Last Updated : 18 Mar, 2016 11:40 AM

 

Published : 18 Mar 2016 11:40 AM
Last Updated : 18 Mar 2016 11:40 AM

"காலத்தை ஆவணப்படுத்த கேமராதான் பெஸ்ட்!’’

“நிறைய இன்டர் காலேஜ் போட்டிகளுக்கு நான் எடுத்த போட்டோக்களை அனுப்பி இருக்கேன். ஆனால் ஒரு போட்டியில கூட பரிசு கிடைச்சதில்லை. தொடர்ந்து கையில கேமராவுடன் ஒளிப்படங்கள் எடுத்து, போட்டிகளுக்கு அனுப்பிக்கிட்டே இருந்தேன். ஆனா பாருங்க, எனக்குக் கிடைச்ச முதல் விருதே தேசிய விருது” என்று ஜாலியாகப் பேச ஆரம்பித்தார் இளம் ஒளிப்படக்கார‌ர் பிரசாந்த் சுவாமிநாதன்.

மத்திய‌ தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நடத்திய தேசிய அளவிலான ஒளிப்படப் போட்டியில் 2016ம் ஆண்டுக்கான ‘நேஷனல் அமெச்சூர் போட்டோகிராஃபி அவார்ட், ஸ்பெஷல் மென்ஷன்' எனப்படும் ‘தேசிய தன்னார்வ ஒளிப்படத்திற்கான’ விருதினைப் பெற்றுள்ளார். இவர் சென்னைக்காரர்.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் தொடர்பியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு படித்துவரும் பிராசாந்த், ‘இந்தியாவின் திருவிழாக்கள்’ என்ற தலைப்பின் கீழ் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் நடைபெற்ற ‘கூத்தாண்டவர் திருநங்கை திருவிழா’வை ஆவணப்படுத்தி எடுத்துள்ள ஒளிப்பட‌ங்களுக்காகத் தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.

"எம்.சி.சி.யில பி.காம் படிச்சிட்டிருந்தேன். செகண்ட் இயர்ல என்னையும் அறியாம போட்டோகிராஃபி மேல‌ ஆர்வம் வந்துச்சு. ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேமரா வாங்கி, போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். படிப்படியா நானே கேமராவுல நிறைய வித்தைகள் செய்யக் கத்துக்கிட்டேன். படிச்சு முடிச்சு வேலைக்குப் போய், அதுல சம்பாதிச்ச காசுல சொந்தமா ஒரு கேமராவை வாங்கி னேன். அந்த சமயத்துல, ‘போட்டோகிராஃபிதான் எனக்கான பாதை' என்று முடிவு செஞ்சேன். வேலையை விட்டுட்டு மாஸ் கம்யூனிகேஷன் படிக்க ஆரம்பிச்சேன்” என்கிறார் பிரசாந்த்.

வருடந்தோறும் கூவாகத்தில் நடைபெறும் ‘கூத்தாண்டவர் திருநங்கை திருவிழா’ பிரபலமானது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து திருநங்கைகள் இங்கே ஒன்று கூடுவார்கள். ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை ஆவணப்படுத்த உலகெங்கிலும் இருந்து பல ஒளிப்படக்காரர்கள் வருவார்கள். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கூவாகம் திருவிழாவிற்குச் சென்று ஒளிப்பட‌ங்களை ஆவணப்படுத்தியுள்ளார் பிரசாந்த்.

“கூவாகம் திருவிழாவை போட்டோ எடுத்த அனுபவத்துல‌ நிறைய கத்துக்கிட்டேன். 'சென்னை வீக்கெண்ட் க்ளிக்கர்ஸ்'னு போட்டோகிராஃபி குரூப் ஒண்ணு இருக்கு. அவங்களோட சேர்ந்து நிறைய‌ இடங்களுக்கு டிராவல் பண்ணி போட்டோஸ் எடுத்துட்டுவர்றேன். முதல் தடவை கூவாகம் போனப்போ அங்கே நடந்த நிகழ்ச்சிகளைப் படமெடுக்கும்போது மிஸ் ஆன சில பகுதிகளை எடுக்குறதுக்காக‌வே இரண்டாவது தடவை போனேன்.

அந்த‌த் திருவிழாவுல சிரிப்பு, அழுகை, ஆடல், பாடல்னு பல எமோஷன்ஸ் பார்க்க முடிஞ்சுது. திருநங்கைகள் அந்தத் திருவிழாவை அவ்வளவு அனுபவிச்சுக் கொண்டாடுவாங்க. போட்டோக்கு அழகா போஸ் கொடுப்பாங்க. சகஜமா பழகுவாங்க.

இந்தியாவுல பல திருவிழாக்கள் நடந்துக்கிட்டே இருக்கும். அதுவும் தமிழ்நாட்டுல பல விழாக்கள் இருக்கு. அது எல்லாமே நம் கலாச்சாரத்தோட பிரதிபலிப்பு. காலப் போக்குல 'மாடர்ன்' ஆயிட்டே போறோம். அந்தக் கால வேறுபாட்டை ஆவணப்படுத்துறதுலதான் எனக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. அதுக்கு போட்டோகிராஃபி பெஸ்ட் டூல்னு நினைக்கிறேன். ஏன்னா, போட்டோஸ் காலத்திற்கும் நின்று பேசும்.

அவார்ட் ஃபங்க் ஷன் டெல்லியில நடக்கப் போகுது. அப்பா அம்மாவைக் கூட்டிட்டுப் போகணும். 'கேமராவை வச்சிட்டு என்னடா பண்ற'னு அவங்க கேட்டுட்டே இருப்பாங்க. ஏதாவது சாதிக்கணும்னு சொல்லிட்டே இருப்பேன். இப்ப என் மேலே அவங்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு. போட்டோகிராஃபியில‌ இன்னும் நிறைய கத்துக்கணும், படங்கள் எடுத்துக்கிட்டே இருக்கணும்” என்று சொல்லிவிட்டு 'வ்யூ ஃபைண்டர்' மூலம் பார்க்கத் தொடங்கினார் பிரசாந்த். அது அழகான ஃப்ரேம்!

- பிரசாந்த் சுவாமிநாதன்

பிரசாந்த் எடுத்த தேசிய விருது பெற்ற புகைப்பட ஆல்பத்தை பார்க்க --> > இங்கே<-- க்ளிக் செய்யவும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x