Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM
உலக பெரும் பணக்காரர்களான எலான் மஸ்க், ஜெஃப் பேசோஸ் பூமியில் தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களில் இருந்து ஈட்டிய பணத்தை விண்வெளி தொழில்நுட்ப முயற்சிகளுக்கு செலவிடுவது ஒருபுறம் போற்றப்படுகிறது. மறுபுறம் தூற்றப்படுவதையும் பார்க்கமுடிகிறது. போற்றுபவர்கள் பொதுவாகத் தொழில்நுட்ப வளர்ச்சியை எதுவாக இருந்தாலும் அதை கண்மூடி வரவேற்பவர்கள். ‘ Early adopter’ என்றழைக்கப்படும் இவர்களை புத்தாக்கப் பயணத்தில் (Innovation Lifecycle) முதல் இடத்தில் வைக்கலாம். தூற்றுபவர்களின் முக்கிய குற்றச்சாட்டு - நாம் வாழும் பூமியில் பசிப்பிணியில் இருந்து பருவநிலை மாற்றங்கள் வரை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அதிகம். அவற்றை விட்டுவிட்டு ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு செல்லும் ஆராய்ச்சிகளுக்காகப் பணத்தை செலவிடுவது முறையல்ல.
மேலோட்டமாகப் பார்த்தால், அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகவே தெரியலாம். காரணம், மீடியாக்களில் சமீபத்தில் வெளிவந்தபடி இருக்கும் விண்வெளி நிகழ்வுகள் கேளிக்கை சார்ந்ததாக இருப்பதால் வெளியில் இருந்து பார்க்கையில் அப்படி தோன்றக் கூடும். உதாரணத்திற்கு, ஜெஃப் பேசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தங்களது ராக்கெட்டுகளில் ஆட்களை ஏற்றிக் கொண்டு நூறு கிலோமீட்டருக்கு சற்று அதிகம் பயணித்து திரும்பி வரும் நேரம் - பத்து நிமிடங்கள். மூன்று நிமிடங்கள் மட்டுமே புவியீர்ப்பு விசையில் எல்லையைத்தாண்டிய அனுபவம் கிடைக்கும் அந்தப் பயணத்திற்கு கோடிக்கணக்கில் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் நிறுவனமும் இதுபோலவே விண்வெளி பயணத்திற்கு ஒத்திகைகள் பார்த்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைய இணைப்புகளை பூமியில் கொடுக்க உதவும் துணைக்கோள் உபகரணங்களை விண்ணில் தூவிவிடும் ராக்கெட்டுகளையும், நானூறு கிலோமீட்டர் தூரத்தில் மிதந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) ஆராய்ச்சியாளர்களை கொண்டு சென்று விட்டு விட்டு, பணி முடித்தவர்களை மீண்டும் பூமிக்கு திருப்பி கொண்டு வரும் ராக்கெட்டுகளையும் இயக்குகிறது.
நிற்க!
விண்வெளி ஆராய்ச்சிகளால் பல்வேறு நீண்டகால பயன்கள் உண்டு என்ற அணியின் ஆதரவாளன் நான். அதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றை இந்த வார கட்டுரையில் கதைக்கலாம். கதையைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அடிப்படைகளை பார்த்துவிடலாம். சூரியனைச் சுற்றி வரும் மூன்றாம் கல்லாக இருக்கும் பூமியை கோள் என அழைக்கிறோம். பூமியுடன் சேர்த்து எட்டு கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன (2006-இல் கோள் அந்தஸ்தை இழந்த ப்ளூட்டோ பற்றி மற்றொரு வாரத்தில் பார்க்கலாம்). கோள்களுக்கு அப்பால், இன்னும் இரண்டு வகையான விண் பொருட்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஒன்று Asteroids எனப்படும் சிறுகோள்கள். மற்றது Comets எனப்படும் வால் நட்சத்திரங்கள். சிறுகோள்கள் பொதுவாக உலோகங்கள் நிறைந்த வறட்டுப் பாறைகளால் ஆனவை; வால் நட்சத்திரங்கள் பனியால் மூடப்பட்ட பாறைகள். அவற்றிற்குப் பின்னிருக்கும் தூசுபடலமே ‘வால்" என அறியப்படுகிறது.
துணைக்கோள்களில் இருந்து வரும் சிறு துண்டுகள் பூமியின் வளிமண்டலத்திற்குக்குள் நுழைகையில் அங்கிருக்கும் ஆக்சிஜன் காரணமாக எரிந்து போய்விடுவதுண்டு. நம் கண்ணுக்கு பார்க்க முடிகிற தொலைவில் நடக்கிற இந்த நிகழ்வை எரிகல் பொழிவு (Meteor Shower) என அழைக்கிறார்கள். முழுமையாக எரியாமல், சில தருணங்களில் பூமியை வந்தடைகிற விண்கற்கள் பொதுவாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சமீபத்திய வரலாற்றில் சொல்லக்கூடிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திய விண்கல் நிகழ்வு சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவின் டன்ஸ்க்கா நதிக்கரையில் நடந்தது. நேரடியாக இறப்பு என்பது மிகக்குறைவு என்றாலும், விண்கல் பூமியின் மோதிய வேகத்தில் நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை ஏற்பட்ட அதிர்வுகளால் பலத்த சேதம் ஏற்பட்டது.
இதுவரை எண்ணப்பட்டிருக்கும் கிட்டத்தட்ட நான்காயிரம் வால்நட்சத்திரங்களின் சுற்றளவு பத்து கிலோமீட்டர்கள். சிறுகோள்களின் அளவுகளில் பெருத்த வித்தியாசம் உண்டு.
பத்து மீட்டரில் இருந்து ஐநூறு கிலோமீட்டருக்கும் அதிகமாக சுற்றளவு கொண்ட சிறுகோள்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். இதுவரை பதினோறு லட்சத்திற்கும் மேலான சிறுகோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. கோள்கள் போலல்லாமல் வால்நட்சத்திரங்களும், சிறுகோள்களும் சூரியனை சீராக சுற்றுவதில்லை. இதன் காரணமாக, இவற்றில் ஏதாவது ஒன்று நேரடியாக பாதை மாறி பூமியின் மீது வந்து இடித்துவிடுமோ என்ற அச்சம் விண் ஆராய்ச்சியாளர்களுக்கு உண்டு. எண்ணிக்கையில் அதிகம் என்பதால், சிறுகோள் ஒன்றினால் நிகழும் இடிப்பின் சாத்தியமே அதிகம் என்பதால், ஆராய்ச்சி முயற்சிகள் அதன் மீது அதிக அளவு இருப்பதில் ஆச்சரியமில்லை.
2021 மே மாதத்தில் சிறுகோள் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் நிகழ்வு நடந்தது. இருபத்தியெட்டு கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் பென்னு (Bennu) என்ற துணைக்கோளில் மேற்பரப்பில் இருக்கும் மண்/கல் மாதிரிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறது நாசாவின் விண்கலம். ‘Osiris-Rex’ எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம் பூமிக்கு வந்து சேர இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும். தான் சேகரித்திருக்கும் மணல் இத்யாதியைக் கொண்ட பொட்டலத்தை பூமிக்கருகில் வந்து போட்டுவிட, அந்தப் பொட்டலம் 2023 செப்டம்பர் 23 அன்று பூமியில் வந்துவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பொட்டலத்தில் இருக்கும் பொருட்கள் சிறுகோள்களைப் பற்றி தெரிந்து கொள்ள பெரிதும் உதவும் என்பதால், உற்சாக எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள் நாசாவின் விண் ஆராய்ச்சியாளர்கள்.
சிறுகோள்களைப் பற்றி இவ்வளவு மெனெக்கிட வேண்டுமா என்ற கேள்வி மனதில் தோன்றலாம். பதில் - ஆம். மேற்கண்ட பென்னு, பூமிக்கருகில் இருக்கும் சிறுகோள்கள் (Near-Earth Asteroids-NEA) என வரையறுக்கப்படும் சிறுகோள் பிரிவைச் சார்ந்தது. பென்னு இலேசாக தனது சுற்றுப்பாதையில் இருந்து விலகினால், 2175ல் இருந்து 2199 வருடத்திற்குள் அது பூமியில் வந்து இடிக்கும் பேராபத்து இருக்கிறது எனக் கணக்கிடுகிறார்கள். இதன் சாத்தியக்கூறு மூன்றாயிரத்தில் ஒன்று என்று இருப்பதால், இது போன்ற நிகழ்வுகளுக்கு இப்போதிருந்தே திட்டமிடுவது அவசியம்.
சரி, தனது சுற்றுப்பாதையில் இருந்து சிறுகோள் விலகி பூமியின் சுற்றுப் பாதையில் வந்து இடிக்கப்போகிறது என தெளிவாகிவிட்டால் என்ன செய்வது? நம் விதி அவ்வளவுதான் என அமைதியாக இருந்துவிட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான நம்பிக்கை ஊட்டும் பதில்களில் விண் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த முயற்சிகளில் ஒன்று சென்ற வாரம் நடந்திருக்கிறது.
“டிமோர்போஸ் சிறுகோளே - இதோ நாங்கள் வருகிறோம்" (Asteroid Dimorphos: we’re coming for you!) என சென்ற வாரத்தில் நாசா நிறுவனம் இட்டிருந்த ட்வீட் கவனத்தை ஈர்த்தது. என்ன நடக்கிறது என்பதை துருவிப் பார்த்தேன். தனது சுற்றுப்பாதையில் இருக்கும் சிறுகோள் ஒன்றின்மீது வேகமாக ராக்கெட் கொண்டு இடித்து அதன் பாதையை சற்றே மாற்றிவிட முடியுமா என்பதை கண்டறியும் “சிறுகோள் திசை திருப்பும் தொழில்நுட்பம்" (Asteroid Deflecting Technology) தியரி என்ற அளவில் மட்டுமே இதுவரை இருந்து வந்தது. அதை நேரடியாக முயற்சித்து செயல்வடிவம் கொடுக்கப் போகிறார்கள்.
‘DART’ எனப் பெயரிடப்பட்ட விண்கலம் ஒரு கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் டிமோர்போஸ் சிறுகோளை நோக்கிச் செலுத்தப்படும். 160 மீட்டர் மட்டுமே சுற்றளவு கொண்ட இந்தச் சிறுகோளுக்கு 35 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் போது, இரண்டு சாட்டிலைட்டுகளை ஏவி விட்டு விண்கலம் பலமாக சிறுகோளை இடித்து அதன் சுற்றுப்பாதையை மாற்ற முயற்சிக்கும். ஏவப்பட்ட சாட்டிலைட்டுகள் விண்கலத்தின் முயற்சியை படமெடுத்து பூமிக்கு அனுப்பிவிடும்.
இந்த முயற்சி வெற்றியடைந்தால், சிறுகோள்கள் பூமியைத் தாக்கும் முயற்சி என்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் சாத்தியமாகும். இந்த முயற்சியை பற்றிய அதிக விபரங்களை DARTMission ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் தொடர்ந்து பாருங்கள்.
இத்தொடருக்கான பிரத்யேக முகநூல் பக்கம் - https://www.facebook.com/LetsTalkSTEM . அதில் இணைந்து கொண்டு, தொடர் பற்றிய பின்னூட்டங்களையும், எந்த டாப்பிக்குகளை அலச வேண்டும் என்பதையும் கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள். +1 (628) 240-4194 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் அனுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT