Last Updated : 05 Apr, 2022 10:30 AM

 

Published : 05 Apr 2022 10:30 AM
Last Updated : 05 Apr 2022 10:30 AM

இளமைக் களம் | வட சென்னை நாயகர்கள்!

காலநிலை மாற்றம் இன்று உலகளாவிய ஒரு விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை அனைவருமே அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஐபிசிசி என்கிற காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அறிக்கை உலக நாடுகளைக் கலவரப்படுத்தியிருக்கிறது. அடிக்கடி பேரிடரால் பாதிக்கப்படும் சென்னைக்கும் அபாயச் சங்கை ஊதியிருக்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் எண்ணூர் - மணலி ஆகிய பகுதிகள் சென்னையின் சுற்றுச்சூழல் சீர்கேடால் நிறைந்துள்ளதையும் விழிப்புணர்வாகக் கொண்டு செல்லும் பணிகளை ஒருசேர செய்துவருகிறது சென்னையைச் சேர்ந்த இளைஞர் குழு ஒன்று!

இளைஞர்கள் குழு

வட சென்னையை வேறொரு கோணத்தில் பார்க்கும் பொதுப் புத்தி பலருக்கும் உண்டு. மக்களின் சுவாசத்தை மூச்சு முட்டச் செய்யும் அளவுக்குத் தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் அதிகம் உள்ள பகுதி இது. ஆனால், வளர்ச்சி, தேவை போன்றவற்றின் பெயரால் இந்தப் பகுதிகளில் மேலும் மேலும் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், துறைமுக விரிவாக்கம் என நடக்கும் பணிகளுக்கு எதிராகத் திரண்டு பொதுமக்கள் போராடும் காட்சிகளும் இங்கே அதிகம். இப்படிப் போராடும் மக்களோடு துணையாக நிற்கிறது இளைஞர்களால் தொடங்கப்பட்ட ‘சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு’. இளைஞர்கள் நிறைந்திருக்கும் இக்குழுவில் 20 பேர் தன்னார்வலர்களாக இயங்கிவருகிறார்கள்.

சென்னையில் இப்படி ஓர் குழுவை ஏற்படுத்தும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? இக்குழுவின் மூத்த தன்னார்வலர்களில் ஒருவரான கார்த்திக்கிடம் பேசினோம். “2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதுமே காலநிலை மாற்றம் தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. சென்னையைப் பொறுத்தவரை, வட சென்னையில் உள்ள எண்ணூர் - மணலி போன்ற பகுதிகள் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் மையமாக உள்ளன. இந்தப் பகுதிகள் ஏற்கெனவே தொடர்ந்து பாதிக்கப்பட்டும்கூட, இங்குதான் இன்னும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காலநிலை மாற்றம் என்பதே சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய அங்கமில்லையா? காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் நீதி, சமூக நீதி ஆகியவற்றை முன்னெடுக்க இங்கு போராடும் மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் ‘காலநிலை மாற்றம் செயல்பாட்டுக் குழு’” என்கிறார் கார்த்திக்.

கார்த்திக்

வட சென்னை ஒளிப்படங்கள்

சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர் இக்குழுவின் இளைஞர்கள். வீதி நாடகங்கள் நடத்துவது, ஒளிப்படக் கண்காட்சி நடத்துவது, போராடும் மக்களுக்காகத் துணையாக நிற்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது இந்த இளைஞர் குழு. பெருநகரான சென்னையை மாநகரம் என்கிற ஒற்றை அடைமொழியில் அழைத்தாலும் வட சென்னையைப் பார்க்கும் பார்வை மாறவில்லை. ஆங்கிலேயர்கள் காலத்தில் ‘பிளாக் டவுன்’ என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, இன்றும் பாகுபாடு காட்டப்படும் பகுதியாகவே உள்ளது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் பல படங்களும் வட சென்னையை மோசமாவே சித்தரித்தன. ஆனால், அண்மைக் காலமாக வட சென்னையைப் பற்றிய படங்கள் மூலம் அதன் பார்வை மாறியிருக்கிறது.

என்றாலும், வட சென்னையைப் தவறான பார்வையை பார்வையைப் போக்கும் விதமாகவே அண்மையில் ‘ரீஃபிரேம்’ என்கிற பெயரில் ஒளிப்படக் கண்காட்சியை இந்த இளைஞர் குழு நடத்தியது. இதற்காக ஆறு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் வட சென்னையின் பல பகுதிகளை அழகாக ஒளிப்படங்கள் எடுத்து, அவற்றை வைத்து கண்காட்சி நடத்தினார்கள். அடுத்த கட்டமாக, காலநிலை மாற்றம் பற்றிய ஐபிசிசி அறிக்கையை சென்னை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னையின் பிரச்சினை

“அதிகரிக்கும் வெப்ப நிலையால் உலக அளவில் 2050ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய அளவில் வெள்ளச் சேதங்களை எதிர்கொள்ளும் 20 கடலோர நகரங்களில் 13 நகரங்கள் ஆசியாவில் உள்ளன என்று ஐபிசிசி அறிக்கை சொல்கிறது. அதில் சென்னையும் ஒன்று. ஐபிசிசி அறிக்கையின் முக்கிய இலக்கே கார்பன் உமிழ்வைக் குறைப்பதுதான். கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அதை உமிழும் திட்டங்களைக் குறைக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்கள் வட சென்னையில் மணலி, எண்ணூர், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் கொண்டு வரப்படுகின்றன. இதுபோன்ற திட்டங்கள் பெசன்ட் நகரிலோ அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ ஏன் தொடங்கப்படுவதில்லை? இது வட சென்னை சார்ந்த பிரச்சினை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த சென்னையின் பிரச்சினை. எனவே, இந்த விழிப்புணர்வை சென்னை முழுவதும் கொண்டு செல்லும் பணிகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் கார்த்திக்.

சென்னை போன்ற பெருநகரில் இளைஞர்களின் உலகமே வேறு. ஜாலி, கேலி, அரட்டை, விளையாட்டு, சினிமா என்கிற வரையறைக்குள் இளைஞர்களைப் பொதுவாக அடக்கிவிடுவார்கள். ஆனால்,முன்னுதாரண இளைஞர்களும் சென்னையில் ஏராளம் இருக்கிறார்கள். அந்த வகையில் சுற்றுச்சூழலை உரக்கப் பேசும் இந்த இளைஞர் குழுவின் செயல் பாராட்டுக்குரியது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x