Last Updated : 07 Jun, 2014 12:13 PM

 

Published : 07 Jun 2014 12:13 PM
Last Updated : 07 Jun 2014 12:13 PM

இது வாங்கினால் அது இலவசம்

இன்று நம்மையெல்லாம் கிளுகிளுக்க வைக்கும் இனிமையான சொல் இலவசம்! இந்தச் சொல்லைக் கேட்டவுடனேயே சிலருக்கு மயிர்க் கூச்செறிகிறது. வாயெல்லாம் பல்லாகிறது. இதைத் தெரிந்துகொண்டுதான் நம் அரசியல் வாணர்கள் இன்று சக்கைப்போடு போடுகிறார்கள். இலவசம், அன்பளிப்பு என்று என்ன என்னவோ கொடுத்து மக்கள் வாக்குச்சீட்டை வாங்கிவிடுகிறார்கள்.

அரசியல் வாணருக்கு அடுத்தபடி வாணிகர்கள் வந்து நிற்கிறார்கள். சலவைக் கட்டி மூன்று வாங்கினால் ஒன்று இலவசம். தேயிலைத் தூள் வாங்கினால் கரண்டி இலவசம். கண்ணாடி வாங்கினால் சீப்பு இலவசம். புடவை வாங்கினால் சட்டை இலவசம்.

இதைப் பற்றி வீட்டிலே நான் பேசிக்கொண்டிருந்தபோது என் பேரன் கேட்டான்: "யானை வாங்கினால் குதிரை இலவசமாகத் தருவார்களா தாத்தா?" அதற்கு என் பேத்தி சொன்னாள், "யானை வாங்குபவர்களுக்குக் குதிரை எதற்கு? யானைமேல் வைக்கும் அம்பாரிதான் தருவார்கள்!" என்று.

எல்லா நாடுகளிலுமே மக்கள் இலவசம் என்றால் மயங்கத்தான் செய்கிறார்கள். Reader's Digest ஆங்கில மாத இதழ் நடத்துபவர்கள் ஒரு காலத்தில் தாங்கள் வெளியிடும் கொள்ளை விலைப் புத்தகங்களை விற்பதற்கு இந்த முறையைத்தான் கையாண்டார்கள். விலை உயர்ந்த ஒரு நூலை விற்கச் சிறிய நூல் ஒன்றை இலவசம் என்று விளம்பரப்படுத்துவார்கள். அந்த இலவச நூலைப் புகழ்ந்து அவர்கள் பயன்படுத்தும் சொற்களைப் படித்தால் விற்பனை நூலைவிட இலவச நூல்தான் மிகவும் பயன் உள்ளது என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். அதை இலவசமாகப் பெறுவதற்காகவே விற்பனை நூலையும் வாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றும்.

இலவசமாக எதைக் கொடுத்தாலும் அங்கே மக்கள் மொய்ப்பதைக் காணலாம். 1950களில் சோவியத்து ஒன்றியத்துக்குப் போட்டியாக அமெரிக்கா பல வேலைகளை மேற்கொண்டது. ‘சோவியத்து நாடு' என்ற இலவச இதழுக்குப் போட்டியாக, அமெரிக்கச் செய்தி நிறுவனம் ‘அமெரிக்கன் ரிப்போர்ட்டர்' இதழ் நடத்தியதோடு பல்வேறு அமெரிக்க நூல்களையும் இலவசமாய் வழங்கியது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது பாளையங்கோட்டை நூற்றாண்டு விழா மண்டபத்தின் வாசலில் ஒருமுறை ஆயிரக்கணக்கான அமெரிக்க நூல்களைக் கொண்டு வந்து குவித்தனர். இலவசம் யார் வேண்டுமானாலும் தேவையான நூல்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். நூல் பைத்தியமான நான் அங்குச் சென்றேன். கூட்டம் நெரிந்தது. வழியில் போவோர் எல்லாம் கூட்டத்துக்குள் முண்டியடித்துக்கொண்டு ஆளுக்கிரண்டு மூன்று நூல்களை எடுத்துச் சென்றனர். தேவையான நூலா, நல்ல நூலா என்று யாரும் பார்க்கவில்லை. நூல்களின் பக்கம் தலைவைத்துப் படுக்காதவர்கள்கூட அந்தக் கூட்டத்தில் இருந்தனர். எனக்கு ஏற்பட்ட அருவருப்பில் நான் எந்த நூலையும் எடுத்துக் கொள்ளாமலேயே திரும்பிவிட்டேன்.

இப்படி இலவசத்துக்கும் அன்பளிப்புகட்கும் ஏங்கும் தன்மை இந்தக் காலத்தில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. அந்தக் காலத்திலும் தமிழகத்தில் புலவர்கள் இருந்தனர். மன்னர்களிடமிருந்து பரிசில் பெற்றனர். ஆயினும் அவர்கள் பரிசிலுக்காக ஏங்கித் தவிக்கவில்லை. பெருமிதத்தோடு வாழ்ந்தனர். தகுதி அறிந்து வழங்கிய பரிசில்களையே அவர்கள் ஏற்றனர். மன்னன் ஒருவன், தன் சிறப்பை உணராமல் எல்லாருக்கும் போலவே தனக்கும் ஒன்றை வீசி எறிந்தான் என்று அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வெளியேறினாராம் ஒரு புலவர். அவர் அதோடு நிற்கவில்லை. வேறொரு மன்னன் தகுதியறிந்து கொடுத்த பரிசிலாகிய யானையைக் கொணர்ந்து முன்னைய மன்னனின் காவல் மரத்தில் கட்டிவைத்து விட்டுச் சென்றாராம்! அந்த மானவுணர்வும் மறவுணர்வும் எங்கே?

மலேசியா, சிங்கப்பூர் என்று நம் தமிழ் அறிஞர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். பணி முன்னிட்டுச் சென்று பெருமிதத்துடன் திரும்பி வருபவர்கள் பற்றி எந்தக் குறையும் இல்லை. வேறு சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாடுகளுக்குச் சென்றால் அங்கு வாழும் தமிழர்கள் நன்கு வரவேற்று விருந்தோம்புவார்கள், அன்பளிப்புகள் நிறைய வழங்குவார்கள் என்பதற்காகவே ஏதாவது ஒரு சாக்கில் அடிக்கடி அங்குச் சென்று வருகிறார்களாம்! சிலர் தாங்கள் எழுதிய குப்பை நூல்களுக்கு விலையைப் பலமடங்கு ஏற்றி அங்கே கொண்டு சென்று ஆயிரக்கணக்கான படிகளை விற்றுக் கொள்ளைப் பொருள் திரட்டி வருகிறார்களாம்!

செல்வர் ஒருவர் நடத்திய இலக்கிய விழா ஒன்றில் வான் கோழிப் பிரியாணிப் பொட்டலம் இலவசமாக வழங்கினார்கள். புலால் உண்ணாத ஒருவரும் ஒரு பொட்டலத்தை வாங்கிக்கொண்டார். என்ன என்று வியப்புடன் கேட்டேன். "பக்கத்து வீட்டுக்காரருக்கு மலிவு விலைக்கு விற்றுவிடுவேன்" என்றாரே பார்க்கலாம்.

- கட்டுரையாளர் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x