Published : 01 Mar 2022 11:04 AM
Last Updated : 01 Mar 2022 11:04 AM
சிந்தனைச் செறிவும், மொழிச் செழுமையும், சிக்கலான நடையும் நிறைந்தவையே ‘நல்ல கவிதை’ என்று கருதும் போக்கு, பெரும்பாலான இன்றைய நவீன கவிஞர்களிடத்தில் இருக்கிறது. அந்தப் போக்கினால், தங்களை அறியாமலேயே தங்கள் பாண்டித்யத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் அவர்கள் கவிதைகளின் உயிர்ப்புக்கும், அது நம்முள் துளிர்க்க வைக்கும் உணர்வுப் பிரவாகத்துக்கும் முடிவுரை எழுதிவிடுகிறார்கள். வெறும் எழுத்துகளாக, உயிரற்ற சடலமாக, அச்சுக் காகிதங்களில் ஆழ்ந்த துயில்கொண்டிருக்கும் எண்ணற்ற நல்ல கவிதைகள் உணர்த்தும் சேதி இது.
எளிமையே, ஒரு நல்ல கவிதையின் அடிப்படைக் கூறு. ஏனெனில், எளிமையே இயற்கையின்/அழகின் அடித்தளம். எளிமையே ரசனையின் அடிநாதமும்கூட. அறியாமையே எளிமையை வளர்த்தெடுக்கும். அனுபவம் மூலம் கிடைக்கப்பெறும் அறிவோ பல நேரம் அந்த எளிமையை மட்டுமல்ல; ஒரு நல்ல கவிதையையும் மரணிக்கவைக்கும். இந்தக் கவிதைத் தொகுப்பில், அனுபவம் அளித்த அறிவையும், தான் எனும் அகங்காரத்தையும் களைந்தெறிந்து, அறியாமையை சரவணன் விரும்பி அணிந்திருக்கிறார்.
புதிர்கள் நிறைந்த வாழ்க்கையின் அழகிய தருணங்கள் அனைத்தையும், ஒரு குழந்தையின் மனநிலையிலிருந்து ரசித்து, அனுபவித்து, எளிய மொழியில், சிக்கலற்ற நடையில் கவிதைகளாக அவர் படைத்திருக்கும் பாங்கு, அவற்றை நம் மனத்துக்கு நெருக்கமானதாக மாற்றிவிடுகிறது. சட்டென முகத்தில் விழும் மழைத்துளியைப் போல், எதிர்பாராத தருணத்தில் தழுவிக்கொள்ளும் தென்றலைப் போல் அந்தக் கவிதைகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.
‘பெரியவர்களிடத்தில்/கற்றுக்கொள்ள/ஒன்றுமில்லை../குழந்தைகளுக்கு’ எனும் அவருடைய கவிதை, இயற்கையின் கூறுகளைப் போன்று ஒரு நல்ல கவிதையும் இயல்பாக முகிழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நம்மைப் பரவசத்திலும் ஆழ்த்துகிறது. ‘அடர்ந்த காட்டில்/ஒளிந்து/கொண்டிருக்கின்றன../ஆயிரம் பாதைகள்!” எனும் அவருடைய கவிதை நம்முள் ஏற்படுத்தும் அதிர்வலை, சூழலியல் அறிஞர்களின் கூற்றுக்கு இணையானது. குழந்தையின் மனமும், மொழியின் எளிமையும் இணைந்ததால் நிகழ்ந்த மாயாஜாலம் இது.
கண்முன் விரிந்திருக்கும் பசும்பரப்புக்குப் பின்னிருக்கும் காரணங்களைப் பற்றிச் சிந்திப்பவர்களால், அந்தப் பசுமையின் அழகை ரசிக்க முடியாது. அழகை ரசிப்பதற்கும் நீங்கள் குழந்தையாக மாற வேண்டும்; தேவையில்லாத நேரத்தில் இடையிடும் அறிவைத் தள்ளிவைக்க வேண்டும்; மழலையின் சிரிப்பை உணர்பவர்களுக்கும், இயற்கையின் மொழி புரிந்தவர்களுக்கும், இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிப்பவர்களுக்கும் இந்தக் கூற்றின் அர்த்தம் புரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT