Published : 22 Apr 2016 12:54 PM
Last Updated : 22 Apr 2016 12:54 PM
இனிய நண்பர்களுக்கு,
இன்னும் சில நாட்களில் ப்ளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 'பாஸ் ஆவேனா?' என்கிற பயம் உங்களுக்கு இருப்பது இயல்பு. அதை விடப் பெரிய பயம், என்னைப் போன்ற ஆசிரியர்களுக்கு. 'இந்த வருடம் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வார்களோ?' என்ற பயம்தான் அது. ஆனால் இந்த பயம் இயல்பானது அல்ல!
முன்பு தேர்வு முடிந்து மதிப்பெண் வந்த பிறகுதான் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போதோ தேர்வு சரியாக எழுதவில்லை என்றுகூட தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் சென்ற வருடம் தேர்வில் தோல்வியுற்றதால் மட்டுமே 2,471 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது நெஞ்சை உருக்கும் செய்தியாகும். இதில் அதிகப்படியான தற்கொலை மரணங்கள் தமிழகத்திலும், சத்தீஸ்கர் மாநிலத்திலும் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
மதிப்பெண்களே முதன்மை இலக்காகிவிட்ட நம்முடைய கல்விமுறையில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை சாட்டையை சுழற்றிக்கொண்டு பந்தயக் குதிரைபோல் விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக, தேர்வு நேரங்களில் மாணவர்கள் மன அழுத்ததிற்கு உள்ளாவதும், அதனால் தேர்வில் தோற்றுப்போனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வயது, திறமை, விருப்பம் மற்றும் எதிர்காலத் தேவை ஆகியவற்றின் அடிப்படையில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. வகுப்பறை நடைமுறையில் உள்ள ‘ஆண்டான், அடிமை' கட்டுப்பாட்டு முறைகள் குழந்தையின் இயல்பான விளையாடும் பண்பைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வைத்து, அது மாணவர்கள் சுதந்திரமாகப் பேசுவதைத் தடுக்கின்றன.
அதிகமான சுமையைத் தருவதுதான் நல்ல தரமான கல்வி எனத் தனியார் பள்ளிகள் சொல்லி வருகின்றன. இதனால் கற்பது என்பதே ஒரு கடினமான விஷயமாக மாணவர்களுக்கு மாறிவிடுகிறது.
தேர்வு மற்றும் மதிப்பெண் மூலம் ஒவ்வொரு மாணவர்களின் உள்ளார்ந்த திறமையைச் சரியாய்ப் பிரதிபலிக்கச் செய்துவிட முடியாது. நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இங்கு சாதித்தவர்கள், சாதித்துக்கொண்டு இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வில் தோல்வி கண்டவர்களே!
அதிக மதிப்பெண்ணும், படிப்பும் மட்டுமே வாழ்க்கை இல்லை. படிப்புடன் கூடிய வாழ்க்கைக் கல்விதான் முக்கியம்.
‘தேர்வில் தோல்வி அடைந்தால் என் வாழ்க்கையே தோல்வி அடைந்து விடும்' என்று உங்களில் பலர் நினைக்கிறீர்கள். அது தவறு. மதிப்பெண் என்பது உங்களுடைய கற்றல் முன்னேற்றத்திற்கான அளவீடு மட்டுமே.
இன்றைய கல்விச் சூழல் பற்றி தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர். எரிமலையின் விளிம்பில் இருக்கிறது நிலைமை என்றுகூட எச்சரித்து வருகின்றனர். மதிப்பெண்களைச் சுற்றியே ஓயாமல் நீங்கள் விரட்டப்படுகிறீர்கள் என்பது நிதர்சனமான உண்மை.
'படிப்பு' என்கிற சொல் மிகப்பெரும் வன்முறை ஆயுதமாகவே மாறி இருக்கிறது. அறிவை மேம்படுத்துதல், உலக அறிவு, புதுமைத் தேடல், துருவி ஆராய்தல் என்பதாக அமையவேண்டிய கல்வியின் பயணம், உண்மையில் எப்படி இருக்கிறது? மாணவர்களுக்குக் கசப்பிலும், வெறுப்பிலும், அச்சத்திலும், அவநம்பிக்கையிலும் கழிகிறது இந்தக் கல்விப் பயணம்.
எதிர்கால இந்தியாவின் தூண்களாகத் திகழக்கூடிய இந்த மாணவ சமுதாயம் வீரநடை போட்டு முன்னேறிச் செல்லாமல், இதுபோன்று கூனிக் குறுகித் தற்கொலை செய்துகொள்வதை உடனடியாகத் தடுக்கவேண்டும்.
அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
‘பாஸ்', 'ஃபெயில்' என தேர்வு முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தேர்ச்சி பெற்றால், வாழ்க்கையில் ‘பாஸ்' ஆகிவிட்டதாகவோ, தோல்வியடைந்தால், ‘இனி வாழ்க்கையே இல்லை' என்றோ நினைக்க வேண்டாம். இது ஒரு காலகட்டம் அவ்வளவுதான். ‘இதுவும் கடந்து போகும்' என்று நினைத்து அடுத்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனியுங்கள்.
முன்பெல்லாம் தேர்வில் தோல்வியடைந்தால், அடுத்த தேர்வு எழுதுவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் அப்படியில்லை. அடுத்த சில மாதங்களிலேயே இன்னொரு தேர்வு வரும். கொஞ்சம் கவனம் செலுத்திப் படித்தால், அந்தத் தேர்வில் நீங்கள் நிச்சயம் ‘பாஸ்!'
அப்புறமென்ன, முதல் ‘அட்டெம்ப்ட்'டில் தேர்வு பெற்ற உங்களின் நண்பர்களுடனேயே அடுத்த வகுப்புக்கோ அல்லது கல்லூரியிலோ சேர்ந்து படிக்கலாம்.
நன்றாகப் படித்த நீங்கள் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். ஆனால் கஷ்டப்பட்டுப் படித்தும், உங்கள் நண்பர்களில் சிலர் தோல்வி கண்டிருக்கலாம். நீங்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் உங்களையெல்லாம் காணத் துணிவு இல்லாமல், தனிமையை நாடிப் போகலாம். பல தற்கொலை நிகழ்வுகள் இதுபோன்ற மன அழுத்தத்துடன் கூடிய தனிமையின் போதுதான் நிகழ்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எனவே, தேர்வில் தோல்வியடைந்த உங்கள் நண்பர்களைத் தனிமையில் இருக்க விடாதீர்கள். அவரை கேலி, கிண்டல்களுக்கு ஆளாக்க வேண்டாம். கூடிய வரையில் ஆதரவாக இருங்கள்.
‘ஐயோ ஃபெயிலாகி விட்டோமே. இனி நம்மைப் பார்த்து எல்லோரும் கேள்வி கேட்பார்களே' என்று பயந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீர்கள். அப்படியே கேள்வி கேட்டால்தான் என்ன? மிஞ்சிப் போனால் ஓரிருவர், ஓரிரு நாட்களுக்கு அப்படிப் பேசுவார்கள். அதற்குப் பிறகு தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போவார்கள். எனவே அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், உறவினர்கள் வீட்டுக்கு, உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குப் பயணம் செல்லுங்கள். பயணம் காயங்களை மறந்து போகச் செய்யும்.
மற்றபடி, நல்ல புத்தகம், நல்ல இசை, நல்ல திரைப்படம் ஆகியவை நோக்கி நீங்கள் நகருங்கள். மனம் பொலிவு பெறும். அந்தப் பொலிவு உங்களை எந்தச் சவாலையும் எதிர்கொள்ளச் சக்தி தரும்.
அப்புறம்...? இந்த வருடம் 'தேர்வில் தோல்வியடைந்தவர்கள் தற்கொலை' எனும் செய்தியை எங்கும் பார்க்க முடியாது. ஆமாம், நான் உங்களை நம்புகிறேன். அந்தச் செய்தி வராது.
இப்படிக்கு,
உங்கள் நண்பன், தி. ஆனந்த்.
- கட்டுரையாளர், திருவாரூர் மாவட்டம் காளாச்சேரி எனும் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வந்த அந்த கிராமத்தில் பல விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டவர் இவர்.
தொடர்புக்கு: anandt.tanand@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT