Published : 13 May 2016 02:30 PM
Last Updated : 13 May 2016 02:30 PM
‘ரேடியோ மிர்ச்சி'யில் தனது பேச்சால் மதுரை நகர மக்களைக் கவர்ந்து வரும் ஷா, ‘விரைவில் வெளியாகவிருக்கும் ‘பென்சில்' படத்தில் ஜி.வி.பிரகாஷின் நண்பனாக அறிமுகமாகிறேன். அடுத்து ‘ஊதா' என்ற படத்தில் சாருக்கு ஹூரோ ப்ரோமோஷன்' என்று ‘ஸ்டேட்டஸ்' தட்டுகிறார். அதற்கு ‘லைக்' போட்டபடியே ‘என்னமா ஷா... எப்படியிருக்கே?' என்று கேட்டால், துள்ளலும் துடிப்புமாகப் பேச ஆரம்பிக்கிறார். இவரிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், இவருக்குள் இருக்கும் உற்சாகமும் இளமையும் நமக்கும் தொற்றிக் கொள்ளும்.
ஆர்.ஜே. ஷா... ஒரு சின்ன இன்ட்ரோ கொடுங்க?
எனக்குச் சொந்த ஊர் விருதுநகர். ப்ளஸ் டூவுல ஸ்கூல்ல ‘கோல்ட் மெடல்'. தொடர்ந்து பி.இ. மற்றும் எம்.பி.பி.எஸ்., படிக்க நல்ல கல்லூரிகள்ல படிக்க இடம் கிடைச்சுது. ஆனா எனக்கு நடிப்புல ஆர்வம். விஷூவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன். சினிமாவுல ஏதாவது சாதிக்கணும்னு வந்தேன். ஆனா வந்தவுடனே தெரிஞ்சுது சினிமா எவ்வளவு கஷ்டம்னு!
நடிக்கணும் இல்லைன்னா தொலைக்காட்சி, எஃப்.எம்.னு தயாரிப்பு வேலைகள்ல போகணும்னு காலேஜ் படிக்கிறப்பவே நினைச்சேன். காலேஜ் முடிச்சவுடனேயே ரேடியோ வாய்ப்புக் கிடைச்சுது. ரேடியோவுல 9 வருஷம். இப்போதான் சினிமா சான்ஸ் கிடைச்சிருக்கு.
ஆர்.ஜே. எக்ஸ்பீரியன்ஸ் ரகளையா இருந்திருக்குமே...?
நிஜம்மா! ரேடியோவுல இருக்கிறதால எல்லா தரப்பு மக்கள்கிட்டயும் போய்ப் பேச முடியுது. ஐ.ஏ.எஸ் அதிகாரியில இருந்து சினிமா நடிகர்கள்வரை எல்லாரோடும் பழக முடியுது. ஒரு நாள் பார்வைத் திறனற்ற மாணவர்கள் படிக்கும் ஸ்கூலுக்குப் போனேன். அஃபீஷியலா இல்லாம ஒரு பெர்சனல் விசிட் அது. நான் இரண்டு வார்த்தை பேசியவுடனே அங்கிருக்கிற குழந்தைகள் எல்லோருமே ‘ஷா அண்ணன்' என்று என்னை மாதிரியே பேசிக் காட்டினாங்க. ரொம்ப நெகிழ்ந்துட்டேன். எனது குரலுக்குக் கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரமா அதை நினைக்கிறேன்.
‘பென்சில்' எப்படிக் கிடைச்சுது?
ரேடியோ மிர்ச்சியில் வேலை செய்யுறபோதே எனக்கு ஜி.வி.பிரகாஷ் பழக்கம். அவரை ஒரு முறை பேட்டி எடுக்கும் போது ‘சினிமாவுல நடிக்க ஆசை இருக்கா'ன்னு கேட்டார். ‘இருக்கு ப்ரோ'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் அப்பப்போ பேசுவோம். ஒரு நாள் ‘ஷா... ‘பென்சில்'னு ஒரு படத்தை நான் பண்றேன். இல்ல... நாம பண்றோம் ப்ரோ'ன்னு சொன்னார் ஜி.வி.பிரகாஷ்.
எனக்கு ஒண்ணுமே புரியலை. உடனே அவர் ‘பென்சில்' ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் பத்தின கதை. நீங்களும் ஸ்கூல் போற பையன் மாதிரியே இருக்கீங்க. அதனால படத்துல வர்ற ஒரு கேரக்டருக்கு நீங்க மேட்ச் ஆவீங்கன்னு தோணுது. நீங்க போய் இயக்குநர் மணிகண்டனைப் பாருங்கன்னார். ‘வில்லன் மற்றும் நண்பன் என இரண்டு கேரக்டர்ஸ் இருக்கு, நீங்க எதைப் பண்ணுறீங்க'ன்னு டைரக்டர் கேட்டவுடனே ‘நமக்கு வில்லன் எல்லாம் வேண்டாம். ஜாலியாக நண்பன் கேரக்டர் பண்றேன்'னு சொன்னேன். ‘பென்சில்' இப்படித்தான் கிடைச்சுது.
‘ஃபர்ஸ்ட் டே ஷூட்' எப்படி?
‘சரவணன் மீனாட்சி' சீரியல்ல ஆர்.ஜே.,வாகவே நடிச்சிருக்கேன். அதனால எனக்கு கேமரா முன்னாடி நிக்கவோ நடிக்கவோ எனக்குப் பயமா இல்லை.
‘பென்சில்' படத்துல முதல் சீன் 10 டேக் போச்சு. உடனே நம்மாலதான் 10 டேக் போகுதோன்னு நினைச்சு பயந்து டைரக்டரிடம் கேட்டேன். அவரோ ‘2வது டேக்கிலேயே சரியா பண்ணிட்டீங்க. ஆனா வெளிச்சம் பிரச்சினையா இருக்கு. அதான் இத்தனை டேக்'னு சொன்னதற்குப் பிறகுதான் மனசு நிம்மதியாச்சு.
அப்புறம்... இனி உங்க சாய்ஸ் ஆக்டிங் மட்டும்தானா?
இல்லவே இல்லை. நடிகரா தொடர்ந்தாலும் ஆர்.ஜே.வாகவும் தொடர்வேன். என்கூட ஆர்.ஜே.வாக வொர்க் பண்றவங்க என்னோட இன்னொரு குடும்பம் மாதிரி. ஆர்.ஜே.வாக இருக்கும்போது வித்தியாசமா யோசிக்க முடியுது. அப்படி யோசிக்கும்போது அது சினிமாவுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
தவிர, ரேடியோவுல வேலை பார்க்குறப்போ எப்பவும் யூத்தாகவே இருக்க முடியுது. இப்பவும் எனக்குள்ள ஒரு அரை டவுசர் போட்ட பையன் சுத்திக்கிட்டுத்தான் இருக்கான்.
நீங்க நல்லா வருவீங்க!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT