Published : 18 Mar 2016 12:08 PM
Last Updated : 18 Mar 2016 12:08 PM

‘செலின்’ பைத்தியம் குறையவில்லை - மடோனா செபாஸ்டியன் பேட்டி

‘காதலும் கடந்து போகும்' படத்தின் யாழினி கதாபாத்திரம் மூலமாக தற்போது இளைஞர்களின் 'ட்ரீம் கேர்ள்' ஆகிவிட்டார் மடோனா! சென்னை வந்திருந்த அவரிடம் கொஞ்சம் மலையாளத்தில் சம்சாரித்தபோது...

‘ப்ரேமம்' படத்துக்குக் கிடைச்ச‌ பாராட்டு பற்றி...

எதிர்பார்க்கவே இல்லை! ‘ப்ரேமம்' இங்கே அவ்வளவு ரசிகர்களின் அன்பை சம்பாதிச்சுக் கொடுத்திருக்கு. தமிழ்நாட்டிலிருந்து பலர் இன்னிக்கும் எனது ஃபேஸ்புக் பேஜ்ல‌ ‘ப்ரேமம்' பற்றி பாராட்டிக்கிட்டே இருக்காங்க.

அந்தப் படத்தோட ஷூட்டிங்கப்போ ‘ஒரு நல்ல படத்துல நடிக்கிறோம்'னு தெரியும். ஆனா இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு சத்தியமா நினைக்கலை. சென்னையில அந்தப் படத்துக்குக் கிடைச்ச ரிசப்ஷன், அப்ப்பா..! கனவு மாதிரி இருக்கு. இன்னிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்ல‌ என்னை ‘செலின்'னுதான் அடையாளம் கண்டுக்கிறாங்க. இப்போதான் அவங்களுக்கு என்னோட உண்மையான பேர் ‘மடோனா'ன்னு தெரிய வந்திருக்கு.

சோஷியல் மீடியாவுல‌ பலரும் ‘செலின் ஐ லவ் யூ'னு பைத்தியமா திரியுறாங்க. அதையெல்லாம் கவனிக்கிறீங்களா?

(சிரித்துக் கொண்டே) என்னோட ஃப்ரெண்ட்ஸ் அதையெல்லாத்தையும் எனக்கு ‘வாட்ஸ்‍அப்'ல அனுப்பி வைப்பாங்க‌. அந்த அன்பு எப்போதுமே நீடிக்கணும்னு விரும்புறேன்.

உங்க ‘மலையாள சகா'க்கள் நிறைய பேர் தமிழ் கத்துக்கிட்டாங்க. நீங்க எப்போ?

எல்லோரும் இதைத்தான் கேட்கிறாங்க. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் எர்ணாகுளம். அங்க தமிழ் பேசுறவங்க ரொம்பக் கம்மி. வீட்டுல இங்கிலீஷ்தான் பேசுவோம். நான் படம் பார்க்குறதுகூட என் அப்பாவுக்குப் பிடிக்காது. அப்படியான சூழ்நிலையில இளையராஜா, ரஹ்மான்னு அவங்க‌ பாடல்கள் மூலமாத்தான் தமிழ் எனக்குத் தெரியவந்தது. நான் ரஹ்மான் சாரின் ஃபேன். அப்படிதான் எனக்கு தமிழ் பிடிக்க ஆரம்பிச்சுது. சொல்லப்போனா, தமிழ்ப் படங்கள்ல நடிக்கிறது மூலமா நான் தமிழ் கத்துக்கிறேன்.

கிளாமர் கேரக்டர் உங்களுக்கு ஓ.கே.வா?

கிளாமரா நடிக்கிறதுல தப்பில்லை. அது அந்த கேரக்டருக்காக‌ அவங்க‌ செய்யுறது. அந்த கேரக்டர் மாதிரிதான் நிஜ வாழ்க்கையிலும் அவங்க அப்படி இருப்பாங்கன்னு நினைக்கிறதுதான் ரொம்பத் தப்பு. பெர்சனலா எனக்கு கவர்ச்சியான உடைகள் அணியுற‌து பிடிக்காது. மத்தபடி எனக்கு எது சவுகரியமா இருக்கோ, அதைத்தான் அணிவேன்.

டி.வி. காம்பியரிங், மியூஸிக் ட்ரூப்னு உங்களுக்கு நிறைய புரொஃபஷன்ஸ்... அதுல இருந்தெல்லாம் எப்படி நடிப்புக்கு வந்தீங்க‌?

நான் டி.வி.க்குப் போறதுக்கு காரணம், இசை! ஆனா, அங்க காம்பயரிங் பண்ண எனக்குப் பிடிக்கலை. அதிர்ஷ்டவசமா டி.வி.யில பார்த்துதான் அல்ஃபோன்ஸ் புத்திரன் என்னை செலக்ட் பண்ணார். ‘ப்ரேமம்' படத்தோட‌ சவுண்ட் டிசைனர் விஷ்ணு கோவிந்த்தான் டைரக்டர் நலனிடம் என் பேரை ரெக்கமண்ட் பண்ணார். அப்படி வந்ததுதான் ‘காதலும் கடந்து போகும்' வாய்ப்பு.

ஃப்ரெண்ட்ஸோடு சேர்ந்து ஒரு மியூஸிக் ட்ரூப்பை ஆரம்பிக்கப் போறேன். அது மூலமா நிறைய ஆல்பம்ஸ் பண்ணலாம்னு ப்ளான். கிளாஸிக்கல், வெஸ்டர்ன்னு இரண்டையும் ஓரளவு கத்துக்கிட்டிருக்கேன். ஆனா அது போதாது. இன்னும் ஆழமா கத்துக்கணும்.

இந்த மாதிரி படங்கள்ல நடிக்கணும்னு உங்களுக்கு ஏதாவது ‘விஷ் லிஸ்ட்' இருக்கா?

(கொஞ்சம் சிந்தித்துவிட்டு) நான் கமர்ஷியல் படங்களின் ரசிகை கிடையாது. ஆனா, ஒரு சில முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் கேட்கும் போது ‘மாட்டேன்'னு சொல்ல முடியாது. அவங்ககிட்ட‌ இருந்து என்னால‌ நிறைய கத்துக்க‌ முடியும் இல்லையா. அதுக்காக துக்கடா கேரக்டர்களையெல்லாம் ஒப்புக்க மாட்டேன். படத்துல‌ என்னுடைய கேரக்டர் முக்கியமானதா இருந்தா மட்டுமே ஓ.கே. சொல்வேன். கண் பார்வை, சிரிப்புனு 'பாடி லாங்குவேஜ்' மூலமா நடிப்பை வெளிப்படுத்துற வாய்ப்பிருக்கிற‌ படங்கள்ல‌ நடிக்கத்தான் ஆசை. மத்தபடி, லிஸ்ட் எல்லாம் இப்போதைக்கு இல்லை!

‘ப்ரேமம்' படத்துக்கு கேரள ஸ்டேட் அவார்ட்ஸ் ஒண்ணு கூட கிடைக்காமப் போனது சர்ச்சை ஆகியிருக்கு...

இந்த அவார்ட் கொடுக்கிற சிஸ்டமே எனக்குப் பிடிக்கலை. ஒரு விருது நிச்சயமா பலருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்கிறதுல‌ சந்தேகமில்லை. ஆனா எனக்கு அப்படியில்ல. விருதுதான் முக்கியம்னா ஜானி டெப், டிகாப்ரியோ மாதிரியான ஆளுங்க விருது வாங்குன உடனே சினிமாவுக்கு டாட்டா காமிச்சிட்டுப் போயிட்டிருந்திருக்கலாம். பட், தட் இஸ் நாட் தி கேஸ்! விருதைக் கொண்டு படங்களை மதிப்பிடக் கூடாதுங்கிறது என்னோட பாலிஸி. ‘ப்ரேமம்' படத்தை மக்கள் கொண்டாடினாங்களே. அதைவிட வேற விருது என்ன இருக்கு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x