Last Updated : 14 Dec, 2021 03:08 AM

 

Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

இணைய அடிமைகளாகும் இளைய தலைமுறை

காலையில் ஃபேஸ்புக் குட் மார்னிங்கில் கண் விழித்து நட்ட நடுராத்திரியில் வாட்ஸ் அப்பில் குட்நைட் மெசேஜைத் தட்டிவிடுவதுவரை, மொபைலிலேயே பலரும் வாழ்கிறார்கள். சில நிமிடங்களுக்கொரு முறை மொபைலை எடுத்துப் பார்க்காவிட்டால், ஏதோ நிம்மதியை இழந்ததுபோலத் தவிப்பவர்கள் பலர். குறிப்பாக இளைய தலைமுறையினர் இடையே ‘திரை அடிமைத்தனம்’ (Screen Addiction) மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறியிருக்கிறது.

இளைய தலைமுறையினரின் திரை அடிமைத்தனத்தின் ஆபத்தை விளக்கும் வகையில் சென்னை லயோலா கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் துறை முதுகலை மாணவர்கள் ‘திரை குறைப்பு’ (Screen Less) என்கிற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் திரை அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது பற்றி மாணவ, மாணவியருடன் மனநல நிபுணர்கள் கலந்துரையாடினர். கவனத்தை ஒருமுகப்படுத்த யோகா, தியானம் போன்றவற்றிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு நாள் நிகழ்ச்சி முழுவதும் மாணவ, மாணவியரிடமிருந்து மொபைல் போன்கள் வாங்கி வைக்கப்பட்டன. அன்றைய தினம் முழுவதும் மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலேயே கவனத்தைச் செலுத்தினர். ‘திரை குறைப்பு’ நிகழ்ச்சியின் ஹைலைட்டாக, ‘இணைய அடிமைத்தனம்’ குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. தென் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆய்வில் பங்கேற்றனர். 15 முதல் 19 வயதுக்குட்பட்ட இவர்களில், 800 பேர் இணைய அடிமைத்தனத்தில் மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்தது. அதாவது, இவர்கள் தினந்தோறும் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இணையத்தில் புழங்குவதும், தினமும் 2 ஜிபி டேட்டா கார்டு பயன்படுத்துவதும் தெரியவந்தது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் இணையம் இல்லாமல் ஒருமணி நேரம்கூட இருக்க முடியாது என்று 13.3 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 68 சதவீதத்தினர் வாட்ஸ் அப்பைத் தினமும் இரண்டு மணி நேரம் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். 72 சதவீதத்தினர் வீடியோ கேம்ஸில் மூன்று மணி நேரத்துக்கு மேல் மூழ்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். 88.7 சதவீதத்தினர் யூடியூபில் 1-3 மணி நேரம் இருப்பதாகவும், 67.7 சதவீதத்தினர் ஓடிடி தளத்திலும், 30 சதவீதத்தினர் வயது வந்தோருக்கான இணையதளங்களில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இந்த ஆய்வை நடத்திய விஷுவல் கம்யூனிகேசன் துறை ஒருங்கிணைப்பாளர் பி. நித்யா கூறுகையில், “கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்தும்கூட உடன் படித்த சில மாணவ, மாணவியரின் பெயர்கூடத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மொபைலிலேயே மூழ்கிக்கிடக்கிறேன் என்று ஒரு மாணவர் சொன்னார். பலரும் பள்ளி வாழ்க்கையில் இதுபோன்ற கவனச் சிதறல் இல்லாமல் இருந்தோம் என்றே சொல்லியிருக்கிறார்கள். கல்லூரிக்கு வந்த பிறகுதான் இணைய அடிமைத்தனம் தொடங்குகிறது. எனவே, பள்ளியிலேயே இது தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x