Last Updated : 01 Apr, 2016 11:45 AM

 

Published : 01 Apr 2016 11:45 AM
Last Updated : 01 Apr 2016 11:45 AM

கோலி: பேரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல!

பிரான்ஸில் ஒரு கதை உண்டு. பிரெஞ்சு போர் வெற்றிக்குப் பிறகு, போரைத் தலைமையேற்று நடத்திய பிரெஞ்சு ஜெனரலிடம் ஒரு கேள்வி கேட்டார்களாம். “இந்த வெற்றிக்குக் காரணம், உங்கள் படையின் துணைத் தளபதிதானே?” என்ற கேள்விதான் அது. இருபது ஓவர் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போர்களில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணம் யார் என்று கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் கேட்டால், துணை கேப்டன் விராட் கோலியை நிச்சயம் கைகாட்டுவார்.

பொறுமை காக்க வேண்டிய நேரத்தில் பொறுமை, வேகம் கூட்ட வேண்டிய நேரத்தில் வேகம், விவேகம் காட்ட வேண்டிய சூழ்நிலையில் விவேகம் என மிளிர்கிறார் விராட் கோலி. “சச்சின் டெண்டுல்கர்தான் என்னுடைய ரோல் மாடல்” என்று எப்போதும் சொல்லும் விராட் கோலி, இன்றைய இளைஞர்களுக்கு ரோல் மாடலாக மாறிக்கொண்டிருக்கிறார்!

நிதானம், நேர்த்தி

இருபது ஓவர் என்பது கிரிக்கெட்டில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம். தொடக்கம் முதலே ஆவேசம், முரட்டுத்தனமான விளாசல், எல்லைக்கோட்டைத் தாண்டிக்கொண்டே இருக்கும் பந்து என அதிரடியான விளையாட்டைக் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். கிரிக்கெட்டின் மரபார்ந்த அழகுக்கெல்லாம் இங்கே வேலையே இல்லை. இருபது ஓவர் விளையாட்டில் சூறாவளிகளாக இருக்கும் கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற ஆட்டக்காரர்கள் இப்படியான அதிரடி வீரர்கள்தான். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வீரர் விராட் கோலி. நிதானமும் நேர்த்தியும்தான் விராட் கோலியின் உத்தி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர், இருபது ஓவர் ஆசியக் கோப்பை, இப்போது இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் என எல்லா தொடர்களிலும் விராட் கோலியின் இந்த உத்தியைப் பார்த்திருக்கலாம். பெரிய ஷாட்களை அடிக்க முயலாமல் பெரும்பாலும் ஓரிரு ரன்கள் சேர்ப்பதிலேயே கோலியின் கவனம் இருந்ததைப் பார்த்திருக்கலாம். அதே சமயம் வாய்ப்பு கிடைக்கும்போது நேர்த்தியான ஷாட்டுகளை ஆடி பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்புவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

பதற்றம் இல்லா ஆட்டம்

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இரு போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. இது, ஆட்டம் முழுவதும் விராட் கோலியின் மீது சுமையாக மாறியது. ஆனால், மனிதர் பதற்றம் அடையவே இல்லை. பந்துகளை வீணடிக்காமல் ஓரிரு ரன்களாகச் சேர்த்தார். முதலில் ஆட்டத்தை நிலைப்படுத்திக்கொண்டார்.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் யுவராஜ் சிங்கால் ஓட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது கோலி அலட்டிக்கொள்ளவே இல்லை. யுவராஜ் சிங் களத்தில் இருந்தவரை ரன் ஓடுவதில் அவசரம் காட்டாமல் அவரை ஆசுவாசப்படுத்தினார். ஆனால், தோனி களத்துக்கு வந்த பிறகு ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் எல்லாம் இரண்டு ரன்கள் ஓடி எதிரணிக்குத் திகிலூட்டினார்.

இளைஞர்கள் கற்க வேண்டியது

தோனியிடமிருந்து தலைமைப் பண்பைக் கற்க வேண்டும் என்று சொல்வார்கள். எப்போதும் அலட்டிக்கொள்ளாமல் இருத்தல், சரியான திட்டமிடல், சமயோசிதமான புத்தி, வித்தியாசமான சிந்தனை ஆகியவை தோனியின் தலைமைப் பண்பில் வெளிப்படும். கோலி என்றாலே ஆக்ரோஷம்தான். ஆக்ரோஷம் எப்போதும் வெற்றி தராது என்று சொல்வார்கள். ஆனால், கோலியின் ஆக்ரோஷம் கண்மூடித்தனமான ஆக்ரோஷமல்ல. ஆக்ரோஷத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றியை வசப்படுத்த முடியும் என்பதற்கு கோலி சிறந்த உதாரணம். கோலியிடம் ஆக்ரோஷம் மட்டுமல்ல, கூடவே பொறுமை, வேகம், விவேகம் ஆகியவையும் நிறைந்தே இருக்கிறது. இவை அனைத்தையும் ஒருசேர நிர்வகிப்பதில் விராட் கோலி தொடர்ந்து செஞ்சுரி அடித்துக்கொண்டிருக்கிறார்.

பாணி மாறாத ஆட்டம்

இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் தான் மூலதனம். ஆனால், கோலி அந்த நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளவில்லை. அவருடைய பாணியியைப் பின்பற்றினார். அதாவது முதலில் பொறுமை, பிறகு அதிரடி என்ற பாணியை அவர் பின்பற்றினார். அதிரடியும் கண்மூடித்தனமான அதிரடி அல்ல. இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாமல் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார். டிவில்லியர்ஸ், கெயில் போன்றோர் மைதானத்தின் நாலாபுறங்களிலும் பந்துகளை பறக்கவிட்டாலும், க்ளாஸிக் ஷாட்டுகளின் மூலமாகவே ஆதிக்கம் செலுத்தி, தனது ஆட்டத்தில் ஏ கிளாஸ் அந்தஸ்தைக் கூட்டுகிறார் கோலி.

வெளிப்பட்ட தலைமைப் பண்பு

இருபது ஓவர், ஒருநாள், டெஸ்ட் என எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும், அவருடைய பணியைச் சிறப்பாக வும், தொடர்ந்தும் செய்வதைப் பார்க்கலாம். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லட்சுமணன் என சீனியர்கள் இருந்த காலத்திலும் தன்னால் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் விராட் கோலி. இந்த அனுபவசாலிகள் முன்னிலையிலேயே தன்னிடம் இருந்த தலைமைப் பண்பை வெளிப்படுத்த கோலி தவறியதில்லை. சீனியர்கள் இருக்கிறார்கள் என்று ஒதுங்கிக்கொள்ளாமல், களம் இறங்கி அதகளப்படுத்துவது கோலியின் பாணியே. இதுவும் இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டிய பாடம்தான்.

அணியில் ஆதிக்க வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் தோனி விராட் கோலி பற்றி இப்படிக் கூறினார்: “நான்கு வருடங்களாக கோலியின் ஆட்டத்தை எதிர்முனையில் நின்று அதிகம் ரசித்திருக்கிறேன். இந்திய அணியில் கடந்த ஒரு வருடமாக கோலியின் பங்களிப்பு அதிகம். இந்திய அணி கோலியை 65 சதவிகிதம் நம்பியுள்ளது” என்று தோனி குறிப்பிட்டார்.

அணிக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் பொறுப்பைத் தன் தோள் மீது சுமந்துகொள்ளும் கோலி, அந்த நெருக்கடி தன் ஆட்டத்தைப் பாதிக்க விடுவதில்லை. தீவிரமும் கவனமும் அபாரமான திறமையும் பொருந்திய ஆட்டத்தால் இந்தியா வெற்றிகள் குவிக்க உதவுகிறார். அதனால்தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இளைஞர்களுக்கு ரோல் மாடலாகவும் ஜொலிக்கிறார்!

கோலின்னா சும்மாவா?

122.83 - எதிரணியின் ஸ்கோரை விரட்டிப் பிடித்த ஆட்டங்களில் கோலியின் சராசரி ஸ்ட்ரைக் ரேட்.

55.42 - இருபது ஓவர் போட்டிகளில் அதிக சராசரியைக் கொண்டிருக்கும் ஒரே வீரர் கோலிதான்.

15 - இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கோலியின் அரைசதங்களின் எண்ணிக்கை.

40 - இருபது ஓவர் கிரிக்கெட்டில் கோலி நாற்பது ரன்களைக் கடந்த போட்டிகளில் 83 சதவீதம் வெற்றியை ஈட்டியுள்ளது இந்தியா.

1500 - இருபது ஓவர் கிரிக்கெட்டில் 39 இன்னிங்ஸ்களில் விரைவாக கோலி கடந்த ரன். முந்தைய சாதனை 45 இன்னிங்ஸ்களில் கடந்து கெய்ல் சாதனை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x