Published : 30 Sep 2016 11:18 AM
Last Updated : 30 Sep 2016 11:18 AM
தமிழகம் இரண்டாவது ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகிவருகிறது. ஆம், விரைவில் வரவிருக்கிறது உள்ளாட்சித் தேர்தல். இந்தத் தேர்தலை ‘இளைஞர்களின் தேர்தல்' என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இந்தத் தேர்தலில் இளைஞர்கள் பலர் சுயேட்ச்சை வேட்பாளர்களாகக் களம் காண்பார்கள். இளைஞர்களை வேட்பாளராக நிறுத்தப் பல கட்சிகளும் முந்தும்.
இந்தச் சமயத்தில், உள்ளாட்சி அமைப்புகளைப் பற்றியும், அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தங்களைப் பற்றியும் எத்தனை இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு உள்ளது என்று பார்த்தால் அது சந்தேகம்தான். கிராம ஊராட்சி, கிராம சபை, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மேற்கண்ட திருத்தங்களுடன் சில அடிப்படைகளையும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
உள்ளாட்சி ஓர் அறிமுகம்
உள்ளாட்சி அமைப்புகள் பற்றி நமக்குப் பல விதமான புரிதல்கள் இருக்கின்றன. அதன் செயல்பாடுகள் என்பது மக்களோடும், அதிகாரிகளோடும் அரசியல் பிரமுகர்களோடும் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களோடும் பின்னிப் பிணைந்த ஒன்று.
உள்ளாட்சியை யார் கையில் எடுக்கிறார்களோ அந்த வடிவத்தை அது பெறுகிறது. அரசியல்வாதிகளுக்கு உள்ளாட்சி ஓர் அரசியல் களம். தனது கட்சியில் செல்வாக்குப் பெறவும் அரசியல் படிக்கட்டில் ஏறவும் இது ஒரு வாய்ப்பு. அதிகாரிகளுக்கோ இது ஊரக, நகர வளர்ச்சித் திட்டம். அவர்களுக்கு இது ஒரு புராஜெக்ட். பில் எழுதுவதிலும் அறிக்கை தயாரிப்பதிலும் அவர்கள் முனைப்பாக இருப்பார்கள்.
ஆனால் உள்ளாட்சியின் முக்கியமான அங்கத்தினரான மக்களுக்குத்தான் இங்கே என்ன நடக்கிறது என்பது முழுமையாகப் புரியவில்லை.
எங்கெல்லாம் மக்கள் உள்ளாட்சி அமைப்புகளைப் புரிந்துகொண்டு, அதைத் தங்களின் களமாகக் கண்டார்களோ அங்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. நமது நோக்கம், மக்களின் பார்வையிலிருந்து உள்ளாட்சியைப் பார்ப்பதாக இருக்க வேண்டும். வெறும் அரசியல் களமாக இன்றி சமூக மாற்றத்திற்கான களமாகப் பார்க்க வேண்டிய கடமை, இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு உள்ளது.
சட்டத் திருத்தம் எதற்கு?
நம் தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது படித்த பெண்கள் பலருக்கும்கூடத் தெரியவில்லை என்பது ஜனநாயக சோகம். அதுவே தெரியாதபோது, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்?
உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகளை மேம்படுத்த, அவை மாநில அரசுகளால் கலைக்கப்படாமல் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அவையே 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தங்கள் ஆகும்.
73-வது சட்டத் திருத்தம் ஊராட்சிகள் சுயாட்சி அமைப்புகளாகச் செயல்படவும், 74வது சட்டத் திருத்தம் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற நகர உள்ளாட்சி அமைப்புகள் சுயாட்சி அமைப்புகளாகச் செயல்படவும் வழிவகுக்கிறது.
1993-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத் திருத்தங்கள் இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக முக்கியமானதொரு கட்டம் எனக் குறிப்பிட வேண்டும். காரணம், மத்திய மாநில அரசுகளிடத்தில் மட்டுமே குவிக்கப்பட்டுக் கிடந்த அதிகாரங்கள் தளர்த்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்களுக்கும் அதிகாரங்கள், பொறுப்புகள் ஆகியவை பகிர்ந்தளிக்கப்பட்டன. கடைக்கோடி இந்தியனும் தனக்கான வளர்ச்சித் திட்டத்தில் சிறிதேனும் பங்கெடுக்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது.
மேலும், மாநில அரசு விருப்பப்பட்டால் நடத்திக்கொள்ளலாம் அல்லது தவிர்த்துவிடலாம் என்ற நிலையில் இருந்தன உள்ளாட்சி தேர்தல்கள். ஆனால், இந்தச் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதன் விளைவாக, தற்போது உள்ளாட்சிகளுக்குத் தேர்தல்கள் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நம் ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன உள்ளாட்சித் தேர்தல்கள்.
திருத்தம் தந்த திருப்புமுனைகள்
73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்தங்கள் கொடுத்த திருப்புமுனைகள் பல. அவற்றில் முக்கியமானவை இவை:
# மக்கள் கூடி விவாதித்து முடிவு எடுக்க கிராம சபைகள் அமைக்க அதிகாரம் அளிக்கிறது.
# உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்த உதவுகிறது.
# அதற்கான நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்வதோடு மத்திய மாநில அரசின் திட்டங்களையும் அதனுடன் இணைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறது.
# உள்ளாட்சித் தேர்தல்கள் தடையின்றி நடைபெறத் தனியாக மாநிலத் தேர்தல் ஆணையம்.
# தனி நிதி ஆணையம்.
# மாவட்ட அளவில் திட்டக்குழு
# உள்ளூர் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க மற்றும் மேம்படுத்தவும் அதிகாரங்கள்
# சமூக வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த வாய்ப்புகள்
# நீர் மேலாண்மை, கல்வி, சமூக நலன், வேளாண்மை போன்ற முக்கியமான 29 திட்டங் களில் பணியாற்ற ஊராட்சிகளுக்கு வாய்ப்பு எனப் பல அதிகாரங்களையும் உரிமைகளையும் இந்தச் சட்டத் திருத்தங்கள் வழங்குகின்றன.
மேலும், இந்தச் சட்டத் திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டுதான் புதிதாக ‘தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994' கொண்டுவரப்பட்டது.
கிராம சபைகளின் தேவை
ஊராட்சி நிர்வாகமானாலும் சரி, கிராம வளர்ச்சி சார்ந்த முயற்சிகள் என்றாலும் சரி, அவை தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவரை மட்டுமே சார்ந்தது அல்ல. ‘அதெப்படி? தலைவர் அல்லது வார்டு மெம்பர்தானே அனைத்துக்கும் பொறுப்பு...' என உங்களில் பலருக்குக் கேள்வி எழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமல்ல உள்ளாட்சி நிர்வாகம். மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ள ஜனநாயக அமைப்பே உள்ளாட்சி அமைப்பு. அதற்குக் காரணியாக விளங்குபவை கிராம சபைகள்.
வாக்களிப்பதையும் தாண்டி ஜனநாயகத்தில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள்தான் கிராம சபை அதிகாரங்கள். நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்கு நிகரான அந்தஸ்தை கிராம சபைகளுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவரையும் உறுப்பினராகக் கொண்டது கிராம சபை. எங்கெல்லாம் மக்கள், கிராம சபை தங்களுக்கான வாய்ப்பு என அறிந்து அதில் பங்கெடுத்து வருகிறார்களோ, அங்கெல்லாம் தங்கள் தேவையை மக்கள் தொடர்ந்து பெறுகிறார்கள், மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். நிலத்தடி நீரை உறிஞ்சிய கோலா கம்பெனியை விரட்டியது, தங்கள் கிராமத்தின் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த அரசு நிறுவனத்தையே போராடி விரட்டியது என கிராம சபைகள் வெற்றி கண்ட போராட்டங்கள் நிறைய உள்ளன. தங்கள் கிராம வளங்களைக் காக்க மக்கள் கிராம சபையை வாய்ப்பாகப் பயன்படுத்தி நீதிமன்றத்திலும் வெற்றி கண்டதற்கான உதாரணங்களும் நிறைய இருக்கின்றன.
அதிகாரிகளின் ஆதிக்கம், மக்களிடம் போதிய விழிப்புர்ணவு இல்லாதது போன்ற பல தடைகளைக் கிராம சபைகள் சந்தித்துவருகின்றன. இத்தடைகளையும் தாண்டி எதிர்கால இந்திய ஜனநாயகத்தின் நம்பிக்கையாக விளங்குபவை கிராம சபைகளே. மக்கள் நேரடியாகப் பங்கேற்று விவாதித்து முடிவெடுக்கும் வாய்ப்புள்ள இக்கிராம சபைகள் மகத்தான மாற்றங்களை மேற்கொள்ளும் சக்தி கொண்டது. சமூக மாற்றத்திற்கான திறவுகோல் கிராம சபையின் கையில்தான் இருக்கிறது.
மேலும், கிராம சபையில் ஊராட்சியின் வரவுசெலவு அறிக்கை, ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் விவரம் போன்ற தகவல்கள் கட்டாயமாகத் தாக்கல் செய்யப்பட்டு, விளக்கப்பட வேண்டும். கிராம வளர்ச்சித் திட்டம், சமூகத் தணிக்கை எனப் பல நடவடிக்கைகள் கிராம சபையில்தான் நடந்தாக வேண்டும்.
தீர்வை நோக்கி
‘உங்கள் கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியப் பணிகள் என்ன?' என்று யாரையாவது கேட்டால், பெரும்பாலானோர், சாலைகள், கட்டிடங்கள் பற்றியே குறிப்பிடுவார்கள். இவை முக்கியமானவைதான். ஆனால், சாலைகள், கட்டிடங்களைத் தாண்டி, சமூக வளர்ச்சிக்கான பணிகள் பல உள்ளன.
கல், மண், செங்கல், ஜல்லி, தார், கட்டுமானங்கள்... இவற்றை மட்டுமே வளர்ச்சியாக எடுத்துக்கொள்ள முடியுமா? நிச்சயமாக இல்லை.
குழந்தைகள் நலம் முதல் முதியோர் நலன் வரை, அரசுப் பள்ளியின் செயல்பாடுகள் முதல் ஆரம்ப சுகாதார மையங்களின் செயல்பாடுகள் வரை உள்ளாட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. சுகாதாரமான குடிநீர் வசதி, மகளிர், வளரிளம் பெண்கள் நலன், நலிவுற்றோர் நலன், இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பும், மேம்பாடும், சமூக நல்லிணக்கம், புகை, போதை போன்றவற்றுக்கு அடிமையாகாதவாறு மக்களைக் காத்தல், மாற்றுத் திறனாளிகளின் நலன் எனப் பல சமூக மேம்பாட்டுப் பணிகளைக் கவனித்து அவற்றை மேம்படுத்தும் வாய்ப்பு உள்ளாட்சிகளுக்கு உண்டு.
எங்கோ இருக்கும் மத்திய மாநில அரசுகளைவிட மக்களுக்கு மிக அருகில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் சமூக மேம்பாட்டுப் பணியில் நல்ல முன்னேற்றத்தைப் படிப்படியாகக் கொண்டுவர முடியும். மக்களுக்கு நம்பிக்கை அளிக்க முடியும்.
நம் இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான நிகழ்வு தேர்தல்கள். குடவோலை முறை காலம் தொட்டு இன்றைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர காலம் வரை பல தேர்தல்களைக் கடந்துவிட்டோம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் முறைகளை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அதை விடவும் குறைவான புரிதலே உள்ளாட்சித் தேர்தல்கள் பற்றி நமக்கு இருக்கின்றன.
உள்நாட்டு உற்பத்தி என்ற அடிப்படையில் வேண்டுமானால் நாம் ‘வளர்ச்சி’ பெற்று வருவதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால், மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் அடிப்படையில் நாம் முன்னேற்றம் பெற வேண்டுமென்றால் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளே வழிகாட்டுகின்றன. அதை நோக்கிச் செல்வோம் வாருங்கள் நண்பர்களே!
-
கட்டுரையாளர் சமூகச் செயல்பாட்டாளர்.
‘உள்ளாட்சி உங்களாட்சி' எனும் பிரச்சாரத்தின் மூலம்
பல கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்திவருகிறார்.
தொடர்புக்கு: ulaatchi@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT