Last Updated : 21 Dec, 2021 03:01 PM

 

Published : 21 Dec 2021 03:01 PM
Last Updated : 21 Dec 2021 03:01 PM

காவிரிக் கரையில் பூத்த அந்தி மல்லி!

ஒரே சிந்தனையோடு இருக்கும் மூன்று இளைஞர்களின் ஒத்திசைவோடு கிராமியப் பாடல் ஒன்று மலர்ந்திருக்கிறது. கண்மணி கலை, யாழ் சுமன், தஞ்சை சிகரன் மூவருமே திருச்சியில் வசிக்கிறார்கள். மூவருக்குமே இளையராஜாவின் இசையில் முகிழ்த்த பாடல்களைப் பற்றிப் பேசுவது, பாடல்களில் கையாளப்பட்டிருக்கும் இசை நுணுக்கங்களை விவாதிப்பது, சிலாகிப்பது பிடித்த விஷயம். அப்படி ஒருமுறை கண்மணி கலை ‘குயிலே கவிக்குயிலே’ பாடலின் சுவையில் கரைந்து, அதைப் போல் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று நண்பர் யாழ் சுமனிடமும் தஞ்சை சிகரனிடமும் தெரிவித்திருக்கிறார். இப்படி உருவான பாடல்தான், சுகந்தி பாடி அண்மையில் யூடியூபில் வெளியாகியிருக்கும் ‘அந்தி மல்லி பூத்திருக்கு’ பாடல்.

“‘கவிக்குயில்’ படத்தில் எஸ்.ஜானகி பாடியிருக்கும் ‘குயிலே கவிக்குயிலே’ பாடலின் மெட்டு ஆபேரி ராகத்தில் அமைந்திருக்கும். எங்களின் பாட்டுக்கு நடபைரவி ராகத்தை அடிப்படையாக வைத்து மெட்டமைத்திருக்கிறேன்" என்கிறார் இசையமைத்த யாழ் சுமன்.

‘அந்தி மல்லி பூத்திருக்கு என் அத்த மவன காணோம்

நான் ஆசையோட காத்திருக்கேன் ஆந்தபோல நாளும்

நூறுநாளு வேலையிலும் தினம் தினம் நம்ம பேச்சு

ஊருகத சொன்னாகூட நீதான என் உயிர்மூச்சு..’

தூங்காமல் காத்திருப்பதற்கு ஆந்தையை உவமையாகச் சொல்வது, நூறு நாள் வேலை திட்டம் என சக மனிதர்களின் அன்றாடப் பிரச்சினைகளையும் காதல் பாட்டில் யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் தஞ்சை சிகரன். “பாடல் எழுதியவரின் பெயரை பெரும்பாலும் பாடகர்கள் மேடையில் சொல்வதில்லை. அதனால், மண்வாசம் என்னும் பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆரம்பித்தேன். அதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மூத்த கிராமியக் கலைஞர்களைக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கிராமியக் கலைகளைக் கற்றுத்தரும் பணியையும் செய்துவருகிறேன்” என்கிறார் தஞ்சை சிகரன்.

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, சி.சத்யா, ஜேம்ஸ் வசந்தன், உதயகுமார் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார் சுகந்தி. விஜயலட்சுமியோடு பாடியிருக்கும் ரகளையான பாட்டான ‘ரெட்ட ஜடை போல நாமும் ஒன்னா திரிஞ்சோமடி..' பாடலுக்கு இசையமைத்ததும் சுகந்திதான்.

பாடல் உருவாக்கம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கும் கண்மணி கலை, விஷுவலைசர், எடிட்டர். தற்போது சவுண்ட் இன்ஜீனியரிங் முடித்து அந்தப் பணியையும் செய்துவருகிறார்.

“யாழ் சுமன் கர்னாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டிருக்கிறார். சென்னையில் சில இசைக் குழுக்களில் கீபோர்ட் வாசித்தும் வந்திருக்கிறார். தற்போது திருச்சியில் யாழ் இசைக் குழுவை நடத்துகிறார்” என்கிறார் கலை,தன் நண்பரைப் பற்றி.

பேசும்போது திக்கித் திக்கிப் பேசி னாலும் யாழ் சுமன் பாட ஆரம்பித்தால், கரைபுரண்டு ஓடும் காவிரிபோல் அவரின் ஹார்மோனியத்தில் பிரவாகமெடுக்கிறது இசை!

பாடலைக் கேட்க: https://bit.ly/3J6Nnhc

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x