Published : 20 May 2016 03:14 PM
Last Updated : 20 May 2016 03:14 PM
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பெயர் சூட்டப்படுவது வழக்கம். சமூகம், தொழில்நுட்பம் எல்லாம் மாற மாற ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு புதுப் பெயர் அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருக்கிறது.
தொலைக்காட்சி தலைமுறை, இணைய தலைமுறை எல்லாம் அடுத்தடுத்து ஃபேஸ்புக் தலைமுறையாகவும் ஸ்மார்ட்போன் தலைமுறையாகவும் உருமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தற்போதைய தலைமுறை ‘செல்ஃபி தலைமுறை’.
எங்கு பார்த்தாலும் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்களுக்கு முன்னே கையை நீட்டிக்கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பதைக் காண முடியும். மெட்ரோ ரயில், மெரினா பீச், மால்கள், போக்குவரத்து நெரிசல், பேருந்து படிக்கட்டுகள் என்று செல்ஃபியின் ஷூட்டிங் ஸ்பாட்டுகள் ஏராளம்.
இந்தத் தலைமுறையின் செல்ஃபி மோகத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. விரைந்து வரும் ரயிலுக்கு முன்னால் நின்று செல்ஃபி எடுத்தவரின் மரணம், மலை உச்சி, உயரமான கட்டிடம் போன்றவற்றில் செல்ஃபி எடுக்க முயன்று மரணமடைந்தவர்கள் போன்ற வற்றைப் பற்றி தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம்.
‘நாடோடிகள்’ படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் டீக்கடையைத் திறந்துவைத்த அடுத்த நொடியில் அவருடைய அல்லக் கைகள் உடனேயே போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள் அல்லவா, அதுபோலவே எது நடந்தாலும் உடனேயே செல்ஃபி எடுத்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் போட்டுக்கொண்டிருக்கிறது இந்தத் தலைமுறை என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
இதற்கெல்லாம் உச்சம், மரண வீட்டில் பிணத்துடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுக்கொண்டதுதான்.
செல்ஃபி என்பது பெரும் நோய் என்று அறிஞர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி எதிர்மறையாகப் பார்க்கப்படும் ஒரு விஷயம் நேர்மறையாக ஆகுமா? ஆகும் என்று நிரூபித்திருக்கிறார்கள் தமிழ்நாட்டின் இளம் வாக்காளர்கள்.
தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்றத்துக்கு நடந்துமுடிந்திருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டு, சூட்டோடு சூடாக செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறை, மோசமாகப் பார்க்கப்படும் ஒரு விஷயத்தை (அதாவது செல்ஃபி மோகத்தை) எப்படி ஆக்கபூர்வமாக ஆக்கிக்கொள்ளலாம் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
வாக்களிப்பதன் மகத்துவத்தை எந்த சினிமா நட்சத்திரமும் சொன்னதைவிட வைரலாகவும் ஆழமாகவும் கொண்டுசெல்பவை இந்த ‘ஓட்டு செல்ஃபிகள்’.
கிட்டத்தட்ட ஒரு கோடி இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள்.
எதிர்பார்த்ததைவிடச் சற்றுக் குறைவான வாக்கு எண்ணிக்கை இருந்தாலும் பெரும்பாலான இளைஞர்கள் வாக்களித்துத் தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைக் களைந்திருக் கிறார்கள்.
இவர்களைக் குறிவைத்துதான் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க, மக்கள் நலக் கூட்டணி போன்றவை இடைவிடாமல் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்தனர்.
கட்சி சார்பான இளைஞர்கள் ஹேஷ்டேகுகளை உருவாக்கி டிரெண்டுகளை நிர்ணயித்தனர். தேர்தல் ஆணையமும் இளம் தலைமுறையைக் குறிவைத்து சமூக ஊடகங்களை நோக்கிப் படையெடுத்துத் தன்னை நவீனமாக்கிக்கொண்டது.
வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களைக் கொண்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பிரச்சாரம் பெரும்பாலும் இளைஞர்களைக் குறிவைத்ததுதான்.
இளைஞர்களை ஏன் இப்படி அனைத்துக் கட்சியினரும் குறிவைக்கிறார்கள்? சில புள்ளி விவரங்களைப் பார்த்தால் அதற்கான காரணம் நமக்குப் புரியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வாங்கிய ஓட்டுகளின் சதவீதம் 31%; காங்கிரஸ்: 19.3%. இரண்டுக்கும் இடையே ஓட்டுகளின் வித்தியாசம் 11.7%. ஆனால், சீட்டுக்களின் வித்தியாசம் 238.
கடந்த முறை முதல் தடவையாக ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 15 சதவீதம். வெற்றிபெற்ற பா.ஜ.க-வுக்கும் தோல்வியடைந்த காங்கிரஸுக்கும் இடையிலான வித்தியாசத்தைவிட இது அதிகம். காங்கிரஸை வீழ்த்துவதற்கான அஸ்திரம் இளைஞர்கள் வாக்குகளில்தான் இருக்கிறது என்று பா.ஜ.க. எளிதில் கண்டுகொண்டது.
சமூக ஊடகங்களில் மோடியை ‘வளர்ச்சி நாயகர்’ என்று பா.ஜ.க. செய்த மூர்க்கமான பிரச்சாரம், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் மீது வரிசையாகச் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து இளைஞர்களிடையே சந்தேகமில்லாமல் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் விளைவுதான் பா.ஜ.க-வின் வெற்றி.
அதற்குப் பிறகு இந்தியா முழுவதும் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் ஓட்டுகளைக் குறிவைப்பதென்பது எல்லாக் கட்சிகளுக்கும் பிரதான பிரச்சார உத்தியாக இருந்தது.
தற்போது நடந்து முடிந்திருக்கும் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் இளைஞர்களின் வாக்குகளுடைய சக்தியை நமக்கு உணர்த்தியிருக்கின்றன.
இளைஞர்களின் நம்பிக்கை, கோபம் எல்லாம் ஒன்றுசேர்ந்து வெளிப்பட்டதன் விளைவுதான் இந்த முடிவுகள். இன்னும் அதிக அளவில் இளைஞர்கள் ஓட்டு போட்டிருக்க வேண்டும் என்றும் விமர்சனம் முன்வைக்கப் படுகிறது.
அதுவும் கூட அரசியல் கட்சிகளின், மூத்த தலைமுறையின் தோல்வி என்றுதான் நாம் கருத வேண்டும். இளைஞர்களை ஈர்க்கும் வலுவும் செயலூக்கமும் கொண்ட கட்சிகள் எதுவும் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம். ‘ஆம் ஆத்மி கட்சி’யின் எழுச்சியைப் பாருங்கள்.
பெரிய கட்சிகளின் மீதான இளைஞர் களின் கோபத்தையும் அவநம்பிக்கையையும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொண்டதன் விளைவுதான் ஆம் ஆத்மியின் பெருவெற்றி! நம்பிக்கையும் திறமையும் உள்ள பெரும் இளைஞர் பட்டாளத்தை ஈர்க்கும் கட்சிகள் தமிழகத்திலும் இருந்தால் இளைஞர்கள் 100% வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஆக, இந்தத் தலைமுறையை ‘செல்ஃபி தலைமுறை’ என்று வெறுமனே விமர்சனம் செய்துகொண்டிருப்பவர்களுக்கு இளைஞர்கள் செல்ஃபியாலேயே கொடுத்திருக்கும் பதிலடிதான் இந்தத் தேர்தல் முடிவுகள்!
படங்கள் தொகுப்பு: அபிராமி, நந்தினி, ஸ்வாதி, பவித்ரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT