Published : 01 Apr 2016 11:42 AM
Last Updated : 01 Apr 2016 11:42 AM
மெரினா கடற்கரைச் சாலையோர சிமெண்ட் திண்ணையில் மூன்று இளைஞர்கள் கித்தாரை ஏகாந்தமாக வாசிக்கிறார்கள். இன்னொருவர் மரப் பெட்டி போன்ற தாள வாத்தியம் மீதே ‘ஜம்’மென்று உட்கார்ந்துகொண்டு அதை அனாயாசமாக வாசிக்கிறார். நால்வரில் ஒருவர் உச்சஸ்தாயியில் ‘இளமையே வசந்த காலம்’ எனப் பாடுவதைப் பார்த்தாலே பரவசம் தொற்றிக்கொள்ளுகிறது. அத்தனைத் துள்ளல், உற்சாகம், நம்பிக்கை, புதுமை புறப்படுகிறது அந்த இசையில்.
இதே குழு ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ‘டெரஸ் ஜாமிங்’ என அசத்தலான பெயர் வைத்துப் பாடுகிறார்கள். ஊரூர் ஆல்காட் குப்பத்திலும் இசை மழை பொழிகிறார்கள்.
சாஸ்திரீய சங்கீத மேடையில் அழுத்தமான கர்னாடக ராகத்திலும் அதே இளைஞர் அற்புதமாகப் பாடுகிறார். கற்பனை ஸ்வரங்கள் உருண்டோடுகின்றன, ஆலாபனை அருவியாகப் பெருக்கெடுக்கிறது. அந்தக் குரலில் சின்னப் பிசிறு இழையோடுகிறது. லேசாகக் கரகரத்த குரல். அதுவே நம்மை மேலும் ஈர்க்கிறது. நிச்சயமாக ஜீவன் நிறைந்த குரல் அது. ஏதோ ஒரு வலியை, கிண்டல் கேலியாக வெளிப்படுத்தும் பாவனை கொண்ட அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ஷான் ரோல்டன். ஒரு பக்கம், கர்னாடக சங்கீத கச்சேரிகளில் பாடுகிறார். மற்றொரு பக்கம் ‘ஷான் ரால்டன் அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்னும் இசைக் குழுவின் இசையமைப்பாளர், பாடகர், கித்தார் கலைஞர் மற்றும் பாடலாசிரியராகப் புதுமை படைக்கிறார். அவருடைய அந்த முகம்தான் நம்மில் பலரும் அறிந்தது.
குத்தும் மெலடியும்
இவ்வளவு சொன்ன பிறகும், ‘யாருப்பா இவர்?’ என்று யோசிப்பவர்களுக்கு ‘இறுதிச் சுற்று’ படத்தில் ‘வா மச்சானே மச்சானே’ என அடாவடியாகப் பாடி, எல்லோரையும் ஆட்டம்போட வைத்தவர் என்று சொன்னால் பல்பு எரிந்துவிடும். ‘குக்கூ’ படத்தில் ‘மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே’ எனப் பாடி எல்லோரையும் கிறங்கடித்தவரும் இவர்தான்.
‘வாயை மூடி பேசவும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இயக்குநர் ராஜு முருகனின் ‘ஜோக்கர்’ திரைப்படத்துக்கு இவர் இசையமைத்துள்ள ‘சிங்கிள் ட்ராக்’ விரைவில் வெளியாகிறது.
கிராமியத்தில் ஜாஸ்
‘உண்மைப் பெயரை விட்டுவிட்டு ஷான் ரோல்டன் என்ற பெயரில் சினிமாவில் இயங்குவது ஏன்… பெயரே வித்தியாசமாக இருக்கிறதே’ என்கிறீர்களா? பிரபல சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யனின் பேரன்தான் ஷான். தாத்தாவின் பெயரைச் சுருக்கி ஷான் என ஸ்டைலாக வைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், கர்னாடக இசையுலகில் தன்னுடைய இயற்பெயரான ராகவேந்திராவைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
மிருதங்கக் கலைஞர் ஸ்ரீ முஷ்ணம் வி. ராஜா ராவ், சாண்டில்யனின் மகள் பத்மா தம்பதியின் மகன். பாரம்பரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இசை மீதான தீராக் காதலும் வழக்கத்துக்குள் சிக்கக்கூடாது என்ற மனோபாவமும் இவரை ‘ஒரிஜினல்’ இசைக் குழுவை உருவாக்க உந்தித் தள்ளின. கிராமிய இசை, மேற்கத்திய புளூஸ், ஜாஸ் எனப் பல பாணிகளைப் பின்னிப் பிணைந்து கோத்தார். ‘ஷான் ரோல்டன் அண்ட் ஃபிரெண்ட்ஸ் பேண்ட்’ அப்படித்தான் உருவெடுத்தது. இவருடைய குழுவின் ‘மயக்குற பூவாசம் மயிலொன்னு வரும் நேரம்’ அதில் குறிப்பிடத்தக்கது.
அலட்டலே இல்லாமல் கித்தார் இசைத்துக்கொண்டே ஷான் பாடுகிறார். அருகில் ஸ்லைட் கித்தாரை லயித்து வாசிக்கிறார் பிரதீப். ‘குக்கூ’, ‘மெட்ராஸ்’, ‘இறுதிச்சுற்று’ படங்களில் ‘ஹிட்’ பாடல்களைப் பாடியவர் பிரதீப். ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் ‘பேண்ட்’ தலைவரான மணி ‘பாஸ்’ வாசிக்கிறார். ஒரே ஒரு தாள வாத்தியத்தை மிடுக்காக வாசிக்கிறார் பிரவீன் ஸ்பர்ஷ்.
மண் மணக்கும் கிராமிய இசை, ‘ஜில்’ லென்று மேற்கத்திய புளூஸ் பாணி, கர்னாடக இசை என அத்தனையையும் ஒரே பாடலில் புகுத்தி விளையாடுகிறார் ஷான். இதை ‘ஃபியூஷன் இசை’ என வகைப்படுத்த முடியாது. ஒரு பாணியிலிருந்து இன்னொரு வகையான இசைக்கு தாவிச் செல்வதே தெரியாமல், அத்தனை லாவகமாக நிகழ்கிறது உருமாற்றம். இதற்கு வெவ்வேறு இசைப் பாணிகளின் நுணுக்கங்களும், அவை ஒன்றோடு ஒன்று இணைசேரும் புள்ளிகளையும் பற்றிய நுட்பமான புரிதல் தேவை.
திறந்தது திரையிசைக் கதவு
இப்படிக் கடற்கரை, மொட்டை மாடி முதல் ஏகப்பட்ட மேடைகளில், திரையிசை மட்டுமின்றித் தனித்துவமான இசை முயற்சிகளுக்கு மேடை அமைத்துத்தரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன் குழுவினரோடு இசை விருந்து படைத்தார் ஷான். இவர்களுடைய கீதங்கள் சினிமா வட்டாரத்தையும் மெல்ல வருடின. திரைப்படத் தயாரிப்பாளர் சி.வி.குமாரின் மூலமாக ‘வாயை மூடிப் பேசவும்’ வாய்ப்புக் கிடைத்தது. வித்தியாசமான கதைக் களம் என்பதினாலேதான் ஷானுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது என்று சொல்லலாம்.
இரண்டாம் பாதியில் வசனமே கிடையாது, இசையும் சைகையும்தான் கதையைச் சொல்லியாக வேண்டும். இசை மூலமாகவே திரைப்படத்தின் முக்கியத் திருப்பங்களையும் தருணங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது முதல் முறை இசையமைப்பாளருக்கு சவால்தான். அதுவேதான் சிறப்பான வாய்ப்பும்கூட. அதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு இசையமைத்து, ‘காதல் அறை ஒண்ணு விழுந்துச்சு’ போன்ற சுவாரஸ்யமான பாடல்களையும் தந்தார். இரு மொழி படமாகத் தமிழிலும் மலையாளத்திலும் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் தமிழைக் காட்டிலும் மலையாள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
‘முண்டாசுப்பட்டி’ படத்தில், ‘ராசா மகராசா எங்கய்யா’ என்ற இழவு வீட்டில் பாடப்பட்ட கேலி பாடலை இவருடைய குரலிலே கேட்டுச் சிரிக்காதவர்கள் இல்லை. அடுத்தது, ‘சதுரங்க வேட்டை’ தற்கால பண வேட்டையை தோலுரிக்கும் படம். இப்படத்தின் பாடல்களைவிடவும் பின்னணி இசை பாராட்டும்படியாக இருந்தது.
இசையில் நட்பு
இசையமைப்பாளர்கள் வெவ்வேறு துருவங்களாக நின்ற காலம் போய்விட்டது. ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன் போன்ற பலரும் ஒருவருடைய படத்தில் மற்றொருவர் இணைந்து இயல்பாக வேலை செய்கிறார்கள். நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள், இப்போது திரையுலகிலும் கைகோர்க்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் படங்களில் கித்தார், ஸ்ட்ரிங்க் அரேஞ்ச்மெண்ட்ஸ் செய்து வாசித்திருக்கிறார் ஷான். சந்தோஷும் ஷானுடைய படங்களுக்கு நட்புரீதியாகச் சில அம்சங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் விஷால் சந்திரசேகர் இசையில் சந்தோஷ் நாராயணனும் ஷான் ரோல்டனும் ‘ரெட் ரோடு’ என்று ‘ராக் அன் ரோல்’ பாணியில் கலக்கினார்கள்.
தமிழ் சினிமாவின் இசை அடுத்த கட்டத்துக்கு நகர ஆரம்பித்திருப்பதன் அடையாளம் ஷான் ரோல்டன் போன்றோரின் இசையில் தெரிகிறது. மிகக் குறைந்த படங்களுக்கே இசையமைத்திருந்தாலும், அதிலுள்ள தனித்தன்மையையும் புதுமையையும் ரசிக்க முடிகிறது. ஷான் ரோல்டனைப் போல கர்னாடக சங்கீதம், வெளிநாட்டு இசைப் பாணிகள் போன்ற பன்மைத்தன்மை கொண்ட பின்னணியில் இருந்து வருபவர்களிடம் மட்டுமே இது சாத்தியப்படும். தான் மட்டுமல்ல, தன் ரசிகர்களையும் இதுபோன்ற பன்மைத்தன்மை கொண்ட இசைக்கு அடிமையாக்கி வருகிறார் ஷான் ரோல்டன்.
இன்னும் அவர் என்ன தரப் போகிறார்? காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT