Published : 25 Mar 2016 11:26 AM
Last Updated : 25 Mar 2016 11:26 AM
இந்தியாவில் காமிக்ஸ் கதைகளின் வரலாறு 60 ஆண்டுகளுக்கு முன் தொடங்குகிறது. இதில் அந்தக் கால ராஜ்கபூர் முதல் இப்போதைய அனுபம் சின்ஹா வரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காமிக்ஸ்களை மையமாகக் கொண்டு ஒன்றிரண்டு திரைப்படங்களை எடுத்திருக்கிறார்கள். ஆனால், இப்போதுவரை இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஒரு காமிக்ஸ் கதை, திரைப்படமாக வந்ததே இல்லை. திரைப்படமாக எடுக்கப்பட்டவை, வெளிநாட்டு காமிக்ஸ் கதைகள்தான்.
இந்தப் பின்னணியில்தான் ஒரு இந்திய காமிக்ஸ் கதை திரைப்படமாக எடுக்கப்பட சமீபத்தில் ஒப்பந்தம் போடப்பட்டபோது, அது இந்திய காமிக்ஸ் உலகின் திருப்புமுனையாகக் கருதப்பட்டது. அந்த காமிக்ஸ் கதையை வழங்கியவர் வேறு யாருமில்லை, நடிகர் கமல்ஹாசனின் உறவினர் என்பதுதான் இதில் விசேஷம்.
கேரவன்
14 ஆண்டுகளுக்கு முன்பு, மணற்புயல் வீசிய ஓர் இரவில், ராஜஸ்தானின் பாலைவன கிராமத்தில் கதை ஆரம்பிக்கிறது. ஆசிஃப் என்ற சிறுவனின் கிராமத்துக்கு வரும் பைரவி என்ற பேரழகியின் நடமாடும் சர்க்கஸ், ஆடல், பாடல் நிகழ்ச்சி மூலம் மக்களை மகிழ்விக்கிறது. ஆனால், அவர்கள் உண்மையிலேயே ரத்தக் காட்டேரிகள் என்ற உண்மை தெரிய வரும்போது, ஆசிஃப் மட்டும் தப்பிப் பிழைக்கிறான்.
நிகழ்காலத்தில் ஆசிஃப் பாகிஸ்தானுக்கு திருட்டு டி.வி.டி.களை கடத்தும் ஒரு இளைஞன். ஒரு தீவிரவாதியைத் தேடிவரும் போலீஸ் அதிகாரி ஜெய், இவனை தற்செயலாக கைது செய்ய, அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். அப்போது வாகனம் பழுதடைய, ஜெய்சால்மரின் ஒரு கோட்டையில் இரவில் தங்குகிறார்கள். சகோதரனின் மரணத்துக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறியுடன் இருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையதிகாரி பைரோன் சிங் இவர்களை சிறையிலடைக்கிறார். அவரது சகோதரி மகள் துர்கா இவர்களைக் காப்பாற்ற நினைக்கிறாள். அன்றிரவு பைரவியின் நடமாடும் சர்க்கஸ் குழு வர, அவர்கள் ரத்தக் காட்டேரிகள் என்று ஆசிஃப் சொல்வதை யாருமே நம்ப மறுக்கிறார்கள். அதன் பின்னர் கோபம், துரோகம், அன்பு, காதல், சாகசம் மற்றும் தியாகம் என்று பல உணர்ச்சிகளை ஒன்றாக வெளிப்படுத்தும் ஒரு கமர்ஷியல் கதையாக கேரவன் உருவெடுக்கிறது.
அஸ்வின் ஸ்ரீவத்சங்கம்
கமல்ஹாசனின் உறவினரான அஸ்வினின் தந்தை ஒரு விஞ்ஞானி. அஸ்வின் அயல்நாட்டில் பிறந்தாலும், அவரது பள்ளிப் பருவம் சென்னையில்தான் கழிந்தது. சிறுவயதிலேயே ஓவியங்கள் மீது ஆர்வம் கொண்ட அஸ்வின், படிப்பை முடித்துவிட்டுச் சிறிது காலம் சென்னையிலேயே ஒரு விளம்பர நிறுவனத்தில் கிராபிஃக் டிசைனராகப் பணிபுரிந்தார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர், அங்கேயே செட்டிலாகிவிட்டார். ஆனால், காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்கள் மீதான அவருடைய காதல் மட்டும் குறையவே இல்லை.
இந்தியாவில் வெளியாகும் காமிக்ஸ் கதைகள் பெரும்பாலும் இதிகாசங்களைச் சார்ந்தே இருப்பதைக் கண்ட அஸ்வின் அதை கவனமாகத் தவிர்த்து, புதிய பாணி கதைகளைச் சொல்ல விரும்பினார்.
அமெரிக்காவிலிருந்து அஸ்வின் கதையை எழுதினார், சென்னையைச் சேர்ந்த அஷோக் ராஜகோபாலன் இணை ஆசிரியராக இருக்க, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஓவியரின் கைவண்ணத்தில் The Dynast என்ற முதல் கிராஃபிக் நாவலை வெளியிட்டார். ஆர்டிக் பிரதேசத்தில் நடக்கும் அந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு.
இதன் பிறகு தமிழ் மற்றும் இந்திய மண் சார்ந்த கதைகளை கிராஃபிக் நாவல் வடிவில் வெளியிட விரும்பிய அஸ்வின், ‘யாளி ட்ரீம்ஸ்’ என்ற பதிப்பகத்தை ஆரம்பித்தார். யாளி என்பது தமிழ்ப் பெயர். அவரது முதல் சூப்பர் ஹீரோவின் பெயர் என்ன தெரியுமா? சூரியன் என்ற சூப்பர் ஹீரோ. ஆனால், அது சிந்தனையாக இருக்கிறதே தவிர, இன்னமும் புத்தகமாக வெளிவரவில்லை. இந்தச் சூழலில்தான் முகநூலில் ஷமிக் தாஸ்குப்தாவுக்கு நண்பரானார் அஸ்வின்.
ஷமிக் தாஸ்குப்தா
கொல்கத்தாவைச் சேர்ந்த ஷமிக் ஒரு பிரபல காமிக்ஸ் கதாசிரியர். கேரவன் கதையைச் சில பதிப்பகங்களிடம் விவாதிக்க, அனைவருமே அதை நிராகரித்துவிட்டார்கள். இந்திய காமிக்ஸ் கதைகளை வெளியிட உள்ளதை அறிந்துகொண்டு, கேரவனைப் பற்றி அஸ்வினிடம் சொன்னார் ஷமிக். தொடர்ந்து ஒடிஷாவைச் சேர்ந்த பிகாஷ் சத்பதி (ஓவியம்), சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் மனோகரன் (வண்ணம்), மும்பையைச் சேர்ந்த தசீன் ஷேக் (எழுத்துரு) என்று ஒரு அட்டகாசமான கூட்டணி உருவானது.
ஷமிக், அஸ்வின்
முதல் வெற்றி
2012-ம் ஆண்டு பெங்களூரு காமிக்-கானில் கேரவன் வெளியிடப்பட்டது. இளைஞர்களுக்கான கதை என்பதை அட்டையிலேயே தெளிவாக அச்சிட்டிருந்தார் அஸ்வின். கேரவனின் அட்டகாசமான வெற்றி, இந்தி மொழிபெயர்ப்புக்கு வழிவகுத்தது. இதே வரிசையில் ‘கேரவன் Blood War' என்ற பெயரில் 1970-களில் நடக்கும் கதையாக நான்கு பாகக் கதையாக 2014 -2015-ல் வந்த தொடரும் வெற்றியடைய, இந்த ஆண்டு நவம்பரில் இதே தொடரின் அடுத்த கதைவரிசை வெளியாக உள்ளது. அடுத்ததாக ‘ரக்ஷக்' (தமிழில் ரட்சகன்) என்ற பெயரில் ஆங்கிலம், இந்தி, தமிழில் வெளியாக இருக்கும் ஒரு இந்திய சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்த இருக்கிறார் அஸ்வின்.
கேரவன் கதையைத் திரைப்படமாக எடுக்க ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம், அஸ்வினுடன் இம்மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகும். கேரவனின் கதாபாத்திரங்களுக்கு யாரைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு, இப்போதைக்கு அது இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் முடிவு என்றாலும், இந்தி மற்றும் தமிழ் மொழிக்கு நான் விரும்பும் நடிகர்கள் இவர்கள்தான் என்று அஸ்வின் ஒரு பட்டியல் வைத்துள்ளார். அது: ஆசிஃப் (ரன்பீர் கபூர் / தனுஷ்), ஜெய் (அர்ஜுன் ராம்பால்) மற்றும் பைரோன் சிங் (சஞ்சய் தத் / சரத் குமார்) என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.
கேரவனின் வெற்றியைத் திரைப்பட வடிவில் காண, இந்திய காமிக்ஸ் உலகம் நிஜமாகவே காத்துக்கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர், பதிப்பாளர்.
தொடர்புக்கு: prince.viswa@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT