Published : 25 Jan 2022 11:09 AM
Last Updated : 25 Jan 2022 11:09 AM
“பாட்டி உன் வாழ்க்கையில எவ்வளோ தோசை சுட்டிருப்பே
ஒருநாளைக்குப் பத்துன்னு பார்த்தா ஒரு வாழ்க்கைக்கு எத்தன?
ஒருநாளில் உன்னைக் கேட்பேன் மறுநாளில் யாரு
மாவுக்கு அளவிருக்கு உன் அன்புக்கு இருக்கா..?”
கிதாரின் தந்திகளை மெலிதாக மீட்டியபடி மென்மையான குரலில் மனித உணர்வுகளை மீட்டெடுக்கும் ஹைக்கூ பாடல்களை 30லிருந்து 60 விநாடிகளுக்குள் ஒலிக்கும் கிருஷ்ணாவின் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலம். ஆட்டோ, பேருந்து, ரயில் பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நறுக்குத் தெறித்தாற்போல் ‘இன் ரீல் லைஃப்’ என்னும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல்களாகியிருக்கின்றன.
16 வயதிலிருந்தே பாடல்களை எழுதுவது அதற்கான இசையை அமைப்பது கிருஷ்ணாவின் விருப்பமாக இருந்திருக்கிறது. அப்போது நடந்த சர்வதேசத் தொழில் முனைவோருக்கான மாநாட்டுக்கு ஒரு வாழ்த்துப் பாடலை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2,500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருந்த அரங்கில் இவர் தனது குழுவினருடன் அந்த மாநாட்டுக்காக உருவாக்கப்பட்ட பாடலைப் பாடியது பெரும் நம்பிக்கையை அவரின் மனத்தில் விதைத்தது.
“அப்பா மாதவன் கோபால்ரத்னம் கர்னாடக இசைப் பாடகர். நான் சிறுவயதில் கிதார் வாத்தியத்தை நேசிக்கத் தொடங்கி சுயமாக முயன்று வாசித்தேன். அதன்பிறகு விக்ரம் கண்ணன், ரமேஷ் மணி ஆகியோரிடம் முறையாக மேற்கத்திய பாணியில் கிதார் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். என்னுடைய பாடலுக்கான கருத்துகளை மக்களிடமிருந்தே எடுக்கிறேன். அவர்களின் வலி, நகைச்சுவை, காதல், நட்பு, மகிழ்ச்சியைப் பாட்டில் கொண்டுவருவதே என்னுடைய இசைப் பாடல்களின் நோக்கம்” என்கிறார் கிருஷ்ணா.
கடந்த 2019இல் ஆகாஷவாணி நடத்திய இளைஞர்களுக்கான வாத்திய இசைப் போட்டியில், கிதாரில் இவர் வாசித்த சுயாதீன இசையின் மூலம் இரண்டாவது பரிசை வென்றார். ஆடிஷன் இல்லாமலேயே பி கிரேட் கலைஞராக அனைத்திந்திய வானொலி நிலையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் இவர். அதே ஆண்டில் சென்னை, ஃபீனிக்ஸ் மாலில் ஹெக்ஸோடஸ் நிறுவனம் நடத்திய குளோபல் இசைத் திருவிழாவில் அகோஸ்டிக் கிதார் மற்றும் அகபெல்லா (வாத்தியத்தின் ஒலியைக் குரலின்வழி ஒலிப்பது) பிரிவில் முதல் பரிசு பெற்றார். இந்தியா முழுவதும் பிரபல இசை மேடைகளில் இசையை நிகழ்த்துவதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிருஷ்ணாவுக்குக் கிடைத்தது.
புகழ்பெற்ற டிரினிடி இசைக் கல்லூரியில் சென்னை பிராந்தியத்திலிருந்து பயிற்சி பெற்ற மாணவர்களில் சிறந்த மாணவராக கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் அனுப்பிய ஆடிஷன் வீடியோ தேர்ந்தெடுக்கப்பட்டு, பெர்க்லி இசைக் கல்லூரி மாணவர்கள் சென்னைக்கு வந்தபோது அவர்களோடு இசை, கலாச்சார பரிமாற்றம் நிகழ்த்தும் வாய்ப்பும் கிருஷ்ணாவுக்கு கிடைத்தது. கடந்த 2020இல் பாடகர், பாடலாசிரியருக்காக இந்திய அளவில் நடந்த போட்டியில் பங்கெடுத்த 400 பேரில், சிறந்த பத்து பேரில் கிருஷ்ணாவும் ஒருவர். காம்பஸ் பாக்ஸ், ப்ரோ மியூசிக்கல்ஸ் இப்போட்டியை நடத்தியது. இப்போட்டியில் இடம்பெற்ற மாநில மொழிப் பாடல்களில் இடம்பெற்ற ஒரே தமிழ்ப்பாடல் கிருஷ்ணாவின் ‘மறந்ததே’!
இதன்மூலம் அகமதாபாதில் காம்பஸ் பாக்ஸ் ஸ்டுடியோவில் இந்தப் பாடலைப் பாட கிருஷ்ணாவை அழைத்தனர். இதையடுத்து கிருஷ்ணா வெளியிட்ட இன்னொரு பாடல் ‘பிறவி’. ‘மூக்குத்தி அம்மன்’, ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களில் இசையமைப்பாளர் கிரீஷுடன் இவர் பணிபுரிந்திருக்கிறார். இவரின் புதிய வீடியோ ஆல்பம் ‘ஓடாதே ஒளியாதே’ ஜனவரி 28 அன்று வெளியாகவிருக்கிறது. இப்பாடல் மேற்கத்திய பாப் வகைமையில் கிதார், டிரம்ஸ்ஸின் கலவையான சேர்ந்திசை கேட்பவர்களைத் தாளமிட வைக்கிறது. தன்னிலை மறக்காமல் தங்களின் பொறுப்புகளை இளைஞர்கள் உணர்ந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் உதவுகிறது கிருஷ்ணாவின் இசை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT