Last Updated : 22 Apr, 2016 12:43 PM

 

Published : 22 Apr 2016 12:43 PM
Last Updated : 22 Apr 2016 12:43 PM

1979-ல் ‘இன்று, நேற்று, நாளை’

‘ப்ரிமானிஷன்', ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ', ‘சோர்ஸ் கோட்' உள்ளிட்டவை கடந்த சில வருடங்களில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்கள். இப்படங்களின் நாயகர்கள் எதிர்காலத்தில் வரும் சம்பவங்களைக் கணிக்கக்கூடிய அல்லது எதிர்காலத்துக்கே சென்று சம்பவங்களை மாற்றியமைக்கக்கூடிய திறனைப் பெற்றவர்கள். இவையெல்லாம் சமீபத்திய வருடங்களில் வெளியானவை. ஏறத்தாழ 37 வருடங்களுக்கு முன்பே தமிழில் இதுபோல ஒரு கதை வெளியாகியிருக்கிறது, தெரியுமா?

தமிழில் குழந்தைகளுக்கான தலைசிறந்த கதைசொல்லி வாண்டுமாமாவின் படைப்பான ‘கனவா? நிஜமா?'தான் அது!

தமிழில் காமிக்ஸ் என்று எடுத்துக்கொண்டால், அது முல்லை தங்கராசன், வாண்டுமாமா மற்றும் இரும்புக் கை மாயாவி என்று மூன்று ஜாம்பவான்களை மையமாகக் கொண்டது. இவற்றில் தமிழில் உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த சித்திரக்கதை என்று ‘கனவா, நிஜமா?'வைச் சொல்லலாம்.

தமிழ் சித்திரக் கதைகளில் காமிக்ஸ் என்ற கதை சொல்லும் அமைப்பை மிகச் சரியாக உணர்ந்து, அதை முறையாகப் பயன்படுத்தி, வார்த்தைகளால் அல்லாமல், ஓவியங்களின் மூலம் கதையை விவரித்த படைப்பு இது.

வாண்டுமாமா + ஓவியர் செல்லம் கூட்டணி இக்கதையின் உயரத்தை இன்னமும் உச்சத்துக்குக் கொண்டுசென்றது. வாண்டுமாமாவின் மாஸ்டர்பீஸ்களிலேயே சிறந்ததாகப் பலராலும் மதிக்கப்படும் இக்கதை, வயது வேறுபாடுகளையும் காலத்தையும் கடந்து நிற்கிறது.

நாளையும் இன்றும்

எதிர்காலம், எண்ணற்ற ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் மாபெரும் புதிர் விளையாட்டு. சாதாரணர் முதல் கோடீஸ்வரர்கள் வரை தமது எதிர்காலத்தை அறிந்துகொள்ள விரும்பாத வர்களே இல்லை எனலாம்.

மாயாபுரியில் வசிக்கும் நீலன், ஒருநாள் ஆடுகளை மேய்க்கும்போது விசித்திரப் புகை ஒன்றைச் சுவாசித்து மயங்கிவிடுகிறான். விழித்த பிறகு தனது வீடு, நாடு மற்றும் நாட்டு மன்னர் என எல்லாமே மாறியுள்ளதைக் கண்டு திகைக்கிறான். பின்னர், தான் 10 ஆண்டுகள் முன்னோக்கி வந்துள்ளதை உணர்கிறான். குழப்பத்துடன் மறுபடியும் அதே மலைப்பகுதிக்குத் திரும்பி, மறுபடியும் அதே இடத்தில் உறங்குகிறான். மறுபடியும் கண்விழிக்கும்போது, பழைய காலகட்டத்துக்குத் திரும்பியிருக்கிறான். இப்போது, தான் எதிர்காலத்தில் கண்டதை மன்னரிடம் சொல்ல, அவர் நீலனை சிறையிலடைத்துவிடுகிறார். மன்னரின் தம்பி, நீலனை ரகசியமாக விடுவித்து, காலத்தைத் தனி ஒருவனால் வெல்ல முடியுமா என்ற கேள்வியின் கதவைத் திறக்கிறார்.

அற்புத அறிவியல் புனைவு

குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்ட 1979-ம் ஆண்டு 'கல்கி' வார இதழில் 25 வாரத் தொடராக வெளிவந்த இந்தக் கதை, தமிழின் ஆகச்சிறந்த சித்திரக்கதைப் படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட நிறைய காரணங்கள் உள்ளன.

l இதற்கு முன்னர் தமிழில் சில 'சயின்ஸ் ஃபிக்‌ஷன்' காமிக்ஸ் வந்திருந்தாலும், சரியான லாஜிக்குடன் படைக்கப்பட்ட முதல் படைப்பு இது.

l சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் பெரும்பாலும் சமகாலத்திலேயே நிகழ்வதாகப் படைக்கப்பட்டிருக்கும். ஆனால், அக்காலத்திய மரபுப்படி மன்னர் காலத்துக் கதையின் ஊடே ‘ப்ரிமானிஷன்' பற்றிய விளக்கத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி வடிவமைக்கப் பட்டிருப்பது கதையின் நேர்த்தி.

l நிகழ்காலத்தில் சிறிய செடியாக இருப்பதுதான் பத்தாண்டுகளுக்குப் பிறகு மரமாகவிருப்பதை உணர்ந்து, அதை வேரோடு பிடுங்கி, எதிர்காலத்தை மாற்ற முடியும் என்பதை ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் விளக்கிய எளிமையான கதை சொல்லும் பாணி இந்தக் கதையின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

புதுமை ஓவியப் பாணி

கஸ்தூரிராஜா, வி. சந்திரன் போன்ற சித்திரக்கதை ஜாம்பவான்கள் வழியில் புள்ளிகளை மட்டுமே கொண்டு, கறுப்பு வெள்ளையில் நிழலூட்டும் ஓவியப்பாணியான ‘ஸ்டிப்ளிங்' என்ற தனி ‘ஷேடிங்' முறையை ‘ஓவிய மேஸ்ட்ரோ' செல்லம் இக்கதையில் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

முழு வண்ண ஓவியங்களில் பலவகையான அடர்த்தியில் வண்ணங்களை ஏற்றலாம். கறுப்பு வெள்ளை ஓவியங்களில் தோற்ற ஆழம் கொடுக்கப் பயன்படும் ‘கியாரஸ்க்யூரோ' என்ற ஓவியப் பாணியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது இந்தக் கதைதான்.

வாரத்துக்கு இரண்டு பக்கங்கள் என வெளியான இக்கதை, தொடர்கதைகளுக்கே உரித்தான ஒரு முடிச்சை இரண்டு பக்கங்களுக்கொரு முறை கொண்டி ருந்தாலும்கூட, முழுக் கதையாகப் படிக்கும்போது உறுத்தல் இல்லாமல்தான் இருக்கிறது.

- கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் பதிப்பாளர்

தொடர்புக்கு: prince.viswa@gmail.com

கனவா, நிஜமா?

கதை: வாண்டுமாமா

ஓவியம்: செல்லம்

பக்கங்கள்: கறுப்பு வெள்ளையில் 52 பக்கங்கள்

அமைப்பு: 1979-ல் 25 வாரத் தொடர்கதையாக வெளியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x