்காள மொழியில் உள்ள படைப்புகளை ஆங்கில மொழிக்குக் கடத்தும் மிக முக்கியமான இளைஞர். இன்றைய தேதியில் இந்திய மொழிப் படைப்புகளை ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பாளர்களில் மிக முக்கியமானவர். வரும் 30ம் தேதி ‘உலக மொழிபெயர்ப்பு நாள்’. அதனையொட்டி, அவருடனான என் நினைவுகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.

கிளாசிக் ரக படைப்பாளி தாகூர் முதல் இன்றைய புதிய அலை படைப்பாளிகள் சங்கீதா பந்த்யோபாத்யாய் வரை அனைத்து முக்கியமானப் படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். வங்கக் கலாச்சாரத்தை அதன் ஆதார சுருதி கெடாமல் ஆங்கிலத்தில் நகர்த்தும் இவரின் மொழிபெயர்ப்புகள், இவருக்கு இரண்டு முறை சிறந்த மொழிபெயர்ப்புக்கான ‘கிராஸ்வேர்ட் புக்' விருதைப் பெற்றுத் தந்திருக்கின்றன.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய இவரது பயணத்தில், இதுவரை 32 வங்காள மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார். இவரது கைகளில் மேலும் 10 படைப்புகள் மொழிபெயர்ப்புக்காகக் காத்திருக்கின்றன.

2015-ம் ஆண்டு 'தி இந்து' நடத்திய 'லிட் ஃபார் லைஃப்' இலக்கிய விழாவுக்காக சென்னை வந்திருந்தவரிடம் அவரின் மொழிபெயர்ப்புப் பணிகள் குறித்து நிறைய உரையாடினோம்.

பொதுவாகவே, இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்க விரும்புபவர்கள் கவிதை, கதை என்றுதான் முயற்சிகளை ஆரம்பிப்பார்கள். நீங்கள் எப்படி என்று கேட்டதற்கு, "கல்லூரிக் காலத்தில் இருந்தே மொழிபெயர்ப்புகள்தான் என்னை வசீகரித்துக்கொண்டிருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் மூலம் நாம் ஒரு படைப்பை மட்டும் கடத்துவதில்லை. மாறாக ஒரு கலாச்சாரத்தையே கடத்துகிறோம். அப்படி வங்காள மொழியையும், கலாச்சாரத்தையும் ஆங்கில மொழிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து மொழிபெயர்ப்பை எனக்கான தளமாகக் கொண்டேன். மொழிபெயர்ப்புகள்தான் இலக்கியத்தைப் பாதுகாக்கின்றன‌" என்றார்.

"தவிர ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு 'ரைட்டர்ஸ் ப்ளாக்' அதாவது, தொடர்ந்து எழுதிச் செல்வதில் ஏற்படும் தடைகள் கிடையாது" என்பவரிடம், எதன் அடிப்படையில் ஒரு படைப்பை மொழிபெயர்ப்புக்குத் தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "ஒரு படைப்பு முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும். அது என்னை வசீகரித்தால் மட்டுமே அதை மொழிபெயர்ப்பேன். அதே சமயம், ஒரு படைப்பு ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், அந்த மொழிபெயர்ப்பை நான் என்னுடைய மொழிபெயர்ப்பை முடிக்கும் வரையில் வாசிப்பதில்லை" என்றார்.

இவரின் மொழிபெயர்ப்பு பாணி குறித்த கேள்விக்கு, "மூல மொழியிலிருந்து ஒரு படைப்பை வேற்று மொழிக்குப் பெயர்க்கும் போது, சிலர் அந்த மொழிக்கு ஏற்றவாறு மூலப் படைப்பிலேயே சில மாறுதல்களை, சில மெருகூட்டல்களைச் செய்வார்கள். ஆனால் நான் அப்படிச் செய்வதில்லை. 'எதையும் கூட்டவும் கூடாது, எதையும் குறைக்கவும் கூடாது' என்ற விதியிலிருந்து நான் விலகுவதில்லை" என்றார்.

முந்தைய காலங்களை ஒப்பிடும்போது, இன்றைய வங்காள இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்துக் கேட்டதற்கு, "நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கதையைச் சொல்லும் முறை, மாய யதார்த்தம், விளிம்புநிலை மக்களின் கதைகள் எனப் பல தளங்களில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, சங்கீதா பந்தோபாத்யாய் எழுதிய ‘பேன்டி' என்ற நாவல் அங்கு மிகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது" என்றார்.

தன்னுடைய பெயர், தான் மொழிபெயர்க்கும் புத்தகங்களின் அட்டையில் இடம்பெறக் கூடாது என்ற கொள்கை உடைய இவர், மொழிபெயர்ப்புகளைப் பதிப்பாளர்கள் அதிகம் விளம்பரப்படுத்த வேண்டும் என்கிறார்.

“மொழிபெயர்ப்புகள் வணிக ரீதியான சந்தையைக் கொண்டவை அல்ல. ஆனால் சந்தைத் தேவை உள்ள விஷயம் அது. எனவே மொழிபெயர்ப்புகளை வெறும் மொழிபெயர்ப்புகளாக மட்டுமே பார்க்காமல் அதை ஒரு புதுப் புத்தகமாகப் பதிப்பாளர்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.”

பொதுவாகவே, மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தங்களின் சொந்தப் படைப்புகளைத் தர ஆரம்பிப்பார்கள். அப்படி ஏதேனும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டபோது, "எனக்கு அப்படியான ஆசை எதுவும் கிடையாது. ஓர் எழுத்தாளனாக நீங்கள் உங்கள் பாணியில் எழுதுவீர்கள். ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாக, வேறு வேறு எழுத்தாளர்களைப் போன்று வேறு வேறு பாணிகளைக் கொண்டு எழுதுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், மொழிபெயர்ப்பில்தான் உங்கள் மொழி வளமும் வார்த்தை வளமும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்".

தான் மொழிபெயர்த்த படைப்பாளிகளில் இவருக்கு மிகவும் விருப்பமான படைப்பாளி யாரென்ற கேள்விக்குத் தயங்காமல் பதிலளிக்கிறார். "புத்ததேவ் போஸ். காரணம், அவரின் படைப்புகளில் உள்ள நளினமும் லயமும்" என்பவர், தற்போது ஆங்கில மொழியில் வெளியாகியுள்ள படைப்புகளை வங்காள‌ மொழிக்கு நகர்த்தும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x