Last Updated : 08 Apr, 2016 12:14 PM

 

Published : 08 Apr 2016 12:14 PM
Last Updated : 08 Apr 2016 12:14 PM

காமிக்ஸ் கொடுத்த உயிர்

‘‘சார், நான் கதை சொல்ல வரவில்லை. ஒரு வரிக் கதை மட்டும்தான் சொல்ல வருகிறேன். அதேநேரம், நீங்கள் நடிக்கவில்லையென்றால், நான் இந்தப் படத்தைக் கைவிட்டுவிட்டு, வேறொரு படமெடுக்கச் சென்றுவிடுவேன்’’. 2005-ம் ஆண்டில் மும்பை திரைப்பட விழாவின் சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, லண்டன் திரைப்பட விழாவில் சிலாகித்துப் பேசப்பட்ட ‘மானசரோவர்’ படத்தின் இயக்குநர் அனூப் குரியன், இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான நஸீருத்தின் ஷாவிடம் இப்படிச் சொன்னார்.

கேரளாவைச் சேர்ந்த அனூப், பூனே திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு சான் ஃபிரான்சிஸ்கோவில் மென்பொருள் பொறியாளராக இருந்து சம்பாதித்த ரூ. 11 லட்சத்தில் எடுத்த படம்தான் ‘மானசரோவர்’. ஆனால், படத்தை வெளியிடுவதில் நிறைய பிரச்சினைகள். ரிலீஸ் பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி என கல்லூரிகளிலும் சொல்லிக் கொடுப்பதில்லையே!

அதன் பிறகு அமெரிக்கா சென்றுவிட்ட அனூப், தனது அடுத்த படைப்பான‌ 'தி ப்ளூபெர்ரி ஹன்ட்' படத்துக்கான திரைக்கதையைச் செழுமைப்படுத்தினார். எவ்வளவு நாட்கள், எங்கே, எப்படிப் படமாக்கப்பட வேண்டும் என்பது போன்றவற்றை இந்தியாவில் இருக்கும் தன் குழுவினருடன் ஸ்கைப், கூகுள் டாக், மின்னஞ்சல்கள் மூலமாகவே ஆலோசித்து, ப்ரீ புரொடக்‌ஷன் செலவுகளைக் குறைத்தார். அதன் பிறகுதான் நஸீருத்தின் ஷாவிடமே பேசினார். அவர் சொன்ன ஒரு வரிக் கதையுடன், அவரைப் பற்றியும் தெரிந்துகொண்டு உடனடியாக நடிக்கச் சம்மதித்துவிட்டார் நடிப்புலக மன்னர். அனூப் சொன்ன ஒரு வரிக் கதை என்ன, ஷாவின் சம்பளம் என்ன என்பதைக் கடைசியில் பார்ப்போம்.

பல வகைகளிலும் எதிர்பாராத சங்கடங் களைக் கட‌ந்து, 2010-ல் படம் தயாரானது. படப்பிடிப்பு நடக்கும் அனைத்து இடங்களுக்கும் பாபுராஜ் என்ற ஓவியரை அழைத்துச்சென்று காண்பித்திருந்தார் அனூப். அதனால், கதையின் முன்னோட்டம்போல, படத்தின் ஆரம்ப டைட்டில் காட்சிகளை அனிமேஷனில் தந்திருந்தார் பாபுராஜ்.

திரும்பவும் முதலிலிருந்து

முந்தைய படத்துக்கு ஏற்பட்ட ‘டிஸ்ட்ரிபியூஷன்' பிரச்சினைதான், இந்தப் படத்துக்கும் தொடர்ந்தது. சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே வரும் சிக்கல்களால் இப்படம் தள்ளிப்போவதைக் கண்ட அனூப், அதற்கு நிரந்தரத் தீர்வு கண்டறிய விரும்பினார். படத்தை வெளியிடாமல் அயல்நாட்டுக்கே திரும்பினார்.

சிறு முதலீட்டுப் படங்கள் சந்திக்கும் முதல் பிரச்சினை, சந்தைப்படுத்துதல். விளம்பரங்கள் மட்டுமே அதைக் களையும் ஒரே வழி எனப் பழைய பாணியிலேயே தென்னிந்தியர்கள் சிந்திப்பதைக் கண்ட அனூப், தன்னுடைய படத்தைப் புதிய பாணியில் விளம்பரப்படுத்த நினைத்தார். அனிமேஷன் மற்றும் கிராபிஃக் நாவல்களின் ரசிகரான அனூப், பாபுராஜை மறுபடியும் அணுகி, இந்தப் படத்தை ஒரு காமிக்ஸ் வடிவில் கொண்டுவரலாமா என்று கேட்டார்.

சினிமா டூ கிராபிஃக் நாவல்

அதற்கு பாபுராஜ் படத்தைப் பார்க்க விரும்பினார். ஆனால், அனூப் முழுப் படத்தையும் அவருக்குக் காண்பிக்கவில்லை. திரைப்படத்தின் மையக் கருவும் காமிக்ஸின் மையக்கருவும் ஒன்றாக இருந்தாலும், திரைக்கதை வெவ்வேறாக இருக்கும்படியாக 92 பக்கங்களில் ஒரு கிராபிஃக் நாவல் தயாரிக்கப்பட்டது. யானைகளின் காதலனான அனூப்பின் திரைப்படத்தில் இரண்டு யானைகள் வரும், ஆனால் காமிக்ஸிலோ ஒரு யானைதான் வரும். கிளைமேக்ஸும்கூட காமிக்ஸிலும் திரைப்பட வடிவிலும் வேறுவேறாகவே இருக்கும். படத்தில் ரஜினி ரசிகராக வரும் ஒரு கதாபாத்திரம், முழுக்க முழுக்கத் தமிழிலேயே பேசியிருக்கிறது.

காமிக்ஸும் ஃபேஸ்புக்கும்

திரைப்படத்தின் காமிக்ஸை அவர் புத்தகமாக வெளியிடவில்லை. மாறாக, 2015-ம் ஆண்டின் இறுதியிலிருந்து ஃபேஸ்புக்கில் தினமும் ஒவ்வொரு பக்கம் என்று காமிக்ஸை வெளியிட ஆரம்பித்தார். ஆரம்ப மாதங்களிலேயே 14 லட்சத்துக்கும் மேலான வாசகர்களைப் பெற்று இந்த காமிக்ஸ் அசுர ‘ஹிட்' அடிக்க, படத்துக்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் கூடின. இப்படியாக ஐந்தாண்டுகளாகப் பெட்டிக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஒரு படத்துக்கு, காமிக்ஸும் ஃபேஸ்புக்கும் மறுவாழ்வு கொடுத்துள்ளன.

புதுமை வெளியீடு

என்னதான் காமிக்ஸ் மூலமாகப் படம் பரவலாகப் பேசப்பட்டாலும் நஸீருத்தின் ஷா என்ற பெரிய நடிகர் இருந்தாலும், சிறு முதலீட்டுப் படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவது சிரமமான விஷயம்தான். அதனால்தான் இந்த இடைப்பட்ட 5 ஆண்டுகளில், தியேட்டருக்கு மாற்றாக ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்த அனூப் திட்டமிட்டிருந்தார். அதன்படி, The Blueberry Hunt என்ற தனது ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக இந்தப் படத்துக்கு முன்பணம் செலுத்திப் பதிவு செய்துகொள்பவர்களுக்கு, ஒரு தனிப்பட்ட பிரதி அனுப்பப்படும்.

அதை ஸ்மார்ட்போன் / கம்ப்யூட்டரிலேயே ‘ப்ளூ ரே' தரத்தில் டவுன்லோட் செய்து பார்க்கலாம். படம் வெளியாகும் ஏப்ரல் 30-ம் தேதியன்றே இணையத்திலும் தரவிறக்கம் செய்ய ஆயத்தப்படுத்தியிருந்தார் அனூப். ஆனால், இன்னமும் கூடுதல் திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு கிடைத்ததால், படத்தை ஏப்ரல் 8-ம் தேதியே மும்பையிலும் தென்னிந்தியாவின் வெள்ளித்திரைகளிலும் வெளியிடுகிறார்.

தனித்தன்மை

‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச். மூலமாக வெளியிடத் திட்டமிட்டிருந்தாலும், பல காரணங்களால் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. பல இந்திப் படங்கள் இப்போதும் டி.டி.ஹெச்.சில் படம் வெளியானவுடனே காணக் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை நாம் விரும்பிய நேரத்தில் பார்க்க முடியாது. அவர்கள் திரையிடும் நேரத்தில்தான் பார்க்க முடியும். ஆனால், இந்த The Blueberry Hunt படத்தின் சிறப்பே, பணம் செலுத்திய பிறகு நமக்குக் கிடைக்கும் தனி ‘லிங்க்'கின் மூலம் 3 நாட்களுக்குள்ளாகத் தரவிறக்கம் செய்து, நாம் விரும்பியபடி (செல்போன் / கம்ப்யூட்டர்), விரும்பிய நேரத்தில் பார்க்கலாம்.

ஐந்து ஆண்டுகள் தாமதமானதால், ரூ. 25 லட்சத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் செலவு தற்போது கூடியிருக்கலாம். ஆனால், வெளியிடுவதில் ஆரம்பித்து, சந்தைப்படுத்துதல் வரையில் புதுமையை அறிமுகப்படுத்தும் The Blueberry Hunt நமக்குச் சொல்லித்தருவது ஒன்றுதான்: ‘மாற்றம் ஒன்றே மாறாதது’.

இப்படியான யுத்திகள் வித்தியாசமான ஒன்றாக இல்லாமல், தவிர்க்கப்பட முடியாதவையாக மாறும் காலம் சீக்கிரம் வரும். ‘பாகுபலி 2’ திரைப்படம் வெளியாவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பே, அதற்கான காமிக்ஸை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ராஜமௌலி. தமிழ்ப் படங்களுக்கும் இப்படி காமிக்ஸ் புத்தகம் மூலமாக விளம்பரம் செய்தால் எப்படி இருக்கும்?

அனூப் சொன்ன அந்த ஒருவரிக் கதை: வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தில், பணத் தேவைக்காகத் தனது தோட்டத்தில் ‘மாரியுவானா’ என்ற போதைப்பொருளை வளர்க்கும் ஒரு முதியவரின் கதை.

நஸீருத்தின் ஷாவின் சம்பளம்: கதையால் கவரப்பட்டு, இலவசமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர், பதிப்பாளர்.
தொடர்புக்கு: prince.viswa@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x