Last Updated : 08 Apr, 2016 11:42 AM

 

Published : 08 Apr 2016 11:42 AM
Last Updated : 08 Apr 2016 11:42 AM

அடிபொளி குஞ்சிக்கா!

‘நியூ வேவ்' சினிமாக்களுக்கு எப்போதும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் மாநிலம் கேரளம். அதில் ஒரு வித்தியாசமான முயற்சி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘சார்லி' திரைப்படம்.

வாழ்க்கையில் தனக்கென எந்த ஒரு லட்சியத்தையும் வைத்துக்கொள்ளாமல், பிறரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழும் ஒரு நாடோடி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான். விதவிதமான டிசைன்கள் கொண்ட நாடோடித்தனமான‌ ஆடைகளை உடுத்திக்கொண்டு ‘பொஹிமியன் ஸ்டைல்' காட்டிக் கலக்கிய துல்கர், அந்தப் படத்தில் ஓவியராக வருகிறார்.

ஒரு நாடோடி நாயகன், அவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் நாயகியாக பார்வதி, சில நிமிடங்களே வந்து போனாலும் நெஞ்சைக் கனக்கச் செய்யும் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை கல்பனா, சிறு வயது காதலிக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் நெடுமுடி வேணு என நட்சத்திரப் பட்டாளம் ஜொலித்த இந்தப் படம் மல்லுவுட்டில் ‘பாக்ஸ் ஆஃபீஸ்' வெற்றியைக் கொண்டாடியது.

கடந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படமாகவும் இது கேரள மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டு 8 விருதுகளை வென்றது.

கேரளத்தில் இந்தப் படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்' வெளியான‌ தினத்திலிருந்து ‘குஞ்சிக்கா'வின் (துல்கருக்கு கேரள ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர்) ‘சார்லி' கேரக்டரை விதவிதமாக வரைந்து தள்ளினர்.

சில ரசிகர்கள் அந்த ஓவியங்களை துல்கருக்கு அனுப்பி வைத்திருந்தனர். அந்த ஓவியங்களை எல்லாம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘ஆல்பம்' ஆகப் பதிவேற்றி சமீபத்தில் தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இந்த சுந்தரச் சேட்டன்.

அந்த ஓவியங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும் - >http://bit.ly/1VcIXZI

(‘அடிபொளி’ என்றால் மலையாளத்தில் ‘அடி தூள்’ என்று பொருள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x