Published : 08 Apr 2016 11:47 AM
Last Updated : 08 Apr 2016 11:47 AM
இரவு நேரம். கொட்டும் மழையில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பேருந்து நிறுத்தத்தில் அவள் தனியாக நிற்கிறாள். விருட்டென ஒரு கார் வந்து நிற்கிறது. அதை ஓட்டி வந்த அவன் பதற்றத்தோடு அவள் அருகில் வந்து நிற்கிறான். அவன் எடுத்த ஒளிப்படங்கள் நிராகரிக்கப்பட்ட வேதனையில், “எனக்கு ஃபோட்டோ எடுக்குறது தவிர வேற எதுவுமே தெரியாது…” என விசும்புகிறான். கரிசனமான பார்வையோடு அவள் ஆறுதல் கூறுகிறாள். அவனைத் தேற்ற லேசாக அணைக்கிறாள். தோழமையின் எல்லையை அந்த நொடியில் அவர்கள் கடக்கிறார்கள். அவன் அமைதி அடைகிறான். ஆனால், சட்டென அவளுடைய காதலனிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வர இருவரும் சஞ்சலத்தோடு விலகுகிறார்கள். மனமுடைந்த அவன், அவளை விட்டு மழையில் நனைந்தபடி ஓடிப் போகிறான்.
செல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ படத்தின் திருப்புமுனைக் காட்சி இது. விரக்தி, நட்பு, சிறிய நம்பிக்கைக் கீற்று, காதல், குற்ற உணர்ச்சி எனப் பல உணர்ச்சிகளை நுட்பமாக வெளிப்படுத்தும் காட்சி. பின்னணி இசையைப் பல அடுக்குகளில் நுணுக்கமாகக் கோக்க வேண்டிய தருணம். இசை மூலம் காட்சியை மேலெழச் செய்ய வேண்டுமே தவிர, ஆக்கிரமிக்கக் கூடாது. சில உணர்வுகளை நிசப்தம் மூலம் கடத்த வேண்டும். அத்தனையும் செய்தது அந்தக் காட்சிக்கான பின்னணி இசை. ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே…’ என மழலையாகச் சில வருடங்களுக்கு முன்பு பாடிய அதே ஜி.வி.பிரகாஷ் குமாரா இப்படி இசை மழை பொழிகிறார் எனப் பிரமிப்பாக இருந்தது.
காதலும் இசையும்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா ஏ.ஆர்.ரைஹானா பிராகாஷின் தாய். தந்தை வெங்கடேசன். ரஹ்மானின் தந்தையும் ஜி.வி.யின் தாத்தாவுமான ஆர்.கே.சேகர் 1960-களிலேயே மேற்கத்திய இசையின் புதிய பாணிகளை மலையாளத் திரையிசையில் சாதித்தவர். ஒரே சமயத்தில் 12 மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தன்னை உருக்கி இசை கொடுத்தவர். அவருடைய உண்மையான திறமைக்கு இசையமைப்பாளர் வாய்ப்பு கிடைக்கும் வேளையில் தீராத வயிற்று வலியால் அகால மரணம் அடைந்தார். இசை மீதான அந்தத் தீராத தாகம் ரஹ்மான் முதல் ஜி.வி.வரை ஏதோ ஒரு விதத்தில் பல கோணங்களில் வெளிப்படுகிறது.
சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும்போது தனது வாழ்க்கைத் துணையான இசையையும் சைந்தவியையும் சந்தித்தார் ஜி.வி. கித்தார், கீபோர்டு கலைஞராகவும் பாடகராகவும் தன்னை மெருகேற்றிக்கொண்டவர் 10-ம் வகுப்பு படிக்கும்போதே காதலனாகவும் மாறினார்! இருவரும் ஒரே இசை பேண்டில் இசைத்தார்கள்.
தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூடன் ‘அந்நியன்’, ‘உன்னாலே உன்னாலே’ படங்களில் இணைந்து பணியாற்றி, சில பாடல்களும் பாடினார். 2006-ல் வசந்த பாலனின் ‘வெயில்’ படம் மூலமாக ‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி’னார். முதல் படத்திலேயே சங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷலின் மயக்கும் குரலில் ‘உருகுதே மருகுதே’ பாடலைக் கொடுத்து இசை ரசிகர்களைக் கவர்ந்தார். அதே ஆண்டு வெளியான மெகா ஹிட் ‘கிரீடம்’ படம் ஜி.வி.க்கு நட்சத்திர அந்தஸ்தைத் தேடித்தந்தது.
அஜித்-த்ரிஷா ஜோடியில் ‘அக்கம் பக்கம் யாருமில்லா’ பாடல் அந்த ஆண்டின் நேயர் விருப்பப் பட்டியலில் முதல் இடம் பிடித்தது. அடுத்து புரொடக் ஷன் டிசைனர் துரை மூலம் வெற்றி மாறன் அறிமுகமானார். வெற்றி மாறன்- ஜி.வி. கூட்டணி தமிழ் சினிமாவுக்குப் புதிய வண்ணங்கள் சேர்த்தது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ என வெற்றி மாறன் இதுவரை இயக்கிய அத்தனை படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார் ஜி.வி.
கூட்டை விட்டு வெளியே!
2009-ல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மூலம் செல்வராகவனுடன் கைகோத்தார். அடுத்து, ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தன் கூட்டைத் தானே உடைத்துக்கொண்டு புதிய முயற்சி எடுத்தார். படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களும் ஹிட். ஜி.வி.யும், சைந்தவியும் சேர்ந்து பாடிய ‘பிறை தேடும்’ பாடல் அத்தனை காதலர்களையும் வருடியது. சைந்தவிக்கு மெலடி பாடல்களை உருவாக்குவதில் ஜி.வி. தனிக் கவனம் செலுத்துவதாகவே தோன்றுகிறது.
மதராசப்பட்டினத்தில் ‘ஆருயிரே ஆருயிரே’, ‘தெய்வத் திருமகளி’ல் ‘விழிகளில் ஒரு வானவில்’, தெறியில் ‘என் ஜீவன்’ என அந்தப் பட்டியல் நீளுகிறது. சைந்தவியின் தெவிட்டாத இனிய குரலில் இதைப் போன்ற பல பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறோம். அதே வேளையில் ஒரே மாதிரியான மெட்டு, போக்கு கொண்ட பாடல்களையே அவருக்கு ஜி.வி. தருவது சலிப்புத்தட்டவும் செய்கிறது.
தனி அடையாளம்
மறுபக்கம் ஜி.வி. சிறப்பாக இசையமைத்துக் கவனம் பெறாமல்போன பாடல்களும் இருக்கின்றன. ‘தெய்வத் திருமகளி’ல் ஹரிசரண் பாடிய ‘ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு’ அத்தனை கண்களையும் நனைத்தது. ஆனால் தாய்மையின் ஆழத்தை அழுத்தமாகச் சொன்ன தாமரையின் வரிகளில் சித்தாரா குரலில் வடித்த ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ பட ‘கண்கள் நீயே காற்றும் நீயே’ பாடல் கவனம் பெறாமல்போனது.
‘வெள்ளித்திரை’ பட ‘உயிரிலே என் உயிரிலே’ பாடலும் அப்படியே. பாலாவின் ‘பரதேசி’யில் ‘அவத்த பையா செவத்த பையா’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ராஜா ராணி’யில் ‘ஏ பேபி… என் ஹார்ட்ட விட்டு’ சரியான மீட்டரில் மேற்கத்திய இசையையும், கானாவையும் கலந்துகட்டிய பாடல். ‘சைவம்' படத்தில் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடிய ‘அழகே அழகே’ பாடல் தேசிய விருது வாங்கித்தந்தது. ‘காக்கா முட்டை’ படம் அடைந்த வீச்சில் ‘கருப்பு கருப்பு’ பாடலுக்கும் ஒரு இடம் உண்டு.
இன்னும் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் மனம் கவரும் வகையில் இசையமைத்துவருகிறார் ஜி.வி. தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளிவரவிருக்கும் ‘தெறி’ மூலம் 10 ஆண்டுகளில் 50 படங்களுக்கு இசையமைத்த சாதனையும் படைத்திருக்கிறார்.
2000 ஆண்டுவாக்கில் தமிழ் சினிமாவில் கால் பதித்த பல இசையமைப்பாளர்களிடம் ஆஸ்கர் நாயகனின் தாக்கம் தலைதூக்கியது அனைவரும் அறிந்ததே. ஆனால், ரஹ்மானின் சாயல் இல்லாமல் தனக்கென ஒரு தனி அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தயாரிப்பு, நடிப்பு என பரிசோதனை முயற்சிகளில் இறங்கினாலும் இசையே தனது பலம் என்பதை உணர்ந்து தொடர்ந்து ஜீவன் நிறைந்த இசையைக் கொடுப்பார் என எதிர்ப்பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT