Published : 15 Apr 2016 01:38 PM
Last Updated : 15 Apr 2016 01:38 PM

26 சத்யா @ தளபதி 60!

நடிகர் ஒருவருக்கு ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை. ஆனால் ஒரு ரசிகர் தான் வியக்கும் நடிகர் ஒருவருக்கே ஆடை வடிவமைக்கிறார் என்றால் அது நிச்சயம் ஆச்சரியம்தானே?

'யாருப்பா அது' என்கிறீர்களா? அவர்தான் சத்யா. ராமநாதபுரத்துக்காரர். கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று விரும்பியவர், அந்தக் கனவு பலிக்காமல் போக ஃபேஷன் டிசைனிங்கில் கவனம் செலுத்தினார். இப்போது அவர் கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட்' காஸ்டியூம் டிசைனர்!

சென்னைக்கு வந்து அலைந்து திரிந்து, டிசைனர் வாசுகி பாஸ்கரிடம் தொழில் கற்று, தன் திறமையால் பிறரின் கவனம் ஈர்த்து, முதல் பட சான்ஸ் பெற்று இன்று தனக்கென ஒரு இடத்தை 'ப்ளாக்' செய்துவிட்டார் சத்யா. 'மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் ஆரம்பித்த‌ இவரது பயணம் 'தளபதி 60'லும் தொடர்கிறது.

விஜய்யின் ரசிகராக தியேட்டரில் விசில் போட்டவர் தற்போது 'தெறி'யில் விஜய்க்குச் சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். அதனால் சத்யா இப்போது 'தெறி' சத்யா!



'தெறி' டீம் என்ட்ரி?

'ராஜா ராணி' படத்தில் சந்தானம், நஸ்ரியா இரண்டு பேருக்கும் நான் ஃபேஷன் டிசைனிங் பண்ணியிருக்கேன். என்னுடைய வேலை எப்படியிருக்கும்னு அட்லீ சாருக்குத் தெரியும். ஒரு நாள் திடீர்னு கூப்பிட்டு ''தெறி' ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஏமி ஜாக்சனுக்கு ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணப் போறோம். நீ எனக்கு டிசைனிங் பண்ணிக் கொண்டு'ன்னு சொன்னார். அப்போதான் 'தெறி'யில‌ நீங்க பார்க்கிற‌ ஏமி ஜாக்சனுக்கு லுக் டெஸ்ட் பண்னோம். அவுட்புட் நல்லா வந்தது. உடனே 'இந்தப் படத்துக்கும் நீயே பண்றியா?'ன்னு கேட்டார். அப்படித்தான் 'தெறி' டீம்ல நம்ம என்ட்ரி! படத்துல‌ ஏமி ஜாக்சன், நைனிகா, சாங் ஸீக்குவென்ஸ்ல வர்ற ஆக்டர்ஸ் எல்லோருக்கும் நான்தான் டிசைன் பண்ணியிருக்கேன்.



விஜய் பாராட்டு...?

'தெறி' ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கும்போதே இடையில‌ ஒரு போட்டோ ஷூட் வெச்சோம். அதுக்கு முந்தின‌ நாள் டைரக்டர் போன் பண்ணி 'நாளைக்கு விஜய் சாருக்கு 4 சட்டை வேணும். ரெடி பண்ண முடியுமா?'ன்னார். சந்தோஷமா பண்ணிக் கொடுத்தேன். கேரளாவுல பேக்கிரி சீன் ஒண்ணு இருக்கும். அதுல விஜய் போட்டிருக்கும் சட்டை நான் பண்ணினதுதான். கடைசில ''ராங்கு ராங்கு'ன்னு ஆரம்பிக்கிற‌ பாட்டுக்கும் நீயே பண்ணிடு'ன்னார் டைரக்டர். அதைக் கேட்ட உடனே எனக்குத் தலைகால் புரியலை.

கேரவாவேனில் விஜய் சாருக்கு ட்ரஸ் ட்ரையல் பார்க்கிறப்போ, 'சார்...சார்... நான் உங்க ஃபேன் சார்'னு பேசிட்டே இருந்தேன். எல்லாத்தையும் சிரிச்ச முகத்தோட அமைதியா கேட்டுட்டு 'ரொம்ப சந்தோஷம்'னு தோள்ல கைபோட்டு பாராட்டினார். 'நம்ம‌ ரசிகன் ஒருவன் நமக்கு டிசைனிங் பண்ணியிருக்கிறான்'னு அவருக்கு சந்தோஷம். 'நாம தொடர்ந்து பண்ணலாம்'னு என்கரேஜ் பண்ணார்.

அடுத்த பத்தாவது நிமிஷம் 'சார் கூப்பிடுறார்'னு மெஸேஜ். போனா 'அடுத்த படம் பண்றீங்களா. ஃப்ரீயா இருக்கீங்களா'ன்னு கேட்டார். 'ஐயோ! என்ன சார் இப்படிச் சொல்லீட்டிங்க, கண்டிப்பா பண்றேன்'னு சொன்னேன். 'ஆல் தி பெஸ்ட்'னு சொல்லி அனுப்பிச்சார். டைரக்டர் பரதன் சாருக்கும் ஓ.கே. இதோ இப்போ 'தளபதி 60' ஆரம்பிச்சாச்சு!



விஜய்யுடன் மறக்க முடியாத அனுபவம்?

போட்டோ ஷூட் பண்ணும் போது விஜய்க்கான‌ சட்டைகளைக் கொடுத்துட்டு நைனிகாவின் காஸ்டியூம்ஸை டிசைன் பண்ணிட்டிருந்தேன். 'டக்'குனு பின்னாடி தோள்ல ஒரு கை வந்து விழுது. திரும்பிப் பார்த்தா... விஜய் சார்!

'இல்லங்க. இந்த சட்டை நீங்க பண்ணதுன்னு சொன்னாங்க. நல்லாருக்கு சத்யா'ன்னார். அந்த நிமிஷம் 'சினிமாவுல நாம சாதிச்சிட்டோம்டா'ன்னு ஒரு திருப்தி.

'தெறி'யில‌ முதல்ல‌ ஒப்பந்தமானப்போ விஜய் சார் நடிக்கிற படத்தில் நாம‌ இருக்கிறோம்னு கவுரவமா இருந்துச்சு. இது போதுமேன்னு நினைச்சேன். ஆனா அவருக்கே காஸ்டியூம் டிசைன் பண்ணது, இன்னமும் கனவு மாதிரி இருக்கு ஜி!



நடிக்கிறீங்களாமே...?

14 வயசுல‌ இருந்து கிரிக்கெட் விளையாடுறேன். நான் ஒரு நல்ல கிரிக்கெட்டரா வரணும்னு வீட்ல எதிர்பார்த்தாங்க. பச்! அது முடியாமப் போச்சு. அவங்க‌ ஆசையை எப்படியாவது நிறைவேத்தனும்னு நினைச்சு 'செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக்'ல‌ (சி.சி.எல்) விளையாட‌லாம்னு முடிவு பண்ணேன். ஆனா அதுல கலந்துக்கணும்னா, படங்கள்ல நடிச்சிருக்கணும்.

7 படங்கள்ல‌ 10 நிமிஷ சீன்ஸ்ல நடிச்சிருந்தா சி.சி.எல்ல ஆடலாம்னு சொன்னாங்க. அதனாலதான் நடிக்க ஆரம்பிச்சேன். 'ஜீவா' படத்துல‌ கீப்பரா வருவேன். என்னோட ஆசை சசிகுமார் சாருக்குத் தெரியும். அப்படித்தான் கிடைச்சுது 'வெற்றிவேல்' சான்ஸ். அதுல ஒரு சின்ன கேரக்டர். அடுத்து அவரோட‌ 'கிடாரி' படத்திலும் நடிக்கிறேன்.



அப்போ காஸ்டியூம் டிசைனிங் அவ்ளோதானா..?

நான் ரொம்ப தேர்வு செஞ்சுதான் படங்கள்ல நடிக்கிறேன். என்னோட வொர்க்கை அண்டர்ஸ்டான்ட் பண்ணிக்கிற டைரக்டர்ஸோட‌ படங்கள்ல‌ மட்டும் நடிப்பேன். மத்தபடி என் முழுக்கவனமும் காஸ்டியூம் டிசைனிங்லதான்.



அடுத்த டார்கெட் என்ன?

என்னுடைய லட்சியம்தான் நிறைவேறிடுச்சே. அதனால இப்போதைக்கு எதுவுமே இல்லை. எனக்குன்னு ஒரு சின்ன பேர் சம்பாதிச்சிருக்கேன். இனி பண்ற படங்களுக்கு ரொம்ப உண்மையா உழைக்கணும். அது மட்டும்தான் இப்போ மனசுல இருக்குஜி.

'தெறி'க்கவிடுங்க சத்யா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x