Published : 08 Feb 2022 11:39 AM
Last Updated : 08 Feb 2022 11:39 AM
இந்த ஆண்டின் முதல் வாரத்தில் அந்த வார்த்தைப் போட்டியைப் பற்றி ட்விட்டரில் நான் பார்த்தேன். பின்னர் ஒவ்வொரு நாளும் தவறாமல் வார்த்தைப் போட்டியின் பக்கத்துக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. எதைப் பற்றி சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நான் சொல்லாவிட்டாலும் இன்னும் சில நாட்களில் உங்களுக்குத் தெரிய வந்திருக்கும். காரணம், இணையத்தில் காட்டுத்தீயாக பரவிய விளையாட்டின் வீடியோ என எதுவுமே இல்லை! அப்படி என்ன விளையாட்டு?
அந்த நாளுக்கான ஐந்தெழுத்து வார்த்தையை அதிகபட்சம் ஆறு முயற்சிகளில் கண்டறிய வேண்டும் என்பதுதான் சவால். தினமும் உங்கள் உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் புதிய வார்த்தைக்கான சவால் வெளியாகும். ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் கொடுக்கும் வார்த்தையில் இருக்கும் எழுத்துக்களை பச்சை, மஞ்சள், கறுப்பு என வேறுபடுத்திக் காட்டும். பச்சை என்றால், அந்த எழுத்து அன்றைய வார்த்தையில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது எனப் பொருள். மஞ்சள் என்றால், வார்த்தையில் எழுத்து இருக்கிறது; ஆனால், வேறு இடத்தில் இருக்கிறது. கறுப்பு என்றால், குறிப்பிட்ட எழுத்து அன்றைய வார்த்தையில் இல்லை. முதல் முயற்சியில் கிடைக்கும் துப்புவைப் பயன்படுத்தி அடுத்த முயற்சியை செய்ய வேண்டும். இப்படி அதிகபட்சம் ஆறு முயற்சிகள் மட்டுமே ஒரு நாளைக்கு வழங்கப்படும்.
இது எப்படி பிரபலமானது? இதன் பின்னணி அறிவியல் என்ன? அதற்கு முன்னால், வேர்டில் (Wordle) என்ற அந்த விளையாட்டு எப்படி இருக்கிறது என்ற ஆர்வம் ஏற்பட்டால், விளையாட்டின் (https://www.powerlanguage.co.uk/wordle/) வலைப்பக்கத்துக்குச் சென்று இன்றைய வார்த்தையை கண்டறிந்து விட்டு வாருங்கள்.
வேர்டில் போன்ற விளையாட்டுகள் எப்படி நம்மை மீண்டும் மீண்டும் அதில் ஈடுபடச்செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளச் செய்கின்றன? அதற்கு நம் நரம்பியல் அடிப்படை வடிவமைப்பை புரிந்துகொள்வது அவசியம். அடிப்படையில் சவால்களால் உந்தப்பட்டது மனித இனம். மற்ற விலங்கினங்களுடன் ஒப்பிடுகையில், மனிதனால் சவால்களை தீர்க்க முடிந்ததால்தான், எல்லாவற்றையும்விட வேகமான பரிணாம வளர்ச்சி நமக்கு நேர்ந்தது. உணவு தேடுவதல், உடலைக் காத்துக் கொள்ள உடை அணிதல், இனப்பெருக்கம் என அடிப்படை சவால்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள பரிணாம வளர்ச்சி செய்து கொண்ட அற்புதம், ‘நரம்பியல் வெகுமதி’.
மூளையின் ஒரு பகுதி வெகுமதி மையமாக (Reward Center) செயல்படுகிறது என்பதை ஆராய்ச்சி முடிவுகள் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கின்றன. குறிப்பிட்ட சவாலை வெற்றிகரமாக செய்து முடித்ததும் நாளங்களிடையே துடிக்கும் நியூரான்கள் மூலமாக மேற்படி மையம் மகிழ்ச்சி என்பதை அனுபவிக்கிறது. இந்த அனுபவத்துக்கு அடிப்படையாக இருப்பது, நாம் இத்தொடரில் முன்பு பார்த்த, டோபமீன் என்ற நரம்பியல் கடத்தி (Neurotransmitter). கஞ்சா, அபின் போன்றவை செயற்கையாக டோபமீனை சுரக்க வைத்து அதன் மூலம் கிடைக்கும் பொருளற்ற மகிழ்ச்சிக்கு மூளையைப் பழக்கப்படுத்திவிடுவதுதான் போதைப் பொருள்களுக்கு மனிதர்கள் அடிமையாக அடிப்படை காரணம்.
சராசரியாக ஒன்றரை கிலோ எடைக் கொண்ட மனித மூளை பத்தாயிரம் கோடி நியூரான்களால் ஆனது. பார்ப்பதற்கு இரண்டு பகுதிகளால் ஆன மூளையின் வலது புறம் கற்பனை, கலை, கனவுகள் போன்றவற்றை உருவாக்கும் பணியில் இருக்கும். இடது புறம் கணிதம், தர்க்கம், மொழி போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும்.
வேர்டில் போன்ற வார்த்தை சவால்கள் நமது மூளையின் மொழி, தர்க்க வாதம் இரண்டையுமே உசுப்பேற்றி, சவாலை தீர்ப்பதை சிலிர்ப்பாக மாற்றி, அதை வெற்றிகரமாக மேற்கொண்டுவிட்டால், வெகுமதி கிடைக்கும் ஆனந்த அனுபவமாக மாற்றிவிடுகிறது. ஆக, அடிப்படையில் கற்கால மனிதன் உணவுக்காக வேட்டையாடி விலங்கை கொன்றபோது கொண்ட மகிழ்ச்சியும், நீங்கள் இன்றைய நாளின் வேர்டில் புதிரை தீர்த்ததால் கிடைக்கும் மகிழ்ச்சியும் நரம்பியல் உடல்கூறு அறிவியலின்படி ஒரே தன்மை கொண்டதே.
வேர்டில் புதிரில் இருக்கும் இன்னொரு சிறப்புத்தன்மை, எளிமை. குறுக்கெழுத்துப் போட்டி அல்லது பொது அறிவுக்கான குவிஸ் போன்றவை போலல்லாமல் ஐந்து எழுத்துக்கள் கொண்ட வார்த்தை ஒன்றை கண்டறிய வேண்டும் என்ற சவால், பலரையும் ‘நாமும் செய்யலாமே!’ எனத் தூண்ட வைத்துவிடுகிறது. ஒரு நாள் புதிரைத் தீர்த்து ருசி கண்டுவிட்டால், மீண்டும் மீண்டும் அதை செய்யத்தூண்டுவது எலிகள் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் நிருபிக்கப்பட்டிருக்கிறது. சிறிய குழாய் ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் அழுத்தினால் இனிப்பான தண்ணீர் வரும் என வடிவமைக்கப்பட்ட கூண்டுகளில் இருக்கும் எலிகள் மிகச் சரியாக அழுத்துவதை கற்றுக்கொண்டு, குழாயை அழுத்தும் செயலுக்கு அடிமைப்பட்டு போகும். வேர்டிலைப் பொறுத்தவரை நாமும் அந்த எலிகளே.
தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விளையாடுவதற்காக, வேர்டில் புதிரை பல வருடங்களுக்கு முன்னால் வடிவமைத்த ஜாஷ் வார்டில் என்ற மென் மென்பொறியாளர் அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் சென்ற அக்டோபரில் ட்விட்டரில் அறிமுகம் செய்தார். அது கிடுகிடுவென பிரபலமானது. நவம்பரில் நூறு பேர் மட்டுமே தினசரி விளையாடிய வேர்டிலின் பயன்பாடு பல கோடிகளைத் தொட்டது. வேர்டிலின் பிரபலத்தைப் பார்த்து பிரமித்த ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் அதை சென்ற வாரத்தில் வாங்கியது. வாங்கிய விலை 75 - 100 கோடி வரை இருக்கலாம். பிரதி எடுப்பதுதான் இருப்பதிலேயே நேர்மையான பாராட்டு (Imitation is the sincerest form of flattery) என்ற சொலவடை உண்டு. வேர்டிலைப் பொறுத்தவரை அது மிகவும் உண்மை. அது போன்ற விளையாட்டுகள் புற்றீசல்களாக வந்துகொண்டிருப்பதை கூகுள் சென்று பார்த்தால் தெரியும்.
இந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை 'இந்து தமிழ்' இணையத்தில் வாசிக்கலாம். https://www.facebook.com/LetsTalkSTEM என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர் பற்றியும் எதை அலசலாம் என்பதையும் பதிவிடலாம். 1 (628) 240-4194 என்கிற வாட்ஸ் அப் எண்ணிலும் அனுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT