Last Updated : 06 May, 2016 01:06 PM

 

Published : 06 May 2016 01:06 PM
Last Updated : 06 May 2016 01:06 PM

இசையால் வசப்படும் சமூகமாற்றம்!

இசைக்கு எதையும் மாற்றும் வல்லமை உண்டு. இதையே அடிப்படையாக வைத்து இளம் இசைக்கலைஞர்கள் சேர்ந்து ‘6MB ஆரம்பி’ என்னும் அமைப்பைத் தொடங்கியிருக்கின்றனர். சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை இசையின் துணையோடு மக்களிடம் கொண்டுசெல்வதுதான் இந்த அமைப்பின் நோக்கம். இந்தக் குழு ஆரம்பித்து மூன்று வாரங்கள்தான் ஆகிறது. அதற்குள் அண்ணாநகர் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, முகப்பேர் மேற்கு பூங்கா போன்ற இடங்களில் இந்தக் குழுவினர் இசைப் பிரச்சாரங்களை நடத்தியிருக்கின்றனர்.

வாகு மசான், பிரயினார்ட் டேவிட், அலெக்ஸ், பிரபு, கிரண் என்று ஐந்து பேரும் சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கின்றனர். இவர்கள் ஐந்து பேரில், பிரபு மட்டும் ஒளிப்படக்கலைஞர். மற்ற நான்கு பேரும் இசைக் கலைஞர்கள். “இசையை ஒரு நல்ல காரியத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே எங்களுக்கு இருந்தது. சமூகத்துக்குப் பயன்படும் வடிவத்தில் எங்களுடைய இசைப் பிரச்சாரங்கள் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். எதுவாக இருந்தாலும் சீக்கிரமாக ஆரம்பிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘ஆரம்பி’ என்ற பெயரே பொருத்தமாயிருக்கிறது என்று எங்களுக்குத் தோன்றியது. அதனால், அதே பெயரிலேயே எங்கள் அமைப்பைத் தொடங்கிவிட்டோம். இளைஞர்களை ஈர்ப்பதற்காக அதில் ‘6MB ஆரம்பி’ என்று சேர்த்துக்கொண்டோம். ரைமிங்காக இருக்கிறதுதானே” என்று சிரிக்கிறார் வாகு மசான். இவர் ஒரு கிட்டார் கலைஞர். தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த அமைப்பில் செயல்படுகின்றனர்.

ஒரே ஒரு சமூகப் பிரச்சினையை மட்டும் முன்னெடுத்துச்செல்லாமல் எல்லாவிதமான சமூகப் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கின்றனர் இவர்கள். புகைப்பிடிப்பதற்கு எதிரான இசைப் பிரச்சாரங்களை அண்ணாநகர் பூங்காவிலும், எலியட்ஸ் கடற்கரையிலும் நடத்தியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து முகப்பேர் பூங்காவில் பூமி தினத்தைக் கொண்டாடும்விதமாக மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இசைப் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றனர்.

பாடல்கள் மூலம் மட்டுமல்லாமல், மக்களுடன் பேசுவது, அவர்களையும் இந்தப் பிரச்சாரத்தில் பங்கெடுத்துக்கொள்ள வைப்பது, அவர்களிடம் கருத்துகள் கேட்பது எனப் பலவழிகளிலும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். அத்துடன், ஃபேஸ்புக்கிலும் ‘ஃபேம்’ ஆப்ஸ் மூலம் இவர்களுடைய இசைப் பிரச்சாரத்தை ‘லைவ் ஆங்கரிங்’ செய்கின்றனர். முகப்பேர் பூங்காவில் ‘லைவ் ஆங்கரிங்’ செய்த ‘ஃபதின்’ இப்போதுதான் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். இந்த ‘மொபைல் ஆங்கரிங்’ பூங்காவில் இருந்த மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த முயற்சிக்கு இவர்களுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்தப் பிரச்சாரங்களோடு மட்டுமல்லாமல், மே தினத்தன்று நண்பர்களெல்லாம் சேர்ந்து இரத்த தானம் வழங்கியிருக்கிறார்கள். “ஆரம்பி குழுவின் இசைப் பிரச்சாரங்களை எப்படியெல்லாம் புதுமையாகச் செய்தால் மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியுமோ அப்படியெல்லாம் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் குழந்தைகள் அவர்களாகவே வந்து எங்களுடைய பிரச்சாரங்களில் பங்கெடுத்துக்கொண்டார்கள். இது எங்களுக்குப் பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. தொடர்ந்து, குழந்தைகளுக்கான கல்வி, முதியோர் நலம், உடல் ஆரோக்கியம் எனப் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இசைப் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறோம். ஒரு மாதத்தில் இரண்டு முறையாவது இந்த இசைப் பிரச்சாரங்களை நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாகவிருக்கிறோம்” என்கிறார் பிரபு.

‘6MB ஆரம்பி’ பக்கத்தை பேஸ்புக்கில் தொடர: https://www.facebook.com/6mbaarambi/ shutterstock

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x