Published : 14 Apr 2022 04:48 PM
Last Updated : 14 Apr 2022 04:48 PM
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை காலம் பெரும்பாலும் கரோனா ஊரடங்கிலேயே கழிந்தது. ஆனால், இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாட்டில் இருப்பதால், ‘வீட்டிலிருந்தே வேலை’ போன்றவை முடிவுக்கு வந்திருக்கின்றன. படிப்பு, தொழில், வேலை நிமித்தமாக எல்லொருமே வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், சுட்டெரிக்கும் கோடை வெயிலால் வெளியே செல்லவே பலரும் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க ஏ.சி. அறைகளிலேயே தவம் கிடப்போர் ஏராளம். ஒருவேளை வெளியே செல்ல வேண்டுமென்றால் ஏ.சி. கார். ஏ.சி. பேருந்தில் செல்வோரும் கோடை காலத்தில் அதிகரிக்கும். ஆனால், ஏ.சி. கார், ஏ.சி. பேருந்து போன்ற வசதிகள் அனைவருக்கும் சாத்தியப்படாது.
புதுமையான ரிக்ஷா
இதுபோன்ற சூழலில் சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க, புதுமையான வழிகளை சிலர் பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் ஓர் ஒளிப்படம் வைரலாகி சுற்றிக்கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், இலங்கைக்கான முன்னாள் நார்வே தூதருமான எரிக் சோல்ஹெய்ம் ட்விட்டரில் பகிர்ந்த அந்த ஒளிப்படம் நெட்டிசன்களின் புருவத்தை உயரச் செய்திருக்கிறது. ரிக்ஷாவின் மேல்புறம் புல் மற்றும் செடிகளால் முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது. ரிக்ஷாவையே ஒரு கார்டன் போல மாற்றி வைத்திருக்கிறார். கொளுத்தும் வெயிலில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும் ரிக்ஷாவில் சவாரிக்கு வருபவர்களை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் வகையில் இந்த ரிக்ஷாவை அதன் உரிமையாளர் மாற்றி வைத்திருக்கிறார்.
நெட்டிசன்கள் பாராட்டு
இந்தப் படத்தைப் பகிர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எரிக் சோல்ஹெய்ம், "இந்த இந்திய மனிதர் வெயிலிலும் குளிர்ச்சியாக இருக்க ரிக்ஷாவுக்கு மேல் புல் வளர்த்துள்ளார். உண்மையில் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ரிக்ஷா ஓட்டுநர் இந்தியாவில் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. என்றாலும் நெட்டிசன்கள் பலரும் அந்த ரிக்ஷாக்காரர் அஸ்ஸாமில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். பார்க்கவே புதுமையாக இருக்கும் இந்த ரிக்ஷா ஒளிப்படத்தை ஏராளமானோர் ரீட்வீட் செய்து வருகிறார்கள். ரிக்ஷா ஓட்டுநரின் புதுமையான ஐடியாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment