Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM
அறிவியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதில் தமிழ் வாசகர்களுக்கு இருக்கும் அதீத ஆர்வம் எனக்கு எப்போதும் ஆச்சரியம் தரும். நம் அடிப்படைக் கல்வியில் அறிவியல்வழிச் சிந்தனை சிறுவயதிலேயே ஆரம்பித்துவிடுவது, இந்த ஆர்வத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கரோனா பெருந்தொற்று அறிவியல் ஆர்வத்தைப் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
வைரஸ் என்றால் என்ன, அது எப்படி உடலின் செல்களுக்குள் ஊடுருவி கிடுகிடுவெனப் பரவுகிறது. அதை எதிர்கொள்ளும் தடுப்பூசி எப்படி இயங்குகிறது என்பது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்திருப்பதில் வியப்பில்லை. அதோடு மின்வாகனங்களின் இயக்கம், சூழலியல், நரம்பியலைச் சார்ந்து உருவாக்கப்பட்டு வளர்ந்துவரும் கணினித்துறை ஆகியவற்றைச் சார்ந்து தென்படும் ஆர்வத்தையும் பார்க்க முடிகிறது. அந்த ஆர்வத்திற்குத் தீனி போட வேண்டும் என்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம். வாசகர்களுடன் சேர்ந்து பயணிப்பதே இந்தத் தொடரின் திட்டம்.
ஸ்டெம் (STEM) என்கிற பதத்தால் அழைக்கப்படும் அறிவியல் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), கணிதம் (Maths) என்கிற பரந்துபட்ட துறைகளில் இந்தத் தொடர் பயணிக்கப்போகிறது. இந்த வாரத்தின் முக்கிய அறிவியல் தொழில்நுட்ப நிகழ்வை முதலில் பார்ப்போம். இது பரிசோதனை கூடத்திலோ தொழிற்சாலையிலோ நிகழவில்லை; மாறாக நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் எலிசபெத் ஹோம்ஸ். விரல் நுனியில் சுருக்கென ஊசியைக் குத்தி வரும் ரத்தத்துளியை ஆராய்வதன் மூலம், உங்களுக்குத் தற்போது இருக்கும், வரப்போகும் நோய்களையும் சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லி பிரபலமானவர் எலிசபெத். தெரானோஸ் (Theranos) என்பது அவரது நிறுவனத்தின் பெயர், Therapy (சிகிச்சை), Diagnostics (நோய் கண்டறியும் முறை) என்கிற இரண்டு வார்த்தைகளின் புத்திசாலித்தன இணைப்பு இது. பிரச்சினை என்னவென்றால், அப்படிப்பட்ட தொழில்நுட்பம் சாத்தியமேயில்லை.
அவர் இழைத்த குற்றத்தைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் - முதலீடாக வந்த கோடிக்கணக்கான டாலர்களை முழுங்கிவிட்டு, அவர் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறும் தொழில்நுட்பம் வெறும் காலி பெருங்காய டப்பா என்று வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் இதழ் புலனாய்வு செய்து வெளியிட்டுள்ளது (https://www.wsj.com/articles/theranos-has-struggled-with-blood-tests-1444881901). இது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழாளர் ஜான் கர்ரேயு தொடர்ந்து எழுதிவருகிறார். ‘Bad Blood’ என்கிற நூலையும் எழுதியுள்ளார். வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் இருந்தபடி அவர் செய்யும் ட்வீட்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்: https://twitter.com/johncarreyrou. எலிசபெத் மீது வழக்குத் தொடரப்பட்டு, தனது தரப்பு நியாயங்களை அவர் விவரித்துக் கொண்டிருக்கிறார்.
தெரானோஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படை அறிவியல், அது ஏன் தோல்வியடைந்தது உள்ளிட்ட முழு விவரங்கள்:
ஓய்வே இல்லாமல் தொடர்ந்து ஓடியபடி இருக்கும் ரத்தம் சராசரி மனித உடல் எடையில் கிட்டத்தட்ட பத்து சதவீதம். நான்கரை முதல் ஐந்தரை லிட்டர் வரை உடலில் இருக்கும் ரத்தம், நாளங்களின் வழியாக செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் வாகனம். ஒரு பவுன் தங்கக் காசுக்கு நிகராக தமிழ் சினிமா பாடல் சொல்லும் ஒரு துளி ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்தால், அதில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டையாக வடிவில் இருக்கும் ப்ளேட்லெட்டுகள் என இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் ப்ளாஸ்மா என்ற திரவம் என நான்கு கூறுகள் இருப்பது தெரியும். இந்த நான்கும் நவீன மருத்துவத்தில் பிணி அறியவும், தீர்க்கவும் பெரும் உதவி செய்கின்றன.
என்ன விதமான நோய் இருக்கிறது என்பதை அறிய அதற்கு தகுந்த பரிசோதனை செய்ய வேண்டியதும், அந்தப் பரிசோதனைக்குத் தேவையான அளவில் ரத்தத்தைப் பயன்படுத்த வேண்டியதும் அவசியம். உதாரணத்திற்கு, ரத்த செல்களில் தற்சமயம் இருக்கும் குளுக்கோஸ் அளவை அறிந்துகொள்ள விரும்பினால், விரல் நுனி துளி ரத்தம் போதும். ஆனால், தொடர்ந்து உடலில் குளுக்கோஸ் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய A1C என்ற ஹீமோகுளோபினை அளக்க வேண்டும்.
கடந்த மூன்று மாதங்களில் உங்கள் ரத்தத்தில் இருந்த குளுக்கோஸின் சராசரி அளவை ஒரு கணினி கணக்கிடுவது போல துல்லியமாக A1C கொடுக்கும். இந்தப் பரிசோதனையைச் செய்ய தேவையான ரத்தத்தின் அளவு சற்று அதிகம் என்பதால், ரத்த நாளத்தில் இருந்து ஊசி வைத்து எடுத்தாக வேண்டும். ரத்தப் பரிசோதனை என்பது அடிப்படையில் வேதியியல் மாற்ற அளவீடு. சில அளவீடுகளைத் தவிர, இந்தப் பரிசோதனை செய்ய, படுசுத்தமான இடத்தில் நிறுவப்பட்ட சிக்கலான இயந்திரங்கள் தேவை.
எலிசபெத் ஹோல்ம்ஸின் கனவு பிரம்மாண்டமானது. மருத்துவராக இருந்த அவரது தாத்தாவின் பணியைக் கூர்மையாகப் பார்த்தபடி வளர்ந்த எலிசபெத் புகழ்பெற்ற ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் படிக்க ஆரம்பித்தார். கல்வியைக் கனவு ஆக்கிரமிக்க, படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தெரானோஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பிரபல முதலீட்டாளர்கள் சிலர் நிறுவனம் தொடங்கத் தேவையான விதை முதலீட்டை (Seed Investment) அளிக்க, அவர்களை கைகாட்டி மற்றவர்களின் முதலீடுகளையும் பெற்றுக் கொண்டார். வணிகப் பணிகளுக்கென இருந்த கணினியை எப்படி பில் கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் மூலமாக வீடுகளுக்குள் கொண்டு வந்தாரோ, அதுபோல ரத்தப் பரிசோதனை செய்யும் உபகரணம் ஒன்றைத் தயாரித்துக் காட்டி அதை அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது எலிசபெத்தின் தெரானோஸ் கனவு.
ரத்தப் பரிசோதனை அறிவியலில் அடிப்படைகளை முழுக்கப் புரிந்து கொள்ளாமல், நேரடியாக அதன் மேல் கட்டப்படும் தொழில்நுட்பத்திற்குள் குதித்தது தெரானோஸ். நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை ஒரு விரல் நுனி துளி ரத்தத்தால் கண்டறிகிறோம் என்றும் சொன்னது தெரானோஸ். ‘இது சாத்தியமேயில்லை’ எனச் சொல்ல முற்பட்ட துறை சார் அறிஞர்களின் குரல்கள் வெளிவர முடியாதபடி புகழ் வெளிச்சம் தெரானோஸின் மீது வீசப்பட்டது.
முதலீட்டாளர்கள் உதவியுடன் தெரானோஸ் மற்றும் எலிசபெத் பற்றிய பெரும் பிம்பம் கட்டப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பின்னர் வந்த தொழில்நுட்ப வணிக மேதை எனப் புகழாரம் சூட்டப்பட்டது. தெரானோஸின் மதிப்பீடு உயர்ந்துகொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் எலிசபெத்தின் மதிப்பு நான்கரை பில்லியன் டாலர்களானது. உலகில் சுயமாக உருவாகிய இளம்பெண் பில்லியனர் என சிலாகித்தது ஃபார்ஷூன் இதழ்.
ஆனால், அறிவியலுக்கு எதிராகக் கண்ட கனவை தெரானோஸால் நிறைவேற்ற முடியவில்லை. மாடலாக செய்யப்பட்ட உபகரணங்களை வைத்து செய்த பரிசோதனைகள் படு தோல்வியில் முடிந்தது, கசிய ஆரம்பிக்க, மீடியாவின் கவனம் வேறு திசையில் திரும்பியது. குறிப்பாக, வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழில் பணிபுரியும் ஜான் கரேர்யூ புலனாய்வு பத்திரிகையாளராக விவரங்களைத் திரட்டி தெரானோஸ் பற்றிய உண்மையை வெளியிட சீட்டுக்கட்டில் கட்டிய கோபுரமாகச் சரிந்து விழுந்தது தெரானோஸ். எலிசபெத் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்ற வாரத்தில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியிருக்கிறது.
“This CEO is out for blood” - ஃபார்ஷூன் இதழ் வெளியிட்ட கட்டுரை - https://fortune.com/2014/06/12/theranos-blood-holmes/
“Hot startup Theranos has struggled with its blood test technology” - வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட முதல் புலனாய்வுக் கட்டுரை. https://www.wsj.com/articles/theranos-has-struggled-with-blood-tests-1444881901
கட்டுரை வெளிவந்த அதே நாளில் தொலைக்காட்சி பேட்டியில் எலிசபெத் - https://www.youtube.com/watch?v=rGfaJZAdfNE - “மாற்றங்களைக் கொண்டுவர நினைக்கையில் பைத்தியம் என்பார்கள், பின்னர் தடுத்து சண்டை போடுவார்கள்.. ஆனால், திடீரென அனைத்தும் விலகி நீங்கள் உலகை மாற்றிவிடுவீர்கள்” என்கிறார் எலிசபெத் அந்தக் காணொலியில்.
“Bad Blood” - ஜாண் கரேர்யூவின் நூல். https://www.amazon.com/Bad-Blood-Secrets-Silicon-Startup/dp/152473165X . வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் இருந்தபடி அவர் செய்யும் ட்வீட்டுகளைப் பார்க்க, https://twitter.com/johncarreyrou செல்லவும்.
இந்தத் தொடருக்கான முகநூல் பக்கத்தில் உங்களது கேள்விகளை, நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புபவற்றைப் பற்றியும் பதிவு செய்யலாம்: https://www.facebook.com/LetsTalkSTEM/
வாட்ஸ் அப் மூலமாக 1-628-240-4194 என்ற எண்ணுக்கும் அனுப்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT