Published : 29 Mar 2022 10:45 AM
Last Updated : 29 Mar 2022 10:45 AM

பாப்கார்ன் | தண்ணீருக்குள் ராஜநடை

சிலரால் சாதாரணமாக மூச்சை தம் பிடித்துக்கொள்ள முடியாது. ஆனால், குரோஷியாவைச் சேர்ந்த இளைஞர் விட்டோமிர் தண்ணீருக்கடியில்கூட மூச்சை தம் பிடித்து வைத்துக்கொள்வதில் வல்லவர். அண்மையில் தண்ணீருக்கடியில் மூச்சை விடாமல் 107 மீட்டர் தொலைவு நடந்து காட்டியிருக்கிறார் விட்டோமிர். தண்ணீருக்கடியில் இருக்கும்போது மிதந்து மேலே வந்துவிடக் கூடாது என்பதற்காக இரண்டு கிலோ எடையுள்ள பொருளையும் சுமந்தே விட்டோமிர் நடந்திருக்கிறார். 3 நிமிடங்கள், 6 விநாடிகள் வரை மூச்சை தம் பிடித்துக்கொண்டு நடந்த விட்டோமிரின் இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறது. விட்டோமிரின் இந்த சாதனையும் அவருடைய வித்தியாசமான பயிற்சிகளின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரல் ஆகியிருக்கின்றன.

எகிறும் எண்ணிக்கை

இந்தியாவில் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக மொபைல் போன்களின் பயன்பாடு எகிறிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.5 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை 76.5 கோடியாக அதிகரித்துவிட்டது. ஐந்து ஆண்டுகளில் அப்படியே இரட்டிப்பாகிவிட்டது. இதெல்லாம் நோக்கியாவின் ஆண்டு மொபைல் பிராட்பேண்ட் குறியீடு அறிக்கை - 2022இல் தெரியவந்துள்ளது.
இதேபோல இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதம் ஒன்றுக்கு 17 ஜிபி டேட்டா பயன்படுத்துவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷ்லே அதிரடி

டென்னிஸில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி 25 வயதில் ஓய்வை அறிவித்திருந்தாலும், அவருடைய விளையாட்டுப் பயணம் சற்றே வித்தியாசமானது. 2011ஆம் ஆண்டில் விம்பிள்டன் ஜூனியர் பட்டத்தை வென்ற ஆஷ்லே, 18 வயதை எட்டியபோது டென்னிஸிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியூட்டினார். பின்னர் கிரிக்கெட் விளையாடச் சென்றுவிட்டார். பின்னர் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட்டுவிட்டு மீண்டும் டென்னிஸ் விளையாட 2017இல் வந்தார். டென்னிஸுக்கு வந்த பிறகு 2019 பிரெஞ்ச் ஓபன், 2021 விம்பிள்டன், 2022 ஆஸ்திரேலிய ஓபன் என பட்டங்களைத் தட்டிச் சென்று நம்பர் ஒன் வீராங்கனையாக உருவெடுத்தார். தற்போது மீண்டும் டென்னிஸில் இருந்து விலக ஆஷ்லே முடிவு செய்துள்ளார். அடுத்து என்ன செய்வாரோ தெரியவில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x